Thursday, March 31, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - தவக்காலம் 5-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) -----03-04-2022 - ஞாயிற்றுக்கிழமை


 முதல் வாசகம்: எசாயா 43: 16-21

இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 3: 8-14

நற்செய்தி:  யோவான் 8: 1-11

இயேசு தந்த கண்ணாடி
(உன்னை பார்க்க பிறரை அல்ல…)

ஒருமுறை அம்மா தன்னுடைய குழந்தையிடம் சென்று அந்த குழந்தையின் கைகளிலிருந்த இரண்டு ஆப்பிள் பழங்களை கண்டு, "அம்மாவுக்கு ஒன்று கொடு செல்லம்" என்று கேட்கிறாள். உடனே அந்த குழந்தை மிக வேகமாக இரண்டு ஆப்பிள் பழங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக தன்னுடைய வாயில் கடித்து விட்டது. இதைக்கண்ட அந்த அம்மாவுக்கு ஒரே வருத்தம் நமது குழந்தையே இவ்வளவு சுயநலமாக இருக்கிறதா! என்று எண்ணினாள். அடுத்த நொடியே அந்த குழந்தை "அம்மா இந்த ஆப்பிள் பழத்தை சாப்பிடுங்கள், இதுதான் சுவையாக இருக்கிறது" என்று ஆப்பிளை கொடுத்ததாம். அப்பொழுது தான் அந்த தாய்க்கு புரிந்தது, தனக்கு மிக இனிப்பான ஆப்பிளை தருவதற்காகவே குழந்தை இரண்டு ஆப்பிளையும் கடித்து சுவைத்திருக்கிறது. ஒரு நொடியில் என்னுடைய குழந்தையை தவறாக புரிந்து விட்டேனே! என்று உணர்ந்து கொண்டாள். இன்றைக்கு மனித வாழ்க்கையும் இப்படி தான், எப்பொழுதும் பிறரை பார்ப்பது, பிறருடைய தவறை சுட்டிக்காட்டுவது மற்றும் பிறரை தவறாக புரிந்து கொள்வது என்று எப்பொழுதும் அடுத்தவரை நோக்கியே நமது கண்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. நம்மை பார்க்க நமது கண்கள் மறந்து விடுகிறது.

உன்னைப்பார்:-
  கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, இந்நாளில் இறைமகன் இயேசு கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் கண்ணாடி ஒன்றை தருகின்றார். இந்த கண்ணாடி நம்முடைய முகத்தையும் மற்றும் அழகையும் பார்ப்பதற்காக அல்ல, மாறாக அகத்தை பார்ப்பதற்காக. அதாவது நம் தவறுகளை மற்றும் பாவங்களை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்காக. ஆம், இயேசு தருகின்ற இந்த கண்ணாடியின் வழியாக நாம் பிறரது தவறுகளை சுட்டிக்காட்டாமல், நமது தவறுகளை பற்றி தெரிந்து அதிலிருந்து மீண்டு வர அழைப்பு தருகிறார். நம்முன் விடுதலை நாயகனாக காட்சி தருகிறார், இது தான் இன்றைய நற்செய்தி காட்டும் வழி. இன்றைய நற்செய்திப் பகுதியில் மறைநூல் அறிஞர்களும் மற்றும் பரிசேயர்களும் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் ஒருவரை இறைமகன் இயேசு கிறிஸ்து முன்பாக கொண்டு வருகிறார்கள். யூத முறைப்படி விபச்சாரம் என்பது மரண தண்டனைக்குரிய மிகப்பெரிய தவறு மற்றும் பாவமாக கருதப்பட்டது (லேவியர் 20:10, இணைச்சட்டம் 22:13-24).
யூத சட்டப்படி பரிசேயரும், மறைநூல் அறிஞரும் கூறியது சரி தான், விபச்சாரத்தில் பிடிபட்ட பெண் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும். ஆனால் இங்கு இயேசு சட்டங்களையும், அவர்களின் சூழ்ச்சிகளையும் மற்றும் கேள்விகளையும் தாண்டி, அவர்களிடம் கண்ணாடி ஒன்றை தருகிறார். அப்படியென்றால் மறைநூல் அறிஞர்களிடமும் மற்றும் பரிசேயர்களிடமும் அப்பெண் செய்த பாவத்தை அதாவது விபச்சாரத்தை சுட்டி காட்டுவதற்கு முன்பு நீங்கள் செய்த பாவத்தை முதலில் உணருங்கள் என்று குறிப்பிடுகிறார். பிறரை, பிறரது பாவங்களை சுட்டிக் காட்டுவதற்கு முன்பு, நாம் நம்மை நமது பாவங்களை கண்டறிந்து அதிலிருந்து மீண்டு வருபவர்களாக மாற வேண்டும் என்னும் ஒரு அழைப்பை இறை மைந்தன் நமக்கும் தருகிறார்.

