Saturday, April 30, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பாஸ்கா காலம் 3-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) -----01-05-2022 - ஞாயிற்றுக்கிழமை

 


முதல் வாசகம்: திப 5: 27b-32, 40b-41

இரண்டாம் வாசகம்: திவெ 5: 11-14

நற்செய்தி:  யோவான் 21: 1-19

உனக்கு என்னிடம் அன்பு உண்டா?

விஜய் ஒரு கால்பந்து விளையாட்டு வீரன். அவன் எவ்வளவு நல்லா விளையான்டாலும் அவனுக்கு போட்டிகள்ல விளையாட வாய்ப்பே கிடைக்காது. அவன் சும்மா வெறுமனே பென்ச்ல உதவி ஆளா உக்கார வச்சிருப்பாங்க. என்னதான் தன்னோட மகன் பெஞ்சுல இருந்தாலும் அவனோட அப்பா அவன் பங்கெடுத்துக்கிற எல்லா போட்டிக்கும் வந்துடுவார். விஜய் தன்னோட பள்ளி படிப்ப முடிச்சு காலேஜ் போனான். அங்கேயும் கால்பந்து விளையாட்டுல ஈடுபட்டான் விஜய். அந்த விளையாட்டுகளையும் ஒன்னு விடாம பாக்க வந்துடுவாரு அவுங்க அப்பா. சில காலங்களுக்கு அப்புறமா விஜயோட அப்பா மரணமானாரு. இந்த செய்தி கேட்ட விஜய் கால்பந்தாட்ட கொச் கிட்ட போயி விசயத்த சொன்னான். நீ போயிட்டு வா விஜய் நீ இன்னைக்கு போட்டியிலயும் விளையாடல அதனால எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லைனு சொன்னாரு. ஊருக்கு போன விஜய் எல்லா சடங்குகளையும் முடிச்சுட்டு திரும்பவும் காலேஜ்க்கு வந்தான். அன்
னிக்கு ஒரு போட்டி இருந்துச்சு அங்க போயி கொச் கிட்ட சார் நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன் இன்னைக்கு என்ன விளையாட வைங்கன்னு சொன்னான். சுமாரா விளையாடுற விஜய போட்டியில விளையாட வைக்க அவருக்கு விருப்பம் இல்ல அதனால் கொஞ்சம் யோசிச்சாறு. திரும்ப திரும்ப விஜய் வேண்டி கேட்டுக்கிட்டதால அவரும் சம்மதிச்சாரு. போட்டி ஆரம்பமாச்சு , எப்பவும் இல்லாம அன்னைக்கு விஜய் ரொம்ப ஆக்ரோஷமா விளையாண்டான். அவனால முடியாதுன்னு சொன்ன எல்லா திறமைகளையும் அந்த போட்டியில அவன் செஞ்சு கட்டினான். இவ்வளவு நாள் தன்னோட நண்பன் இப்படி விளையாடுவான்னு கூட தெரியாத மத்த விளையாட்டு வீரர்களும் ரொம்ப நல்லா விளையாண்டாங்க. விஜயோட திறமையான விளையாட்டாள அன்னி க்கு போட்டியா அவுங்க ஜெயிச்சாங்க. விஜய் கிட்ட வந்த எல்லாரும் அது எப்படிடா இன்னைக்கு மட்டும் இவ்வளவு நல்லா விளையான்டான்னு கேட்டாங்க. அப்பத்தான் விஜய் சொன்னான் நாம விளையாடுற எல்லா விளையாட்டையும் பாக்க எங்க அப்பா வருவாருன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். ஆனா அவர் ஒரு பார்வையற்றவருன்னு உங்க எல்லாருக்கும் தெரியுமா, என்னதான் அவர் நேர்ல போட்டிய பாக்க வந்தாலும் அவரால போட்டிய பாக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். அதனாலதான் என்னோட விளையாட்டு கொஞ்சம் சுமாரா இருந்துச்சு. இன்னைக்கு எங்க அப்பா இறந்துட்டாரு அவரோட ஆத்மா இன்னைக்கு விளையாட்ட பாக்கனும்னு நம்புனேன். அதனால தான் எங்க அப்பாவ திருப்திபடுத்த இன்னைக்கு நல்லா விளையாண்டேன் அப்படின்னு சொன்னான். விஜய்க்கும் அவன் அப்பாவுக்கும் இடையே இருந்த அன்பை உணர்த்த வைக்கிறது இந்த கதை. நமக்கும் நம் அப்பா இறைவனுக்கும் இடையே இருக்கும் அன்பை சிந்திக்க வைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசு தன்னுடைய உயிர்ப்பிற்கு பிறகு சீடர்களுக்கு பல்வேறு தருணங்களில் காட்சியளிக்கின்றார். அவ்வாறாக இன்றைய நற்செய்தியில் தன்னுடைய சீடர்களில் ஏழு பேருக்கு அவர் காட்சியளிக்கின்றார், அப்பொழுது அவர்களின் பழைய மற்றும் இருளான வாழ்விலிருந்து புதிய மற்றும் ஒளி தரும் வாழ்வுக்கு அழைத்து செல்கின்றார். இன்றைய நற்செய்தி சீடர்களின் மாற்றத்தையும் அதிலும் குறிப்பாக பேதுருவின் மாற்றத்தையும் எடுத்தியம்புகிறது, இது தான் அன்பை மையப்படுத்திய வாழ்வு.

1. சீடர்களின் மாற்றம்:-

இயேசு கொடுத்த அழைப்பை ஏற்று, தங்களது மீன்பிடி வலைகள், படகு என தங்களது தொழிலை முற்றிலும் விட்டு, அவரோடு மூன்று ஆண்டுகள் பயணித்த திருத்தூதர்கள், இயேசுவின் இறப்புக்கு பிறகு குறிப்பாக இன்றைய நற்செய்தியில் மீண்டுமாக தங்களது பழைய நிலைக்கு செல்கின்றனர். "இதோ! உலக முடியும் வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத்தேயு 28:20) என்று இயேசு கொடுத்த அழைப்பை மறந்து மீண்டுமாக தங்களது தொழிலை செய்ய சென்றது சீடர்களின் பழைய நிலையை எடுத்துக்காட்டுகிறது. மீண்டுமாக மீன்பிடி தொழிலை செய்தது, அதை இரவு நேரத்தில் செய்தது, அவர்களுக்கு மீன்பாடு கிடைக்காமல் இருந்தது மற்றும் இயேசு அங்கு கரையிலிருந்தும் அவரை உணராமலிருந்தது என எல்லாம் சீடர்களின் பழைய மற்றும் இருளான நிலையை எடுத்துரைக்கிறது. “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்” (யோவான் 21:6) என‌ இயேசு கூறியது அவர் தரும் புது வாழ்வை மற்றும் ஒளியை தருகிறது. இங்கு இயேசுவால் பழைய பாவ நிலை மறைந்து அவர்களுக்கு புதிய நிலை உருவாக்கப்படுகிறது, மீன்பிடி தொழில் மறைந்து அன்பின் பணிவாழ்வு என்னும் புதிய அழைப்பு தரப்படுகிறது. அவர்களுக்கு உணவு தந்து தனது இறுதி இராவுணவை, பாடுகளை, இறப்பு மற்றும் உயிர்ப்பை எடுத்துரைத்து "என் ஆடுகளைப் பேணி வளர்" (யோவான் 21: 15) மற்றும் "என்னைப் பின் தொடர்" (யோவான் 21: 19) என்னும் அன்பின் வழியை அவர்களுக்கு காட்டுகின்றார்.

