Thursday, July 28, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 18-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 31 -07-2021- ஞாயிற்றுக்கிழமை

 


முதல் வாசகம்: சபை உரையாளர் 1:2, 2:21-23
இரண்டாம் வாசகம்: கொலோசையர் 3:1-5, 9-11
நற்செய்தி: லூக்கா 12:13-21

நமது பற்று எங்கே?
(பற்றற்ற, பகிரும் & பரலோக வாழ்வு)

அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது அவன் ஆசை, அதற்காக மிகவும் முயற்சித்து ஒரு சிறிய கடையை ஆரம்பித்தான். தனது நேரம் முழுவதும் அந்தக் கடையிலிருந்து பணம் சம்பாதிப்பதற்காகவே செலவழித்தான். ஒரு நாள் திடீரென்று அவனுக்கு உடல்நிலை சரியில்லை, அவனைச் சுற்றி குடும்பமே இருந்தது. கண்விழித்து மிகவும் கஷ்டப்பட்டு பொறுமையாக வாயை திறந்து, என்னுடைய மனைவி எங்கே? என்று கேட்டான், அவனது மனைவியோ இதோ இங்கே இருக்கிறேன் என்றாள். உடனடியாக என்னுடைய பிள்ளைகள் எங்கே? என்று கேட்டான், இதோ இங்கு இருக்கிறோம் அப்பா என்றார்கள். என்னுடைய தம்பி எங்கே? என்று கேட்டான், இதோ இங்கே இருக்கிறேன் அண்ணா, கவலைப்படாதீர்கள் எல்லோரும் உம்மை சுற்றி தான் இருக்கிறோம் என்று கூறினான். அதற்கு அவனோ அப்படியென்றால் கடையில் யாரும் இல்லையா! இன்றைக்கு வியாபாரம் நடக்காதா! பணம் கிடைக்காதா! என்று கேட்டானாம்.
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும், பணம் பத்தும் செய்யும், பணம் பந்தியிலே குணம் குப்பையிலே, பணம் குலமாகும் பசி கறியாகும் என எண்ணற்ற பழமொழிகள் பணத்தின் மீது இவ்வுலகிற்கு இருக்கும் ஆசையை எடுத்துரைக்கிறது. "செல்வம் எப்போதும் நிலைத்திராது; சொத்து தலைமுறை தலைமுறையாக நீடித்திருப்பதில்லை" (நீதிமொழிகள் 27:24) என்னும் இறைவார்த்தைக்கேற்ப
பணம் தான் எல்லாமென்று இன்று மனித வாழ்வு பயணித்துக் கொண்டிருக்கிறது. நிலையற்ற பணத்தின் மீது ஆசை கொள்ளாமல் நிலையான இறைவனில் இணைந்திருக்க இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு அழைப்புத் தருகிறது.

1. பற்றற்ற வாழ்வு

2. பகிரும் வாழ்வு
3. பரலோக வாழ்வு

என இத்தகைய மூன்று விதமான அழைப்புகளுக்கு ஏற்றவாறு நமது கிறிஸ்தவ வாழ்வை அமைத்து கொள்ள அழைப்பு பெறுகின்றோம்.

1. பற்றற்ற வாழ்வு
இன்றைய முதல் வாசகத்தில் "வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்." (சபை உரையாளர் 1:2) ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே (சபை உரையாளர் 2:21). ஆக நாம் ஆசைப்பட்டு சேர்க்கின்ற பணமும் மற்றும் சொத்தும் நம்முடன் இறுதிவரை வருவதில்லை, எனவே நிலையற்றவையின் மீது பற்று கொண்டு வாழ்வது பயனற்றதாகும். அள்ள அள்ள குறையாதது அட்சய பாத்திரம் என்று சொல்வார்கள், அதுபோல போட போட நிரம்பாதது தான் பேராசை. இதுதான் நம்மை பணம், பொருள், பதவி மற்றும் பட்டம் என அனைத்தின் பின்னும் ஓட தூண்டுகிறது , நம் மன நிம்மதியை சீர்குலைத்து, உறவுகளை அழிக்க செய்கிறது. எனவே பணம் மற்றும் பொருட்களின் மீது பற்றற்ற வாழ்வை வாழ்வோம். ஊதாரி மைந்தன் உவமையில் இளைய மகன் தந்தையை நோக்கி, "அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்" (லூக்கா 15:12) என்று கேட்டது சொத்தின் மீது அவன் கொண்ட பற்றினை காட்டுகிறது. ஆனால் அப்பற்று அவனுக்கு இறுதி வரை கைகொடுக்கவில்லை. இதைத் தான் "மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?" (மத்தேயு 16:26) என்கிறார் இறைமகன் இயேசு. எனவே “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” (லூக்கா 12:15) என்னும் இன்றைய நற்செய்திக்கு ஏற்ப, இவ்வுலகின் பணம், பொருள் மற்றும் சொத்துக்கள் மீது பற்றற்ற ஒரு வாழ்வை வாழ்வோம்.