உன் பாவங்களை அறிந்து கொள்:
நம்மை அறிந்து கொள்வதே கடவுளை அறிந்து கொள்வதற்கான திறவுகோல். நம்மை அறிந்து கொண்டால் கடவுளை, அவர் நம்மிடமிருந்து எதிர் பார்ப்பவற்றை அறிந்து கொள்ள முடியும். அதுவே நம் பாவங்களை உணர செய்யும் மற்றும் புது வாழ்வுக்கு வழிவகை செய்யும். புத்திசாலியாக இருக்க உன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் சாக்ரட்டீஸ். நம்மை அறிந்து கொள்வது நம்மை தெளிவாக்கும், தெளிவான வாழ்வு புத்திசாலித்தனத்தின் அடையாளம். மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் மத்தியில் இயேசுவின் வார்த்தையும் அவருடைய செயலும் அவர்கள் அவர்களின் தவறை பார்க்க அழைப்பு தருகிறது. அத்தகைய ஒரு சூழலிலும் அமைதியாக இயேசு தரையில் குனிந்து, தன் ஒரு விரலால் எழுதிக்கொண்டிருக்கும் செயலும் (யோவான் 8:6) மற்றும் "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண் மேல் கல் எறியட்டும்" (யோவான் 8:7) எனும் வார்த்தையும் அவர்களுக்கு இயேசு தருகின்ற கண்ணாடி. அதாவது, பிறரது குற்றங்களை பார்க்காமல் உங்களது குற்றங்களை பாருங்கள் என இயேசு தரும் அழைப்பு. "உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?" (மத்தேயு 7:1). என்னும் இயேசுவின் வார்த்தைகளும் இங்கு செயல் வடிவம் பெறுகிறது. இறுதியாக இயேசு அப்பெண்ணிடம் "இனி பாவம் செய்யாதே" (யோவான் 8:11) என்று கூறுகின்ற வார்த்தைகள் அந்தப் பெண்ணிடம் கூட உன்னை, உன் நிலையை மற்றும் உனது பாவங்களை பார்த்து, அதிலிருந்து மீண்டு மகிழ்வான ஒரு வாழ்வை வாழ அழைப்பு தருவதாக அமைகின்றது.
இவ்வாறாக இயேசு அந்த பெண்ணிற்கு உடல் தண்டனையிலிருந்து மற்றும் உள்ளத்து பாவத்திலிருந்து விடுதலை தருகிறார். அன்று ஆதாம்-ஏவாள் பாவம் செய்தபோது கூட இறைவன் முன்பாக, பெண் தான் கொடுத்தாள் மற்றும் பாம்பு தான் என்னை வஞ்சித்தது என்று பிறரை தான் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். ஆதனால் தான் அவர்களின் பாவங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. இன்று நாம் "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்" (மத்தேயு 7:1) என்னும் இயேசுவின் வார்த்தைகளுக்கு வாழ்வு கொடுக்க அழைப்பு பெறுகின்றோம்.