2. பேதுருவின் மாற்றம்:-

மத்தேயு 16: 22 வசனத்திலேயே இயேசு தன்னுடைய பாடுகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்து கொண்டிருந்த போது பேதுரு இயேசுவைப் பார்த்து "ஆண்டவரே இது வேண்டாம், இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என்கின்றார். மேலும், லூக்கா 22: 54-62 வசனங்களில் இயேசுவை கைது செய்து பிலாத்துவின் அரண்மனையில் அழைத்து சென்ற போது, அங்கிருந்த ஒரு பெண்மணி பேதுருவைப் பார்த்து நீயும் அவரோடு இருந்தவன் தானே? என்று கேட்கின்ற பொழுது பேதுரு இயேசுவை தெரியாது என மூன்று முறை மறுதலிக்கின்றார். மத்தேயு 14: 29 -ல் இயேசு கடல்மீது நடந்து வருவதைக் கண்டு பேதுருவும் நடக்க ஆசை கொள்கின்றார், ஆனால் அவர் நம்பிக்கையற்று மூழ்கும் நிலைக்கு உள்ளாகுகின்றார். பேதுருவின் இத்தகைய தடுமாற்ற நிலையிலிருந்து நம்பிக்கையான நிலைக்கு அதாவது அன்பின் பணி வாழ்வுக்கு இன்றைய நற்செய்தியில் இயேசு அழைப்பு கொடுக்கின்றார். அதனால் தான் மூன்று முறை இயேசு பேதுருவை நோக்கி "எனக்கு உன்னிடம் அன்பு இருக்கின்றதா?" என்று கேட்கின்றார். அக்காலத்தில் மூன்று முறை கேட்பது ஒரு செயலை உறுதிப்படுத்துவதன் அடையாளமாக இருக்கின்றது. இயேசு பேதுருவை பார்த்து மூன்று முறை கேட்பது அவரையும் மற்றும் சீடர்களையும் மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்து வாழ்வதற்கான அழைப்பாகும். இறை அன்பை உணர்ந்தால் மட்டும் போதாது, உணர்ந்த அன்பை நம்முடைய வாழ்வாக்க வேண்டும், அதாவது தொடர்ந்து இயேசுவினுடைய அன்பு பணியை செய்ய வேண்டும் என்பதன் அடையாளம்.

ஏன் இந்த கேள்வி?

இயேசு ஏன் இந்த கேள்வியை பேதுருவிடம் கேட்க வேண்டும்? இதன் வழியாக நம் ஒவ்வொருவரையும் ஏன் அன்பின் பணி வாழ்வுக்கு அழைப்பு கொடுக்க வேண்டும்? அன்பையே மையப்படுத்திய ஒரு பணியை மூன்று ஆண்டுகளாக வாழ்ந்து, அதன் உச்சக்கட்டமாக தன்னுயிரையே அன்பின் நிமித்தமாக அளித்து, தனது உயிர்ப்பின் காட்சிகளால் அதை நிலை நாட்டுகிறார். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் அன்பை உணர மற்றும் வாழ வேண்டும் என்பதே அவர் தரும் அழைப்பின் நோக்கம். யோவான் நற்செய்தி இயேசுவின் "நானே" என்னும் ஏழு வார்த்தைகளை எடுத்துக்கூறுகிறது. இது இயேசுவே நமக்கு முதலும் - முடிவும், வாழ்வும் - ஒளியும், உணவும் - வழியும், உயிரும் - உயர்ப்புமாக என எல்லோருக்கும் எல்லாமாய் இருக்கிறார் என்பதை காட்டுகிறது, அதாவது தனது முழுமையான அன்பை வெளிப்படுத்துகின்றார் என்பதை உணர்த்துகின்றது. இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவினுடைய "நானே" என்னும் ஏழு வார்த்தைகளையும் வெளிப்படுத்துகிறது.

1. “உலகின் ஒளி நானே" (யோவான் 8:12)

"உலகின் ஒளி நானே" என்ற இயேசு சீடர்கள் இரவில் மீன் பிடிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதை கண்டு, "படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்" (21:6) என்று கூறி அதிகாலை வெளிச்சத்தில் அதிக மீன்களை பிடிக்க செய்கிறார்.

2. “வாழ்வு தரும் உணவு நானே" (யோவான் 6:35)

"வாழ்வு தரும் உணவு நானே" என்று கூறிய இயேசு சீடர்களிடம் "உணவருந்த வாருங்கள்" (21:12) என்று அப்பத்தையும் மற்றும் மீனையும் மட்டும் கொடுக்காமல் அன்பின் பணிவாழ்வுக்கான வழியை காட்டுகிறார்.

3. "நானே வாயில்" (யோவான் 10:9)

"நானே வாயில்" என்று கூறிய இயேசு அவரது இறப்புக்கு பிறகு மீண்டுமாக பழைய தொழிலுக்கு சென்ற சீடர்களை, இயேசு என்ற வாயிலின் வழியாக சென்று அவர் பணியாற்ற மூன்றாம் முறையாக தோன்றுகிறார் (21:14).

4. "நல்ல ஆயன் நானே" (யோவான் 10:11)

"நல்ல ஆயன் நானே" என்று கூறிய இயேசு பேதுருவை நோக்கி, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? என்று கேட்கின்ற பொழுது "என் ஆடுகளை மேய்" (21:16) என்று ஆயனின் வழியில் நல்லாயனாக வாழ்வதற்கு வழியை காட்டுகிறார்.

5. “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே" (யோவான் 11:25)

"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே" என்று கூறிய இயேசு, பேதுரு "எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்த போகிறார்" (21:19) என்பதை முன்கூட்டியே எடுத்துரைத்து உயிர்த்தெழுதலையும் மற்றும் சாட்சிய வாழ்வையும் எடுத்துரைக்கிறார்.

6. “வழியும் உண்மையும் வாழ்வும் நானே" (யோவான் 14:6)

"வழியும் உண்மையும் நானே" என்று கூறிய இயேசு, இறுதியாக பேதுருவிடம் "என்னைப் பின்தொடர்"(21:19) என அவருக்கு வழியை காட்டுபவராக இருக்கிறார்.

7. “உண்மையான திராட்சைச் செடி நானே" (யோவான் 15:1)

"நானே திராட்சைச் செடி, நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது, என் அன்பில் நிலைத்திருங்கள். (யோவான் 15:4) என்று கூறிய இயேசு பேதுருவிடம் உனக்கு என்னிடம் அன்பு உண்டா? என்று கேட்டு சீடர்களையும் நம் ஒவ்வொருவரையும் அன்பின் வழியில் வாழ்வதற்கான ஒரு அழைப்பை தருகிறார்.

இயேசுவின் இந்த "நானே" எனும் ஏழு வார்த்தைகளும் இன்றைய நற்செய்தியில் இயேசுவின் அன்பாக நம் ஒவ்வொருவருக்கும் காட்டப்படுகிறது. நாம் அன்பின் வழியில் வாழ்வதற்கு அவர் தருகின்ற ஒரு அழைப்பாகவும் அமைகின்றது. கிறிஸ்தவர்களாகிய நாம் தவக்காலம் முடிந்துவிட்டது, இனி பழையபடி நாம் இறைவனை மறந்து விடுவோம், கோவிலுக்கு செல்லாமல் இருப்போம், பிறருக்கு உதவாமல் இருப்போம் என்ற எண்ணங்களைத் தவிர்த்து, இயேசுவின் உயிர்ப்பு காட்டுகின்ற அன்பின் பாதையில் தொடர்ந்து பயணிப்போம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF


                     காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...



புத்தம் புதிய காணிக்கைப் பாடல்

(கேட்டு மகிழுங்கள்)

https://youtu.be/NKp1EXTZLWw










Monday, April 18, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பாஸ்கா காலம் 2-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) -----24-04-2022 - ஞாயிற்றுக்கிழமை