2. பகிரும் வாழ்வு

இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லுகின்ற உவமையில் வரும் செல்வனின் நிலம் நன்றாய் விளைந்தது. ஆனால் அவன் அந்த விளைச்சல்,
1. இறைவனது கொடை
2. பிறரது உழைப்பின் பலன்
3. பகிரப்பட வேண்டிய பரிசு
என்பவற்றை அறவே மறந்து விடுகிறான். உண்டு, குடித்து மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறான். இவ்வுலகில் நாம் பெறுகின்ற அனைத்தும் இறைவன் நமக்குத் தருகின்ற அன்பு கொடை. அதை நாம் பிறரோடு பகிர்ந்து வாழ முயல வேண்டும். இயேசுவை பின்பற்ற விரும்பிய இளைஞரிடம், “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று கூறினார் (மாற்கு 10:21). இயேசுவை பின்பற்றும் கிறிஸ்தவ வாழ்வை வாழ, நமது வாழ்வு பிறரோடு பகிரப்பட வேண்டியதாக அமைய வேண்டும். இயேசு இவ்வுலக மீட்பிற்காக தன்னையே அப்ப வடிவில் பகிர்ந்தளித்தார். நாமும் இறைவன் நமக்கு தந்திருக்கின்ற திறமைகளை, அறிவை மற்றும் திறன்களை பிறரோடு பகிர்ந்து வாழ்வோம்.
"மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத்தேயு 25:40). ஆக, பிறரோடு நாம் பகிர்ந்து கொள்ளுகின்ற ஒவ்வொன்றும் நாம் இறைவனுக்கு செய்வதாக அமைகிறது. இந்த "உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது" (1 திமொத்தேயு 6:7) எனவே நமது வாழ்வை அன்பு செயல்களால் அர்த்தமுள்ளதாக்குவோம்.

3. பரலோக வாழ்வு

இன்றைய இரண்டாம் வாசகம் "இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்" (கொலோசையர் 3:2) என்கிறது. அப்படியெனில் இந்த உலகத்தில் நாம் சேர்த்து வைக்கின்ற பணமும் மற்றும் சொத்துகளும் இவ்வுலகை சார்ந்தவை. இவை மேலுலக வாழ்விற்கு ஒருநாளும் பயன்படுவதில்லை. எனவே, இவ்வுலகை சார்ந்தவை பற்றி எண்ணாமல் மேலுலக வாழ்வாம் பரலோக வாழ்வை பற்றி எண்ணுவோம். அதாவது இறைவன் தரும் இறையாட்சியில் நுழைவதற்கு நம்மை தயாரிப்போம்.
"மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை" (மத்தேயு 6:19,20). இந்த மண்ணுலக செல்வம் அனைத்தும் ஒரு நாள் அழிந்து போகும்‌. ஆனால் விண்ணுலக வாழ்வு
என்பது இறைவன் தரும் நிலையான வாழ்வு. எனவே தூய பவுல் அடிகளார் கூறுவதுபோல "உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்" (பிலிப்பியர் 3:8). எனவே இவ்வுலகின் பணத்தையும் மற்றும் பொருளையும் குப்பையென கருதி நிலையான செல்வமாம் இயேசுவை நமதாக்கி விண்ணுலக வாழ்வை பெற்றுக் கொள்வோம்.

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. (331)

என நிலையற்றவைகளாக இருக்கும் இவ்வுலக பொருட்களை நிலையானவை என நம்புகின்ற நமது அறியாமையை பற்றி திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார். "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (மத்தேயு 6:24) என்பதை அறிந்து செல்வத்தின் மீது பற்று கொள்ளாது, அதை பிறரோடு பகிர்ந்து இறைவன் மீது பற்று கொண்டு வாழ்வோம்.

அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF

காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ... (தமிழ்)



காணொளியில்
 காண/ஆடியோவில் கேட்க
 ...
(ஆங்கிலம்)



Friday, July 22, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 17-ஆம் வாரம் - ( ஆண்டு- C) - 24 -07-2021- ஞாயிற்றுக்கிழமை

 


முதல் வாசகம்: தொ.நூ. 18:20-32

இரண்டாம் வாசகம்: கொலோசையர் 2:12-14

நற்செய்தி: 
லூக்கா 11:1-13
ஜெப வாழ்வு

வயதான குரு ஒருவர் தன்னுடைய ஆசிரமத்தில் எலி தொல்லை அதிகம் இருப்பதாகவும் அதனால் தியானம் செய்ய இயலவில்லை எனவும் எண்ணி அதற்காக ஒரு பூனையை வளர்த்தார், அவர் ஒவ்வொரு முறையும் தியானம் செய்கின்ற பொழுது எலியின் தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக அந்தக் பூனையை அருகில் கட்டி போடுவார். இது தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது, ஒருநாள் குரு இறந்துவிட்டார், சில நாட்களில் அந்த பூனையும் இறந்துவிட்டது மற்றும் ஆசிரமத்தில் எலி தொல்லையும் நீங்கி விட்டது. ஆனால், அதன்பின் வந்த குருவும் அவருடைய சீடர்களும் ஒவ்வொரு முறையும் தியானம் செய்வதற்கு முன்பு ஒரு பூனையை அவர்கள் அருகே கட்டி போட்டார்கள். நாம் அதிகம் கேட்ட ஒரு கதையாக இது இருந்தாலும் இதனுடைய ஆழமான கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். செய்கின்ற செயலை ஏன் செய்கின்றோம்? எதற்கு செய்கிறோம்? இதனுடைய உண்மையான அர்த்தம் என்ன? என்பதை அறியாமலே பல வேளைகளில் நம்முடைய செயல்கள் இருந்து கொண்டிருக்கின்றது. இது வெறும் அன்றாட செயலுக்கு மட்டுமல்லாது கிறிஸ்தவர்களாகிய நமது ஜெப வாழ்விற்கும் பொருந்தும் என்பதைத் தான் இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு உணர்த்துகிறது.
கிறிஸ்தவர்களாகிய நம்முடைய ஜெபம் அர்த்தம் வாய்ந்ததாக இருக்கின்றதா? நமது ஜெபமும் வாழ்வும் ஒன்றித்து அமைகின்றதா? ஜெபத்தை பற்றிய எனது புரிதல் என்ன? ஏன் நான் ஜெபிக்க வேண்டும்? எப்படி ஜெபிக்க வேண்டும்? என்னும் பல கேள்விகளுக்கு விடையளித்து நம்மை சிந்திக்க வைக்கின்றது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
1. இறைவனோடு பேசுவது
2. அவர் சொல் கேட்பது
3. அவரோடு உறவாடுவது
என ஜெபத்தை பல்வேறு வகைகளில் வரையறுக்கலாம்.
1. ஆராதனை
2. மன்னிப்பு
3. நன்றி
4. புகழ்ச்சி
5. மன்றாட்டு
என ஐந்து வகையான ஜெபங்களை கத்தோலிக்கத் திருஅவை நமக்கு கொடுத்திருந்தாலும்,
1. அமைதி
2. அழுகை
3. பாடுதல்
4. தியானம்
5. உற்று நோக்குதல்
6. ஜெப வாசிப்பு
என பல்வேறு வகையான ஜெபங்களை மனிதர்கள் தங்களுடைய சூழ்நிலைக்கும் மற்றும் அனுபவத்திற்கும் ஏற்றவாறு அமைத்துக் கொள்கின்றனர். இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் ஜெபிக்க கற்றுத்தர கேட்கிறார்கள். அவர்கள் ஜெபிக்க கற்றுக்கொடும் என கேட்பதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. இயேசுவின் ஜெப வாழ்வு
இயேசுவோடு உடனிருந்து பயணித்த சீடர்கள் இயேசுவினுடைய ஜெப வாழ்வை பார்க்கிறார்கள். இயேசுவின் திருமுழுக்கு (லூக் 3:21), அவர் சோதிக்கப்படுதல் (லூக் 5:16), இரவு வேளை (லூக் 6:12), தனிமையான நேரம் (லூக் 9:18) மற்றும் மலைப்பகுதி (லூக் 9:28) என எல்லா நேரங்களிலும் அவர் ஜெபிப்பதை பார்க்கிறார்கள். குருவை பின்பற்றுகின்ற சீடர்களாக ஜெபத்தின் மகத்துவத்தையும் மற்றும் வல்லமையையும் உணர்ந்து, ஜெப வாழ்வில் நுழைய ஆசைப்படுகின்றனர். இயேசுவினுடைய சீடத்துவ வாழ்வை ஏற்று வாழும் நமது ஜெப வாழ்வு எப்படி இருக்கின்றது? இயேசு ஜெபித்தார், அவருடைய சீடர்களான நாம் ஜெபிக்கின்றோமா? சீடர்களை போல ஜெப வாழ்வில் நுழைய முயற்சி செய்கின்றோமா? சிந்திப்போம்.