முதல் வாசகம்: திப 5: 12-16

இரண்டாம் வாசகம்: திவெ 1: 9-11a, 12-13, 17-19

நற்செய்தி:  யோவான் 20: 19-31


நம்பிக்கையை வளர்க்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு

நிக்கோலஸ் ஜேம்ஸ் 1982 டிசம்பர் 4-ஆம் தேதி பிறந்தவர். இவர் உணர்ச்சிமயமான ஆஸ்திரேலிய பேச்சாளர். இவர் பிறவிலேயே டெட்ரா அமெல்லியா சின்ட்ரோம் என்னும் நோயினால் தனது இரண்டு கைகளையும் மற்றும் கால்களையும் இழந்தவர். குழந்தை பருவத்தில் இருந்தே பல இன்னலுக்கு ஆளானவர். ஆரம்பத்தில்; இவரது குறைபாட்டின் காரணமாக கல்வி நிறுவனங்களில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்பு சட்ட மாறுதலின் காரணமாக மனநிலை குன்றியவர்களோடு இணைந்து படிக்க வேண்டிய சூழல் ஏற்ப்பட்டது. இவர் தனது எட்டாவது வயதில் வாழ்வின் மீது நம்பிக்கையின்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின் தனது பெற்றோர்களின் உடனிருப்பால் மற்றும் அன்பால் வாழ்வில் நம்பிக்கை பெற்று, தனது வாழ்விற்கு தேவையான யாவற்றையும் வேறு ஒருவர் உதவியின்றி தானாகவே செய்ய ஆரம்பித்தார். தனது குறைகளை தாண்டி 17வது வயதில் லைப் வித்தவுத் லிமிட் என்னும் நிறுவனத்தை துவங்கினார். இவரது சேவையுணர்வை பார்த்து பலரும் இவரது நிறுவனத்திற்கு உதவ முன் வந்தனர். 2005-ஆம் ஆண்டின் ஆஸ்திரேலியாவின் சிறந்த நபர் என்னும் விருதை பெற்றார். 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், தனது 21வது வயதில் கணக்கியல் மற்றும் நிதியியல் திட்டமிடலை இரட்டை பட்டமாக முடித்தார். மிகச்சிறந்த பேச்சாளராக ஐந்து கண்டங்களில் உள்ள 25 நாடுகளில் 3 மில்லியனுக்கும் அதிகமானவர்களில் உரையாற்றியுள்ளார். பிறவிலேயே தனது இரண்டு கைகளையும் மற்றும் கால்களையும் இழந்து, வாழ்க்கையின் மீது நம்பிக்கையிழந்து, தற்கொலை முயற்சிக்கு சென்ற ஒரு மனிதர், இன்றைக்கு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, பல விருதுகளையும் பெற்று, மிகச்சிறந்த பேச்சாளராகவும், சேவையுணர்வு கொண்ட மனிதராகவும் திகழ்ந்து உலகறிந்தவராக இருக்கின்றார். இதற்கு அன்று அவர் நம்பிக்கையிழந்து, தற்கொலை செய்ய நினைத்த போது அவரோடு உடனிருந்த பெற்றோர்கள் தான் காரணம், அவர்களுடைய ஒன்றிப்பும் உடனிருப்பும் அவருக்கு நம்பிக்கையை அளித்து புது வாழ்வைத் தந்தது. நமது வாழ்விலும் ஒன்றிப்பும் உடனிருப்பும் நம்பிக்கையை வளர்க்கும் என்பதை அறிந்துக்கொள்ள அழைக்கப்படுகிறோம். இன்று பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை கொண்டாடுகின்றோம். இது உயிர்ப்பின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை என்றும் அழைக்கப்படுகிறது. இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம் ஒவ்வொருவரையும் கிறிஸ்தவ வாழ்வில் ஒன்றினைந்து நம்பிக்கையை ஆழப்படுத்த அழைக்கிறது.

தோமாவின் ஒன்றிப்பு

இன்றைய நற்செய்தியை வாசிக்கின்ற போது திருத்தூதர் தோமா சந்தேகம் கொண்ட ஒரு மனிதர் என நமக்கு நினைக்க தோன்றுகிறது. இயேசுவோடு உடன் வாழ்ந்து, அவருடைய போதனைகளை கேட்டு வளர்ந்த ஒரு மனிதர், எப்படி இயேசு உயிர்த்தார் மற்றும் நம் மத்தியில் தோன்றினார் என்பதை நம்பாமல் இருப்பார் என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. இயேசு தம் சீடர்களிடம் நான் செல்லும் இடத்திற்கு உங்களால் வர முடியாது. கொஞ்ச நாள் உங்களுடன் இருப்பேன், மீண்டும் நான் செல்வேன். மீண்டும் நான் வருவேன் என்றெல்லாம் போதித்துக் கொண்டிருக்கும் போது, "நீர் எங்கே போகின்றீர்? என்றே எங்களுக்கு தெரியாது, அப்படியிருக்க நீ போகும் இடத்திற்கு வழியை எப்படி தெரிந்து கொள்ள இயலும் (யோவான் 14:5) என்று தோமா சொல்கிறார். இயேசு இறந்த இலாசரை காண செல்வோம் என்று சொல்லும் போது தோமா மற்ற சீடர்களிடம் "நாமும் அவரோடு செல்வோம் அவரோடு இறப்போம்" என்று சொல்கிறார். (யோவான் 11: 16) அப்படியென்றால் மற்ற சீடர்களை காட்டிலும் தோமா ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர் என்பது புரிகிறது. பின்பு ஏன் சீடர்கள் தோமாவிடம் “ஆண்டவரைக் கண்டோம்” என்று கூறிய போது தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார். தோமா இயேசுவுடன் இருந்து அவர் மீது அளவுகடந்த நம்பிக்கை கொண்டிருந்தாலும், இயேசுவின் இறப்புக்கு பிறகு அவர் கிறிஸ்தவ ஒன்றிப்பை தவற விட்டிருக்கிறார். அதாவது திருத்தூதர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே அறையிலிருந்த பொழுது தோமா மட்டும் அங்கு இல்லை, அன்று திருத்தூதர்களோடு இல்லாத நிலை தான் அவர் இயேசுவின் மீது சந்தேகம் கொள்ள வைத்திருக்கிறது. தோமா திருத்தூதர்களோடு ஒன்றித்திருந்த போது இயேசு மீண்டும் தோன்றுகிறார். அதுவரைக்கும் கண்டாலும் அவருடைய காயங்களில் விரலை விட்டால் தான் நம்புவேன் என்று சந்தேக வார்த்தைகளை பேசிக்கொண்டிருந்த தோமா இயேசுவை பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்கிறார் (யோவா 20:28). இங்கு கிறிஸ்தவ ஒன்றிப்பு இயேசுவை காண செய்து மற்றும் அவரது நம்பிக்கையை புதுப்பிக்க செய்கிறது.

திருத்தூதர்களின் ஒன்றிப்பு

இன்றைய முதல் வாசகத்தில் உயிர்த்த ஆண்டவரில் நம்பிக்கை கொண்ட திருத்தூதர்கள் பல்வேறு அரும் அடையாளங்களையும் மற்றும் அதிசயங்களையும் நிகழ்த்துவதாக தரப்பட்டிருக்கிறது. குறிப்பாக, பேதுரு நடந்து செல்லும் போது அவருடைய நிழல்படுகின்ற இடமெல்லாம் உடல் நலமற்றோரை அவர்கள் வைத்தது, மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது (திப 5: 12). இன்றைய இரண்டாம் வாசகத்தில் உயிர்த்த ஆண்டவர் யோவானுக்கு வெளிப்படுத்திய திருவெளிப்பாடு அதாவது அருளடையாளங்கள் தரப்பட்டிருக்கிறது (திவெ 1:19). ஆண்டவர் இயேசுவின் இறப்புக்கு பிறகு அச்சத்தால் மூழ்கி கிடந்த சீடர்கள், இயேசுவின் தோற்றத்தால் மற்றும் தூய ஆவியின் வருகையால் நம்பிக்கை கொண்டார்கள். இதற்கு அடிப்படை காரணம் அவர்கள் மத்தியில் இருந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு, இயேசு அவர்களுக்கு தோன்றிய போதும் மற்றும் தூய ஆவியாரின் வருகையின் போதும் இவர்கள் அனைவரும் ஆங்காங்கே தனித்தனி அறையில் அல்லாது, ஒன்றாக ஒற்றுமையாக ஜெபித்து கிறிஸ்தவ ஒன்றிப்பை வெளிப்படுத்தினார்கள். "ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள்"(திப 5:14). இது தான் இவர்கள் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையை ஆழப்படுத்தி, யாவருக்கும் கிறிஸ்துவை எடுத்துரைத்து, அற்புதங்களை நிகழ்த்த காரணமாக அமைகின்றது.

கிறிஸ்தவர்களின் ஒன்றிப்பு

தோமா கிறிஸ்தவ ஒன்றிப்பை தவறவிட்டதால் இயேசுவை பார்க்கின்ற வாய்ப்பை இழந்தார் மற்றும் அவரது நம்பிக்கையில் தளர்ந்தார். நமது வாழ்க்கையிலும் நாம் கத்தோலிக்க திருஅவையோடு ஒன்றிணைந்து இல்லாத போது நமது நம்பிக்கை தளர்கிறது, "ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே" (1 யோவான் 5:4). திருஅவையோடு நாம் ஒன்றித்து வாழ்கின்ற பொழுது, நமது அன்றாட கிறிஸ்தவ பணிகளாக ஒவ்வொரு நாளும் திருப்பலியில் பங்கு கொள்ளுவோம், இறைவார்த்தையை கேட்டு தியானிப்போம், திருவருட்சாதனங்களில் பங்கு பெறுவோம் மற்றும் இறையாசீரை பெற்றவர்களாக நமது இறைநம்பிக்கையில் நிலைத்து வாழ்வோம், ஆக கிறிஸ்தவ ஒன்றிப்பு தான் நமது இறைநம்பிக்கையை வளர்த்தெடுக்கிறது. நமது அன்றாட வாழ்க்கையிலும் குடும்பமாக கணவன், மனைவி, பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் என ஒன்றாக ஒற்றுமையாக வாழும் போது அவர்களில் அதாவது ஒருவர் மற்றவர் மீது நம்பிக்கை உருவாகிறது. "நாம் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் கொள்ளக் கற்றால் தான் போராட்டத்தில் நாம் வெல்வோம்" என்கிறார் லெனின். நாம் நமது வாழ்க்கை என்னும் போராட்டத்தில் நம்பிக்கையோடு வெற்றி பெற ஒற்றுமை அவசியமாகிறது. வாழ்வில் பொறாமையையும் மற்றும் பகைமையுணர்வையும் வெறுத்து உறவுகளோடு ஒன்றித்து வாழ்வோம், நம்பிக்கையில் நாளும் வளர்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF

 காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...