2. இயேசுவின் உறவு
இயேசுவின் ஜெபம் தந்தைக்கும் அவருக்கும் உறவு பாலமாக இருந்ததை அவருடைய சீடர்கள் கண்டுணர்ந்தார்கள். இயேசு ஒவ்வொரு முறையும் ஜெபத்தில் தான் தன்னுடைய தந்தையை சந்திக்கின்றார், அவரிடம் பேசுகின்றார் மற்றும் உறவு கொள்கின்றார். இதேபோல சீடர்கள் இயேசுவுக்கும் தங்களுக்கும் ஜெபம் ஒரு உறவுப்பாலமாக இருக்கும் என்பதை நம்பினார்கள். எனவே தான் இயேசுவை எங்களுக்கும் ஜெபிக்க கற்று தாரும் என கேட்கிறார்கள். சீடர்களுக்கு மட்டுமல்லாது கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் ஜெபம் ஒரு உறவுப்பாலம், நாம் இறைவனை சந்திப்பதற்கும், அவரோடு பேசி உறவாடுவதற்கும் ஜெபம் நமக்கு பாலமாக இருக்கின்றதை நாம் உணர்ந்திருக்கிறோமா? நாம் ஜெபம் செய்கின்ற பொழுதெல்லாம் இறைவனோடு பேசுகின்றோம் மற்றும் அவரோடு உறவாடுகின்றோம் என்பதை உணர்ந்து ஜெபிக்கின்றோமா? பல வேளைகளில் நமது ஜெபங்கள் வெறும் மன்றாட்டுகளாக மட்டும் தான் இருக்கின்றதே தவிர, ஜெபம் அதையும் தாண்டி இறைவனை புகழ்ந்து, ஆராதித்து மற்றும் அவரோடு உறவு கொள்வதற்கான ஒரு தளம் என்பதை மறந்து விடுகின்றோம். எனவே ஜெபம் என்னும் உறவு பாலத்தை நமது வாழ்வாக்க முயலுவோம்.

3. யோவான் தனது சீடர்களுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்தது
(நற்குணங்களை எடுத்து கொள்வோம்)

பொதுவாக தங்களோடு தங்கியிருக்கின்ற சீடர்களுக்கு குருக்கள் கற்று கொடுப்பார்கள். யூதமுறைப்படி ரபிக்களும் சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கும் பழக்கம் உண்டு. இன்றைய நற்செய்தியில் சீடர்கள் “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என கேட்கின்றார்கள். பொதுவாக மற்றவருடைய தவறுகளையும் மற்றும் குற்றங்களையும் சுட்டிக்காட்டி, அதைப் பற்றிப் பேசி கொண்டிருக்கின்ற வேளையில், இயேசுவினுடைய சீடர்கள் பிறரிடத்தில் விளங்கிய நற்குணத்தை கண்டுணர்ந்து (அதாவது யோவான் தன் சீடர்களுக்கு ஜெபிக்க கற்றுக் கொடுத்ததை அறிந்து) அதை தங்களது வாழ்வாக்குவதை பார்க்கின்றோம்.
    பிறருடைய தவறுகளை சுட்டிக்காட்டி, எள்ளி நகையாடி சிரித்து மகிழும் மனிதர் வாழும் உலகில், பிறரிடத்தில் விளங்கிய நற்குணங்களைக் கண்டு பொறாமைப்படுகின்ற சூழலில், நாம் எப்படி இருக்கின்றோம்? மற்றவர்களின் குறையை சுட்டிக்காட்டி வாழாமல், அவர்களின் நற்குணங்களை நமதாக்கி வாழ்வோம்.
இன்றைக்கு நாமும் இறைமகன் இயேசுவை போல் நமது வாழ்வில் ஜெபிக்கும் போது, இறை மற்றும் மனித உறவில் வளர்வோம். எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து, நேர்மறையான எண்ணங்களில் வளர்வோம். இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாமின் விடாமுயற்சியோடு கூடிய செபத்தை போல, வாழ்வின் எத்தகைய சூழலிலும் விடாமுயற்சியோடு ஜெபவாழ்வில் இணைந்திருப்போம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF

                     

காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ... (தமிழ்)



காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...(ஆங்கிலம்)