                                  https://youtu.be/w5_DRhE_mIg


Tuesday, April 12, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பாஸ்கா விழாவின் முத்திரு நாட்கள் (பெரிய வியாழன், புனித வெள்ளி, பாஸ்கா திருவிழிப்பு) - ( ஆண்டு- C) -----14/15/16-04-2022



 பாஸ்கா விழாவின் முத்திரு நாட்கள் 

(பெரிய வியாழன், புனித வெள்ளி, பாஸ்கா திருவிழிப்பு)


🌱விவிலிய விதைகள்🌱

புனித வாரம்

பெரிய வியாழன்


        முதல் வாசகம்விடுதலைப் பயணம் 12: 1-8, 11-14    

இரண்டாம் வாசகம்கொரிந்தியர் 11: 23-26
               நற்செய்தியோவான் 13: 1-15
 

அன்பின் அடையாளங்கள்
(செய்தார்... செய்ய சொன்னார்...)

                          "Healing through the Mass" அதாவது நற்கருணையின் மூலம் குணம் பெறுதல் என்னும் புத்தகம் அருட்தந்தை இராபர்ட் அவர்களால் எழுதப்பட்டது. இந்த புத்தகத்தின் எண்பத்து நான்கு மற்றும் எண்பத்து ஐந்தாவது பக்கங்கள் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் நடத்திய ஆய்வு ஒன்றை பற்றி குறிப்பிடுகிறது. இவர்கள் மனித உடலை சுற்றியிருக்கின்ற சக்தி அலைகளை பற்றிய ஆய்வை மேற்கொண்டார்கள். அதற்கென்று அவர்கள் வடிவமைத்த கேமராவில் மருத்துவமனையில் இறக்கும் தருவாயிலிருந்த ஒரு மனிதரை வைத்து சோதனை நடத்தினார்கள். தங்களது ஆய்வகத்தில் திரையில் மருத்துவமனை அறையிலிருந்த அந்த மனிதனை தொடர்ந்து கண்காணித்தனர். அந்த மனிதனின் உடலை சுற்றியிருக்கின்ற சக்தி அலைகள் வெளிச்சமாக இருப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் இறக்கும் தருவாயில் அவனுடைய சக்தி அலைகளின் வெளிச்சம் சிறிது சிறிதாக குறைவதையும் கவனித்தார்கள். திடீரென்று அந்த அறையில் மற்றொரு பெரிய சக்தி அலைகள் கொண்ட வெளிச்சம் வருவதையும், அது தன்னிடமிருந்து எதையோ எடுத்து அந்த மருத்துவமனையிலிருந்த நோயாளிக்கு கொடுப்பதையும், அதனால் குறைந்து கொண்டே சென்ற நோயாளியின் உடல் சக்தி அலைகளின் வெளிச்சம் அதிகமாக ஆரம்பிப்பதையும் கண்டார்கள். அந்நிகழ்வின் போது மிகப்பெரிய வெளிச்சம் இருந்ததால் கேமராவில் விஞ்ஞானிகளால் எதையும் தெளிவாக பார்க்க முடியாமல் இருந்தது. இதை பற்றி விஞ்ஞானிகள் கேட்டறிந்த போது நோயாளிக்கு குருவானவர் வந்து நற்கருணை வழங்கியது தெரிய வந்தது. இதை கண்ட நாசா விஞ்ஞானி தனது முதிர்ந்த வயதில் குருவாக மாறினார். ஆம், இது தான் நற்கருனை மற்றும் குருத்துவத்தில் பிரசன்னமாகியிருக்கின்ற இயேசுவின் அற்புதம். தவக்காலத்தின் உச்சகட்டமான இந்தப் புனித வாரத்தின் முக்கியமான நாட்களிலே நாம் நுழைகிறோம். பெரிய வியாழனாகிய இன்று இயேசு நற்கருணை மற்றும் குருத்துவம் என்னும் இரண்டு திருவருட்சாதனங்களை ஏற்படுத்திய நாள். இவை இரண்டுமே இயேசுவின் அன்பின் அடையாளங்கள், இயேசு தான் வாழ்ந்த காலத்தில் குறிப்பாக பணி வாழ்வின் மூன்று ஆண்டுகளில் வெவ்வேறு விதங்களில் தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த அன்பின் ஊற்றாக தான் தன்னையே முழுவதுமாக கல்வாரி பலியிலே அர்ப்பணித்தார். தனது உயிர்ப்புக்கு பிறகு அவருடைய அன்பின் பிரசன்னத்தை நம் மத்தியில் நற்கருணையின் வடிவிலே விட்டு சென்றிருக்கின்றார். இது வெறும் அப்பம் அல்ல மாறாக இயேசுவின் திருவுடல் மற்றும் அவரது அன்பு. அவர் ஆற்றிய அன்பு பணி தொடர்ந்து நம் மத்தியிலே நிறைவேற்றுவதற்காக குருத்துவத்தையும் இந்த நாளிலே ஏற்படுத்துகிறார். தனது சீடர்களின் பாதங்களை கழுவுவதன் மூலமாக அன்பு வாழ்வு வாழ இயேசு அழைக்கிறார்.

செய்தார்... செய்ய சொன்னார்...

                               இன்றைய இறைவார்த்தை பகுதி இயேசுவினுடைய இரண்டு முக்கியமான செயல்பாடுகளை எடுத்துரைக்கிறது. ஒன்று அவர் தனது சீடர்களின் பாதங்களை கழுவியது, மற்றொன்று அவர் தனது கடைசி இராவுணவின் போது அப்பத்தை பிட்டு தனது சீடர்களுக்கு பகிர்ந்தளித்தது. இந்த இரண்டு செயல்பாடுகளையும் இயேசு செய்த பின் தான் செய்தது போல தனது சீடர்களையும் செய்வதற்கு அழைப்பு தருகின்றார். இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களின் பாதங்களை கழுவிய பின் இறுதியாக "நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்" (யோவான்13:15) என்கிறார்இன்றைய இரண்டாம் வாசகத்தில், “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” (1 கொரிந்தியர் 11:25) என்கிறார். தனது அன்பின் செயல்பாடுகளை அதாவது அவர் வாழ்ந்த அன்பு வாழ்வை தன்னுடைய சீடர்களும் வாழ்வதற்கான ஒரு அழைப்பை தருகிறார்இயேசு செய்தார் தனது சீடர்களை செய்யச் சொன்னார். அவர் பிறர் மீது அன்பை காட்டினார், தன்னுடைய சீடர்களையும் ஒருவர் மற்றவர் மீது அன்பு செய்வதற்கு அழைப்பு தருகிறார்

நற்கருணை:- அன்பின் அடையாளம்

                     திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தன்னுடைய "அன்பின் அடையாளம்" என்னும் திருத்தூது அறிவுரையில் நற்கருணையை இயேசுவின் அன்பின் அடையாளமாக எடுத்துரைக்கிறார். மேலும், நற்கருணை போற்றப்பட வேண்டும், கொண்டாடப்பட வேண்டும் மற்றும் வாழப்பட வேண்டிய திருவருட்சாதனம் என்றும் குறிப்பிடுகின்றார். நற்கருணை என்னும் திருவருட்சாதனம் கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமாக, ஆணி வேராக மற்றும் ஊற்றாக இருக்கின்றது. இதை ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கையில் நம்ப வேண்டும், கொண்டாட வேண்டும் மற்றும் நமது வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட வேண்டும். இது தான் இயேசுவின் விருப்பமாகவும் மற்றும் திருஅவையின் அழைப்பாகவும் இருக்கின்றது. மறைந்த திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் "என் நினைவாக செய்யுங்கள் என்பது இயேசுவினுடைய வசீகர வார்த்தை அல்ல மாறாக அது வாழ வேண்டிய வார்த்தை" என்கின்றார். நற்கருணை இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்த அன்பு பரிசு. இன்று இந்த அன்பின் அடையாளத்தை நமது வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட முயலுவோம். யோவான் எழுதிய நற்செய்தி ஆறாவது அதிகாரம் நற்கருணையை வாழ்வு தருகின்ற உணவாக நம்முன் காட்டுகிறதுஇந்த அதிகாரம் நற்கருணையின் நான்கு பண்புகளை சுட்டிக்காட்டுகிறது.

1. அழியாத உணவு (6:27) 

2. உண்மையான உணவு (6:32)

3. விண்ணிலிருந்து இறங்கி வந்த உணவு (6:41)

4. வாழ்வு தரும் உணவு (6:51)               

ஆக நற்கருணை என்னும் இயேசுவின் அன்பை அனுதினமும் நமது வாழ்வில் வாழ்ந்து காட்டுவோம்.

குருத்துவம்:- அன்பின் பணி வாழ்வு

                      2004 ஆம் ஆண்டு மறைந்த திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் குருக்களுக்கான தன்னுடைய கடிதத்தில் இயேசுவினுடைய இறுதி இராவுணவின் போது குருக்கள் பிறந்தார்கள் என்று கூறுகிறார். அதாவது குருத்துவம் நற்கருணையிலிருந்து பிறந்தது என இரண்டு திருவருட்சாதனத்திற்கும் உள்ள தொடர்பை எடுத்துரைக்கிறார். குருத்துவமின்றி நற்கருணை இல்லை, நற்கருணையின்றி குருத்துவம் இல்லை என்கின்றார். ஒவ்வொரு குருவும் தன்னுடைய குருத்துவத்தின் வழியாக "Persona christi" அதாவது கிறிஸ்துவின் பதிலாளியாக திகழ அழைக்கப்படுகின்றார். நற்கருணை கொண்டாட்டத்தின் போது ஒவ்வொரு குருவும், காணிக்கையாக்கிய அப்பத்தையும் இரசத்தையும் ஆண்டவர் இயேசுவின் உடலாக மற்றும் இரத்தமாக மாற்ற ஜெபிக்கின்ற பொழுது இது நிறைவடைகின்றது. ஒரு குரு எத்தகைய ஒரு வேலை செய்தாலும் நற்கருணையை கொண்டாடுவது மிக முக்கிய மற்றும் உச்சகட்ட குருத்துவ பணியாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டு குருத்துவம் இறையன்பை மட்டுமே சுட்டிக்காட்டியது ஆனால் புதிய ஏற்பாட்டில் நாம் பார்க்கின்ற இயேசுவின் குருத்துவம் இறையன்பை மட்டும் அல்லாது பிறர் அன்பையும் எடுத்துக் கூறுகிறது. நாம் நிறைவேற்றுகின்ற இந்த நற்கருணை என்னும் திருவருட்சாதனம் இயேசு தனது இறை மற்றும் பிறர் அன்பின் நிமித்தமாக கொடுத்ததன் அடையாளமாக இருக்கிறது. "சந்திப்புக் கூடாரத்தின் நுழைவு வாயிலில் ஆரோனையும் அவன் புதல்வரையும் அருகில் வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவினார்கள்" (விப 29:4/லேவி 8:6) என்பதிலிருந்து கழுவுதல் பழைய ஏற்பாட்டு குருத்துவத்தோடு தொடர்பு கொண்டதாக இருக்கிறது என்பதை உணரலாம்இன்றைய நாளிலே இயேசு தன்னுடைய சீடர்களின் பாதங்களை கழுவுகிறார். பழைய ஏற்பாட்டிலே எபிரேய அடிமைகள் பாதங்களை கழுவ கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அதன்பின் இஸ்ராயேல் மக்கள் தங்களது வீடுகளுக்கு வருபவர்களின் கால்களை கழுவி தங்களது அன்பை வெளிப்படுத்தினார்கள். இன்றைக்கும் வட இந்தியாவில் வீட்டிற்கு வருகின்ற விருந்தாளிகளின் கால்களை கழுவி வீட்டிற்குள் வரவேற்று தங்களது அன்பை வெளிப்படுத்துகிறார்கள் பழங்குடியின மக்கள். இயேசு தன்னுடைய சீடர்களின் பாதங்களைக் கழுவுவது என்பது அவர்களுக்கு மட்டுமல்லாது நமக்கும் தனது அன்பை வெளிப்படுத்தி, அன்பின் பணி வாழ்வை ஏற்றுக் கொள்வதற்கான ஒரு அழைப்பாகும்.

அன்பில் வாழ்வோம்:-

                                 அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார் (1 யோவான் 4:8) என அன்பாய் இருந்து, அன்பை வாழ்ந்து காட்டி, அதே அன்பை நமக்கும் வாழ்வதற்கு அழைப்பு தருகின்ற இறைவனின் அன்பில் வாழ்வோம். இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ராயேல் மக்கள் கொண்டாடிய முதல் பாஸ்கா விழாவை பற்றி வாசிக்கின்றோம். இது அவர்களுடைய விடுதலைப் பயணத்தின் துவக்கமாகவும், இறைவனுடைய அன்பை வெளிப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாகவும் இருக்கிறது. ஊனும் இரத்தமும் கொண்ட அப்பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார் (எபிரேயர் 2:14), மற்றும் கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதர் சகோதரிகளைப்போல் ஆக வேண்டிதாயிற்று (எபிரேயர் 2:17) என்னும் இறைவார்த்தைகள் இயேசு நற்கருணை மற்றும் குருத்துவத்தில் வெளிப்படுத்திய அன்பு புலப்படுகிறது"உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்" (யோவான் 13:1) என இன்றைய நற்செய்தி வாசகம் காட்டும் இயேசுவின் அன்பை நமது அன்றாட வாழ்க்கையில், நற்கருணையை ஏற்று நமது வாழ்க்கையில் கொண்டாடுவதன் மூலமும் மற்றும் குருக்களுக்காக ஜெபித்து, அவர்களை மதித்து வாழ்வதன் மூலமும் வெளிப்படுத்துவோம். அன்பிய வாழ்வு வாழ்ந்து இயேசுவில் இணைவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார். 

அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF

 காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...

 


                                 திருப்பாடுகளின் வெள்ளி

     முதல் வாசகம்:   எசாயா 52: 13- 53: 12
இரண்டாம் வாசகம்:   எபிரேயர் 4: 14-16; 5: 7-9
             நற்செய்தி:  யோவான் 18: 1- 19: 42

இயேசுவின் சிலுவை

                  இரண்டாம் உலகப்போரின் போது கடவுள் நம்பிக்கையற்ற ஒருவர் தன்னுடைய மனைவியை பிரசவத்திற்காக அருட்சகோதரிகள் நடத்துகின்ற மருத்துவமனையில் அனுமதித்தார். அப்பொழுது அவருடைய மனைவிக்கு ஒரு அறையானது ஒதுக்கப்பட்டது, அந்த மருத்துவமனையின் அறையில் சிலுவையானது தொங்கவிடப்பட்டிருந்தது. அதை பார்த்த அந்த மனிதர் அங்கிருந்த செவிலியரிடம் அந்த சிலுவையை அறையிலிருந்து எடுக்க அல்லது அவர் மனைவிக்கு வேறு ஒரு அறை வழங்க கேட்டு கொண்டாராம். அவர் அவர்களிடம் பிறக்கப் போகின்ற தன்னுடைய குழந்தை துயரத்தின் அடையாளமான இந்த சிலுவையை பார்க்கக் கூடாது என்று கூறினார். அவர் வார்த்தைக்கு இணங்க, அவருடைய மனைவிக்கு வேறு ஒரு அறையானது கொடுக்கப்பட்டது. பின்பு அன்று இரவு அவர் மனைவிக்கு குழந்தை பிறந்தது, அப்போது அவர் அந்த செவிலியர்களிடம் குழந்தை எப்படி இருக்கின்றது என்று கேட்டார். அதற்கு அவர்கள் குழந்தை நன்றாக இருக்கிறது, நீங்கள் ஆசைப்பட்டபடி உங்களுடைய குழந்தை துயரத்தின் அடையாளமான சிலுவையை மட்டுமல்ல, இந்த உலகத்தின் துயரங்களையும் ஒரு போதும் பார்க்கவே பார்க்காது. ஏனென்றால் உங்களுடைய குழந்தை பார்வையற்றதாக பிறந்திருக்கின்றது என்று கூறினாராம். இந்நிகழ்வில் கண்ட கடவுள் நம்பிக்கையற்றவர் மட்டுமல்ல மாறாக கடவுள் நம்பிக்கை உள்ளவர் கூட இன்று தன்னுடைய வாழ்க்கையில் துயரத்திலிருந்து பயந்து ஓடுகின்றனர். எனக்கு துயரம் ஒரு போதும் வந்து விடக்கூடாது என்று நினைக்கின்றனர். இது தான் நம்முடைய சமுதாயத்தின் நிலை மற்றும் நமது நிலைப்பாடு, இத்தகைய ஒரு சமுதாய சூழலிலிருந்து நாம் விடுபட இறைமகன் இயேசுவின் சிலுவைச் சாவு நமக்கு அழைப்பு தருகிறது. இன்றைய தினம் இயேசுவின் சிலுவையை பற்றி தியானிப்போம்.

                  இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா இயேசுவை "மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம்" (எசாயா 53:4) என்னும் வார்த்தைகளில் துன்புறும் ஊழியனாக சுட்டிக்காட்டுகிறார். இன்றைய இரண்டாம் வாசகத்தில் இயேசு துன்புறும் ஊழியன் என்னும் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள் "அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவது போல, தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்" என்னும் வார்த்தைகளில் விவரித்து காட்டப்படுகிறது (எபிரேயர் 5:3). இன்றைய நற்செய்தி வாசகமும் இயேசுவின் பாடுகளை முழுவதுமாக நமக்கு விரித்து காட்டுகிறது. இயேசுவினுடைய இந்த துன்பமும் அதாவது அவருடைய பாடுகள் முற்றிலுமாக சிலுவையில் நிகழ்கிறது.

வரலாற்றில் இரண்டு நிகழ்வுகள் சிலுவைக்கு முக்கியத்துவம் கொடுக்க செய்தது.


1. கான்ஸ்டன்டைனின் கனவு: கனவில் வானத்திலே அவருக்கு தென்பட்ட சிலுவை என்னும் அடையாளம், அதன் பிறகு அவர் சிலுவை அடையாளமிட்ட கொடி மற்றும் கேடயங்களோடு போரில் வெற்றி பெற்றது.

2. சிலுவை கண்டு பிடிப்பு: கான்ஸ்டன்டைனின் தாய் ஹெலன் எருசலேம் சென்று பல சிலுவைகளுக்கு மத்தியில், நோயாளிகளை குணமாக்கிய இயேசுவின் சிலுவையை கண்டடைந்தது.


யூதர்கள் மத்தியில் சிலுவை மூன்று விதமான அடையாளங்களாக இருந்தது.

1. பலவீனத்தின் அடையாளம்:-                          

இறைமகன் இயேசு கிறிஸ்து தன்னை முழுவதுமாக அர்ப்பணித்த சிலுவை அன்று பலவீனத்தின் அடையாளமாக இருந்தது யாருமே உதவ முடியாத ஒரு தருணமாக அது இருந்தது. "நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது" (1 கொரிந்தியர் 1:23)

2. சாபத்தின் அடையாளம்:-

            சிலுவை சாபத்தின் அடையாளமாகவும் இருந்தது, குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்படுவது சிலுவையில் தான் அதனால் அவர்கள் சபிக்கப்பட்டவர்களாக கருதப்பட்டார்கள். "ஆனால் அவன் பிணம் இரவில் மரத்தில் தொங்கக்கூடாது. அவனை நீ அன்றே அடக்கம் செய்ய வேண்டும். ஏனெனில் தொங்கவிடப்பட்டவன் கடவுளால் சபிக்கப்பட்டவன். நீயோ உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுக்கும் நாட்டைத் தீட்டுப் படுத்தாதேசாவுக்கு ஏதுவான பாவம் செய்த மனிதன் சாகடிக்கப்பட்டபின் அவனது பிணத்தை ஒரு மரத்திலே தொங்கவிடு" (இணைச் சட்டம் 21:22-23) என்னும் பழைய ஏற்பாட்டின் வார்த்தைகள் இதற்கு சான்றாக இருக்கிறது.

3. வாழ்வு முடிந்து விட்டது என அடையாளம்:-

                கயபா என்பவர் அவர்களுள் ஒருவர். அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்தார். அவர் அவர்களிடம், “உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லைஇனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லைஎன்று சொன்னார் (யோவான் 11:49,50). இயேசுவின் வாழ்வை முடித்து விட வேண்டும் என்று நினைத்தவர்கள் அவரை சிலுவையில் அறைந்துவிட எண்ணினார்கள். ஏனென்றால், சிலுவையில் அறைவது வாழ்வு முடிந்துவிட்டது என்று அர்த்தம்
                 “
மரத்தில் தொங்கவிடப்பட்டோர் சபிக்கப்பட்டோர்என்று எழுதியுள்ளவாறு நமக்காகக் கிறிஸ்து சாபத்துக்கு உள்ளாகி நம்மைச் சட்டத்தின் சாபத்தினின்று மீட்டுக் கொண்டார் (கலாத்தியர் 3:13). என்னும் பவுலடிகளாரின் வார்த்தைகேற்ப சாபத்தின், பலவீனத்தின் மற்றும் ஒரு மனிதனின் வாழ்க்கையை முடித்து விடுவதன் அடையாளமாக இருந்த சிலுவை, இன்று உலகின் பாவங்களைப் போக்கும் அடையாளமாக மற்றும் கிறிஸ்தவர்களின் அடையாளமாக மாறியிருப்பது இயேசுவின் பாடுகளாளும் மற்றும் சிலுவை
ச் சாவாலும் தான்.

பாவத்திலிருந்து மீட்பு தரும் சிலுவை:-

             ஒருமுறை அப்பா தனது மகளை ஒரு ஆலயத்திற்கு அழைத்துச் சென்றாராம். அப்பொழுது ஆலயத்திலிருந்த அந்த சிலுவையை பார்த்து, சிறுமி அப்பா ஏன் இயேசுவிற்கு பின்னால் ஒரு கூட்டல் குறியும், ஒரு கழித்தல் குறியும் இருக்கிறது என்று மழலைத்தனத்தில் கேட்டாள். அதற்கு அந்த தந்தை சற்றே யோசித்து, இயேசு நம்முடைய பாவத்தை நம்மிடமிருந்து கழித்து இறையருளை நமக்கு கூட்டிச் சேர்ப்பவராக இருக்கிறார் அதனால் தான் இயேசுவிற்கு பின்னால் ஒரு கூட்டல் குறியும் கழித்தல் குறியும் இருக்கிறது என்று கூறினார். இயேசு சிலுவை சாவின் வழியாக நம்முடைய பாவங்கள் அனைத்தையும் நம்மிடமிருந்து கழித்து, நமக்கு மீட்பை அதாவது புது வாழ்வு தரும் இறையருளை கூட்டி சேர்பவராக இருக்கிறார்.

வாழ்வின் சிலுவைகளை  ஏற்போம்:-                                                                                       

   நாம் இயேசுவை பின்பற்றி, அவருடைய சீடராக மாற நம்முடைய வாழ்வின் துயரங்களை அதாவது சிலுவைகளை ஏற்று வாழ "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (மாற்கு 8:34) என்று கூறுகின்றார். இதைத் தான் மற்றொரு பகுதியிலும், இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்து, “நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” (மத்தேயு 20:22) என்கின்றார். நமது வாழ்வின் துன்பத்தை அதாவது சிலுவைகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு மனநிலை இன்று நமக்கு தேவை. இன்று நாம் எதிர்பார்ப்பதெல்லாம் துன்பமில்லாத ஒரு வாழ்வு, நம்முடைய வாழ்க்கையில் நாம் துன்பம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதைத் தான் நினைக்கின்றோம். ஆனால் நமது வாழ்க்கை இன்பமும் துன்பமும் நிறைந்த இரண்டு பக்க நாணயம் என்பதை நாம் உணர்ந்து பார்ப்பதே இல்லை. நம் வாழ்வின் சிலுவைகள் வாழ்வு தருவதாக உள்ளது. ஆதாமிடம் இறைவன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து வாழ அழைப்பு கொடுக்கின்றார். யோபு துன்பத்தை ஏற்று, அனைத்தையும் இழந்ததால் தான் இறைவனில் இணைந்தார். கோதுமை மணி மண்ணில் மடிந்தால் தான் மிகுந்த பலனை அளிக்கும் என்கிறார் இயேசு. ஊதாரி மைந்தன் உவமையில் இளைய மகன் துன்பத்தை எற்றவுடன் தான் வாழ்வை உணர்கின்றான்.இவையனைத்துக்கும் மேலாக இயேசுவின் சிலுவைச் சாவு நமக்கு பாவத்திலிருந்து விடுதலை கொடுத்தது. மெழுகு உருகுவதால் தான் ஒளி கிடைக்கிறது. கல் உளி கொண்டு அடிபடுவதால் தான் சிற்பமாக மாறுகிறது. விதை மடிவதால் தான் செடி வளர்கிறது. ஒவ்வொரு புது வாழ்வுக்கும் சிலுவை என்னும் துன்பங்கள் அடித்தளமாக இருப்பதைப் பார்க்கின்றோம். புனித அல்போன்சா கிறிஸ்தவ வாழ்வில் சிலுவை என்னும் துன்பத்தை ஏற்றுக் கொண்டதால், கிறிஸ்துவின் சிலுவை துன்பத்தில் தன்னை இணைத்து கொண்டதால் திருஅவையில் புனிதையாக உயர்த்தப்பட்டு இருக்கின்றார். திருஅவையின் அனைத்து மறைசாட்சியர்ளும், புனிதர்களும் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு நிலையில் துன்பத்தை வாழ்விலே உணர்ந்து ஏற்றுக் கொண்டதால் தான் அவர்கள் கிறிஸ்துவில் புது வாழ்வு பெற்றார்கள்

மற்றவரை சிலுவையாக நினையாமல் வாழ்வோம்:-                                                     

  ஒருமுறை குருவானவர் ஜெப வழிபாட்டில் எல்லோரும் உங்களுடைய சிலுவையை உயர்த்திப் பிடியுங்கள் என்று கூறிய பொழுது, ஒருவர் மட்டும் தன்னுடைய மனைவியை தூக்கி பிடித்தாராம். நம்முடைய மனைவி, கணவர், பெற்றோர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள் நண்பர்கள், உற்றார் உறவினர்கள், எதிர் வீட்டுக்காரர்கள், நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் என யாவற்றையும் துன்பமாக நினைக்கின்றோம். நாம் அதனால் கிடைக்கின்ற புது வாழ்வைப் பெறாமலே போகின்றோம். நமது வாழ்க்கையில் எல்லோரும் நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடைகள் நம்முடைய பொறுப்புகள் இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் என்பதை நாம் உணர வேண்டும். இன்றைக்கு நம்முடைய கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களை குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நோயாளிகளை சிலுவையாக நினையாமல் வாழ்வதற்கு இயேசுவின் சிலுவை அழைப்பு தருகிறது.

             இன்று நாமும் சிலுவை மனித வாழ்க்கையின் ஒரு அங்கம், இது எனக்கு புது வாழ்வைத் தரக்கூடிய ஒரு பயிற்சிப் பாசறை என்பதை உணர்கின்ற பொழுது நம்முடைய வாழ்வில் புது வாழ்வு உருவாகும். இதை நம்முடைய வாழ்க்கையில் உணர்கின்ற மனநிலையை ஏற்று இச் சிலுவையை முத்தமிடுவோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF

காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...


பாஸ்கா திருவிழிப்பு

           முதல் வாசகம்:  தொடக்க நூல் 1: 1- 2: 2
 இரண்டாம் வாசகம்:  தொடக்க நூல் 22: 1-18
    மூன்றாம் வாசகம்:  விடுதலைப் பயணம் 14: 15- 15: 1
   நான்காம் வாசகம்:   எசாயா 54: 5-14
       ஐந்தாம் வாசகம்:  எசாயா  55: 1-11
        ஆறாம் வாசகம்:  பாரூக்கு 3: 9-15, 32- 4: 4
          ஏழாம் வாசகம்:  எசேக்கியேல் 36: 16-17a, 18-28
                    திருமுகம்:  உரோமையர் 6: 3-11
  நற்செய்தி வாசகம்:  லூக்கா 24: 1-12

கிறிஸ்தவர்களின் உயிர்ப்பு

Jeff Bezos இந்த உலகின் மிகப்பெரிய இணையதள வர்த்தக சேவை நிறுவனமான அமேசானின் நிறுவனர் ஆவார். 1994 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெறும் புத்தகங்களுக்கு என்று தனது இணையதள வர்த்தக சேவையை எளிமையாக தொடங்கி, பின்பு மக்களுக்கு பயன்படுகின்ற துணிகள், பொருட்கள், மின்னணு சாதனங்கள், இசை, திரைப்படங்கள் மற்றும் பண பரிமாற்றம் என அனைத்திற்கும் தனது இணையதள சேவையை விரிவுபடுத்தி உலகில் எண்ணற்றோர் பயன்படுத்த கூடிய மிகப்பெரிய இணையதள வர்த்தக சேவையாக மாறியிருக்கின்றது. வெறும் 25 ஆண்டுகளில் மகத்தான வெற்றி பெற்று உலகின் இணையதள வர்த்தக சேவையில் முதலிடம் பெற்ற இந்த நிறுவனமும் அதன் தலைவர் ஜெஃப் பேசோஸூம் மிக எளிதாக இந்நிலையை அடையவில்லை. எண்ணற்ற சவால்களையும் போராட்டங்களையும் இதற்காக அவர் சந்தித்தார். முதன் முதலாக வர்த்தகத்திற்கு என்று ஒரு இணையதள சேவை துவங்கலாம் என்னும் யோசனையை தன்னுடைய சகபணியாளர்களுடன் சொன்னபோது எல்லோரும் அவரைப் பார்த்து சிரித்தார்கள். பின்பு இதை அவர் தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சொன்ன போது கூட அவரைப் பார்த்து எல்லோரும் சிரித்தார்கள். அவருக்கு யாரும் எவ்விதமான உற்சாகத்தையும் மற்றும் நம்பிக்கையையும் தரவில்லை. இந்நிறுவனத்தை அவர் முதன் முதலாக அமெரிக்காவிலே ஆரம்பிக்கலாம் என்று சென்ற பொழுது அவருடைய இந்த நிறுவனத்தில் பணி செய்ய எவரும் அவரை நம்பி வரவுமில்லை. இந்த நிறுவனத்தை ஆரம்பித்த பிறகும் கூட பலமுறை அமேசான் குடோன்களில் இருக்கின்ற பணியாட்கள் மயங்கி விழுகிறார்கள் மற்றும் அவர்களுக்கு ஓய்வின்றி வேலை தரப்படுகிறது என்று அமேசான் நிறுவன ஊழியர்கள் போராட்டம் கூட நடத்தினார்கள். அமெரிக்காவில் வாஷிங்டன் என்னும் பத்திரிகையை நடத்தி வந்த இந்த நிறுவனம் அப்பொழுது அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் பற்றிய செய்திகளை வெளியிட்டதால், அந்நாட்டு அதிபரான அவர் இந்நிறுவனத்தை குப்பையென விமர்சித்தது ஊடகங்களில் வெளியானது. இந்தியாவில் இந்நிறுவனம் பல தெய்வங்கள் கொண்ட புகைப்படமிருக்கும் காலணிகள் மற்றும் கழிப்பிட பொருட்களை விற்பனைக்கு வெளியிட்டதாகவும், மேலும் ஐந்து மா இலைகள் 5000 ரூபாய்க்கு விற்றதாகவும் பலரால் விமர்சிக்கப்பட்டது. இன்னும் பல முறை பலரால் இந்நிறுவனம் எண்ணற்ற விமர்சனங்களையும் மற்றும் சவால்களையும் சந்தித்த போதும் கூட, இன்றும் எல்லோருடைய உள்ளங்களிலும் பதிந்த மற்றும் எல்லோரும் பயன்படுத்த கூடிய உலகின் முதல் தரமான ஒரு நிறுவனமாக இருந்து வருகின்றது. ஒரு நிறுவனம் தனது சேவையில் இறந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட கூடிய அளவில் எண்ணற்ற சவால்களை சந்தித்திருந்தாலும், அது கல்லறையில் மடிந்தே கிடக்காமல் மீண்டுமாக விருட்சமாக உயிர்த்தெழுந்து இன்றைக்கும் மக்கள் மத்தியிலே முதல்தர வர்த்தக இணையதள சேவை நிறுவனமாக இருக்கிறது. இது தான் இன்றைக்கு நாம் கொண்டாடி மகிழும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நம் ஒவ்வொருவருக்கும் தரக்கூடிய செய்தியாக இருக்கிறது.

முன்னறிவிக்கப்பட்ட உயிர்ப்பு
      ஆண்டவர் எப்படி தன் மரணத்தை முன்னறிவித்தாரோ அப்படியே தன் உயிர்ப்பையும் பல முறை முன்னறிவித்தார். "இக்கோவிலை இடித்துவிடுங்கள்: நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்" (யோவான் 2:18-23) என்று முன்னறிவித்தார். மறைநூல் அறிஞர்கள் அடையாளம் கேட்கின்ற போது யோனாவைக் குறிப்பிட்டு அவர் மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார். என்று சொல்லி தன் உயிர்ப்பை அடையாளப்படுத்துகிறார். மேலும் எப்பொழுதெல்லாம் தன் பாடுகளையும், மரணத்தையும் பற்றி பேசினாரோ, அப்போதெல்லாம் தன் உயிர்ப்பையும் முத்தாய்ப்பாக குறிப்பிடுகிறார் (மாற்கு 8:31, 9:31, 10:34). தன் இறுதி பாஸ்கா உணவின் போது கூட "நான் உயிருடன் எழுப்பப்பட்ட பிறகு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்கு போவேன்" என்று இறுதியாக நினைவூட்டுகிறார்.

இயேசுவோடு உயிர்ப்போம்
இயேசு சிலுவை சுமந்து, இறந்து மற்றும் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டாலும் மீண்டுமாக கல்லறையை பிளந்து விருட்சமாக உயர்த்தெழுந்தார். இன்றைக்கு மனித வாழ்க்கையிலே நாம் மீண்டும் மீண்டுமாக சவால்களால் புதைக்கப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டாலும் இயேசுவை போல மீண்டும் உயிர்த்தெழ வேண்டும். புது வாழ்வை எதிர்நோக்கி பயணிக்க வேண்டும். இயேசுவின் மரணம் கல்லறையோடு நின்றிருந்தால் இன்று திருச்சபைக்கு வழியில்லை கிறிஸ்தவத்திற்கு வேலையில்லை. அவருடைய உயிர்ப்பில் தான் நம் விசுவாசம் நங்கூரமிடப்பட்டிருக்கிறது: திருச்சபை பிறந்திருக்கிறது: கிறிஸ்தவம் தழைத்திருக்கிறது. இதுவரை வரலாற்றில் நாசரேத்தூர் இயேசுவாக அறியப்பட்டவர், இன்று கிறிஸ்துவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறார். பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு இறை வாக்குகளின் நிறைவு தான் இயேசுவின் உயிர்ப்பு. இது இயேசுவினுடைய வாழ்வு மற்றும் அவருடைய பணி அனைத்தையும் அங்கீகரிக்கிறது. இயேசு நிக்கதேமிடம் "மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகின்றேன்" என்றார். மேலும் "ஒருவர் தண்ணீராலும், தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது" எனக் கூறினார், ஆகவே நாம் கிறிஸ்துவில் மற்றும் கிறிஸ்துவோடு உயிர்ப்போம்.

பாவத்திலிருந்து உயிர்ப்போம்
இன்றைய திருவழிபாட்டை நாம் ஒளியோடு துவங்கினோம். இயேசுவின் உயிர்ப்பு நம் ஒவ்வொருவருக்கும் ஒளியை தருகின்றது. பாவம் என்னும் இருளாக மறைந்து கிடக்கும் நம் வாழ்வு இயேசுவின் உயிர்ப்பு என்னும் ஒளியை பெற வேண்டும். முதல் மனிதன் செய்த பாவத்தால் எழுந்த இருளானது இயேசுவினுடைய இறப்பு மற்றும் உயிர்ப்பில் ஒளியாக ஒவ்வொருவருக்கும் தரப்படுகிறது. எகிப்திலே அடிமையாக இருளான வாழ்விலே மூழ்கிக் கிடந்த மக்களின் வாழ்வில் ஒளியானது ஏற்றப்படுகிறது அதாவது விடுதலை தரப்படுகிறது. இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரையும் கிறிஸ்துவை போல பாவ வாழ்விலிருந்து இறந்து மீண்டுமாக புதிய வாழ்வுக்கு உயிர்த்தெழ அழைப்பு தருகிறது. குறிப்பாக நமது பாவம், துன்பம், அடிமைத்தனம் என்னும் இறப்பிலிருந்து உயிர்த்தெழுவோம். புனித லியோ சொல்வதைப்போல இது தான் திருவிழாவுக்களுக்கெல்லாம் திருவிழாவாகும் (The feast of feasts). ஆகையால் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் போதெல்லாம் நாம் உயிர்த்தெழுந்த சமூகமாக ஒளிர்ந்திட வேண்டும். அவர் இறந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில் அவர் உயிர்த்தெழுந்தது போலவே, நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம். அவரோடு இறந்தோமாயின் அவரோடு வாழ்வோம். (உரோ 6:5,8).

அனுபவமாகும் உயிர்ப்பு
உண்மையான நற்செய்தி அறிவிப்பு அல்லது கிறிஸ்தவ வாழ்வு என்பது கிறிஸ்துவுக்கு நடந்ததை தியானிப்பதும் மற்றும் அதில் பங்கெடுப்பதும் மட்டுமல்லாது அவருடைய உயிர்ப்பையும் நமது வாழ்க்கையிலே வாழ்ந்து காட்டுவதாகும். இயேசுவின் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பு நமது வாழ்வின் அனுபவமாக மாற வேண்டும். அதுதான் சாட்சிய வாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்லும். கிறிஸ்தவத்தை அழித்தொழிக்க வாளோடு புறப்பட்ட சவுல் ஆண்டவருடைய உயிர்ப்பு அனுபவத்தின் வழியாகத்தான் திருச்சபையைக் கட்டியெழுப்பும் மகத்தான பணியை செய்தார். அவரே இதனை பல இடங்களில் ஒப்புக்கொள்கிறார் (1கொரி 15:3-8. திப9:3-9, 22:6-11, 26:12-18) ஆண்டவருடைய உயிர்ப்பு அனுபவமே மிக தைரியமாக பேதுருவை சாலமோன் மண்டபத்திலும், யூத தலைமை சங்கத்திலும் சாட்சியம் பகர வைத்தது (திப 3:15). ஈஸ்டர் பெருவிழா கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் இறையனுபவத்தின் படிக்கட்டு.

அகற்றப்பட்ட கல்
இன்றைய நற்செய்தி பகுதியில் விடியற்காலையில் நறுமணப்பொருட்களோடு, பெண்கள் கல்லறையை நோக்கி சென்ற போது கல்லறை வாயிலிலிருந்த கல்லானது அகற்றப்பட்டு இருந்ததை கண்டார்கள். நம்முடைய வாழ்க்கையிலும் நம்முடைய உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கின்ற பல கற்கலானது அகற்றப்பட வேண்டும். அப்போது தான் நம்முடைய உள்ளத்திலிருக்கின்ற தேவையற்ற பழக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் உயிர்த்தெழும்.

சுருட்டி வைக்கப்பட்டிருந்த துணி
சுருட்டி வைக்கப்பட்டிருந்த துணி இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சியாக அமைந்தாலும் இன்றைக்கு இத்துணியைப் போல நமது உள்ளத்தில் பலவிதமான கவலைகள், பாரங்கள், கஷ்டங்கள் மற்றும் கடன் தொல்லைகள் சுருட்டி வைக்கப்பட்டிருக்கின்றது. இது நம்மை ஒவ்வொரு நாளும் வாழ விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றது, இவற்றிலிருந்து நாம் உயிர்த்தெழ வேண்டும்.

இன்னும் நமது சுயநலம், பொறாமை, ஏற்றத்தாழ்வு உணர்வு, கோபம், அதிகாரம், நேர்மையற்ற தன்மை மற்றும் பிறரை பழிவாங்கும் எண்ணம் என இவையனைத்துமே நமது உள்ளமென்னும் கல்லறையில் பல ஆண்டுகளாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது, இவற்றிலிருந்து நாமும் இயேசுவோடு இணைந்து உயிர்த்தெழுவோம்"அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம்" (உரோமையர் 6:5). இன்றைக்கு ஆண்டவர் இயேசுவினுடைய உயிர்ப்பு கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தர வேண்டுமென்றால் இன்றைக்கு கிறிஸ்துவோடு சேர்ந்து நாமும் உயர்த்தப்பட வேண்டும். நமது வாழ்க்கையில் இன்னும் பல செயல்பாடுகளில், பல எண்ணங்களில் மற்றும் வார்த்தைகளில் உயிர்த்தெழ வேண்டும். அதாவது கிறிஸ்துவில் மறுபிறப்பு எடுக்க வேண்டும் என்பதை உள்ளத்தில் ஏற்போம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துகள்.

அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF

                       காணொளியில் காண/ஆடியோவில் கேட்க ...