மனந்திரும்பி இயேசுவிடம் செல்:-
பொதுவாக யானையை பற்றி சொல்லக் கூடிய ஒன்று. யானை எப்பொழுது நீர் குடிப்பதற்காக குளத்தை நோக்கி சென்றாலும், குளத்தின் நீரானது தெளிந்து மிக தூய்மையாக முகம் தெரிகின்ற அளவுக்கு இருந்தாலும், யானை அந்நீரை கலக்கி விட்டு தான் தண்ணீரை குடிக்குமாம். ஏன்? அது சுத்தமான நீரை அருந்தாமல் அதை கலக்கி விட்டு குடிக்கின்றது என்று சிந்திக்கின்ற பொழுது, யானை சுத்தமான நீரில் அதனது முகத்தை பார்க்கின்ற பொழுது நம்மை விட நமக்கு போட்டியாக மற்றும் நம்மை கொல்வதற்காக ஒரு மிருகம் வந்து விட்டது என எண்ணி நீரை கலக்கி விடுகிறதாம். இன்றைக்கு மனித வாழ்க்கையும் இப்படித்தான் கண்ணாடியிலே நாம் நம்மை அதாவது நமது பாவங்களை பார்க்கின்ற பொழுது, அதை மறைப்பதற்காக, நீரை கலக்கி விடுவது போல பிறருடைய பாவங்களை சுட்டிக்காட்டி, தீர்ப்பிடுகின்றோம். இந்நிலையிலிருந்து நாம் மாறி, நமது பாவங்களையும் ஏற்று மனம் மாறுவோம். சிறிய வயதிலிருந்தே தம்பிக்கு மட்டும் இரண்டு தோசை, அடுத்த வீட்டு பையன் மட்டும் முதல் மதிப்பெண், அக்காவுக்கு மட்டும் புது துணி என எப்பொழுதும் மற்றவரை பார்த்து பார்த்து பழகிப் போய் விட்டோம். அதனால் தான் என்னவோ தெரியவில்லை தவறு செய்தால் கூட அவன் தான் செய்தான் மற்றும் அவள் தான் செய்தாள் என்று பிறரை சுட்டிக் காட்ட முயலுகின்றோம், ஆனால் நம்மை நாம் ஒருநாளும் பார்ப்பதே இல்லை. பிறரைப் பார்த்து மற்றும் அவர்களுக்காக வாழ்ந்து, நமக்காக வாழ வேண்டும் என்பதை மறந்து விடுகின்றோம். அதனால் தான் நாம் செய்கின்ற தவறு கூட, மற்றவரும் செய்திருந்தால் அது நமக்கு பெரிய தவறாக தெரிவதே இல்லை.
இங்கு எல்லோரும் தானே தவறு செய்கிறார்கள் என்று மற்றவரை தான் நாம் பார்க்கிறோமே தவிர, நம்மை ஒருபோதும் பார்ப்பதில்லை. இன்று இயேசுவின் வழியில் நம்மை மற்றும் நமது பாவங்களை பார்ப்போம். அதிலிருந்து புதுவாழ்வு வாழ இயேசுவிடம் செல்லுவோம். அவர் தரும் மன்னிப்பை பெறுவோம். "உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்" (பிலிப்பியர் 3:8) என்னும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப நாம் நம் நிலையை உணர்ந்து, பாவத்தை விட்டு விலகி புதுவாழ்வு வாழ இந்த தவக்காலத்தில் முயற்சி செய்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF

 

 காணொளியில்/ஆடியோவில்  காண...

https://youtu.be/MMjmoELMMPg



 



Thursday, March 24, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - தவக்காலம் 4-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) -----27-03-2022 - ஞாயிற்றுக்கிழமை

 


முதல் வாசகம்: யோசுவா 5: 9a, 10-12

இரண்டாம் வாசகம்: கொரிந்தியர் 5: 17-21

நற்செய்தி:  லூக்கா 15: 1-3, 11-32
ஊதாரி மைந்தன் யார்?

கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, தவக்காலத்தின் நான்காவது ஞாயிற்றுக் கிழமையில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம். இது லெத்தாரே ஞாயிறு (அதாவது அகமகிழ்வின் ஞாயிறு) என்றும் அழைக்கப்படுகிறது.
அந்த மடத்தில் இருக்கிற ஞானியை தேடி ஒரு நபர் வந்திருந்தார். "ஐயா! நான் ஒரு குடிகாரன், இந்த குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை பெற எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்" என்று கேட்கிறார். அதற்கு அந்த ஞானி "நாளை மாலை வந்து என்னை பார்" என்று கூறுகிறார். அடுத்தநாள் அந்த குடிகாரன் ஞானியை தேடி வருகிறார். அப்பொழுது, அந்த ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ஐயோ என்னை விட்டுவிடு என்று கத்திக் கொண்டிருக்கிறார். இதைப்பார்த்த அந்த குடிகாரன் ஐயா அந்த தூண் உங்களை பிடித்திருக்கவில்லை, நீங்கள் தான் அந்த தூணை கட்டிப்பிடித்திருக்கிறீர்கள் என்று கூறுகிறார்.
அதற்கு அந்த ஞானி, சிரித்துக்கொண்டே அவரைப் பார்த்து நான் இந்த தூணை பிடித்துக் கொண்டிருந்தது போல, நீயும் குடிப்பழக்கத்தை பிடித்துக் கொண்டிருக்கிறாய். அது உன்னை பிடிக்கவில்லை, நீ தான் அதை பிடித்திருக்கிறாய், எனவே நீ தான் அதை விட வேண்டும் என்று கூறுகிறார். இது வெறும் குடிப்பழக்கத்திற்கு மட்டுமல்ல, நமது வாழ்க்கையில் தேவையற்று இருக்கின்ற பல எண்ணங்கள், செயல்கள் மற்றும் வார்த்தைகளிலிருந்து நாம் விடுபட நாம் பிடித்து வைத்திருப்பதிலிருந்து அதாவது அடிமையாய் இருப்பதிலிருந்து விடுபட வேண்டும். இத்தகைய ஒரு அழைப்பை தான் இன்று பெறுகிறோம். இன்றைய நற்செய்தியில் தன்னுடைய வாழ்க்கையில் தேவையற்றதை பிடித்து வைத்திருந்த இரு மகன்களைப் பற்றி பார்க்கின்றோம். ஒருவன் அதை உணர்ந்து அதை விட்டு வருகின்றான், மற்றொருவன் அதை உணராமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
நம்முடைய சிந்தனைக்காக நற்செய்தி பகுதியாக நாம் அதிக தடவை கேட்டு தெரிந்த ஊதாரி மைந்தன் கதையானது தரப்பட்டிருக்கிறது. ஒரு தந்தையையும் மற்றும் இரு மகன்களையும் வைத்து இறைமகன் இயேசு கிறிஸ்து எடுத்துரைக்கின்ற இந்த நிகழ்வில் நாம் அதிகம் சிந்திப்பது இளைய மகன் மற்றும் தந்தையை பற்றி தான். உண்மையாகவே இளைய மகன் தந்தையை விட்டு பிரிந்து, ஊதாரித்தனமாக வாழ்ந்தாலும், அவன் தன்னிலையறிந்து, மீண்டுமாக தந்தையிடம் வந்து அவருடைய மன்னிப்பையும் மற்றும் இரக்கத்தையும் பெற்றான். ஆனால் தந்தையோடு உடனிருந்து, அனைத்து வேலைகளையும் செய்த மூத்த மகன் அவர் அருகில் இருந்தாலும், உள்ளத்தளவில் தந்தையைப் பிரிந்து தன் எண்ணங்களில் ஊதாரித்தனமாக வாழ்ந்திருக்கின்றான். இந்நிகழ்வின் இறுதிப்பகுதி மூத்த மகனை பற்றி கூறினாலும், அவனது சிந்தனைகளும், செயல்களும் மற்றும் தந்தையிடம் அவன் பேசிய வார்த்தைகளும் அவன் எண்ணத்தால் தந்தையை விட்டுப் பிரிந்து வாழ்ந்த சூழலை நமக்கு எடுத்துரைக்கிறது.


1. அவனது சினம்:- வயலிலிருந்து வந்த மூத்த மகன் தனது வீட்டில்
நிகழ்ந்த ஆடல் பாடல்களை கேட்டு, தன் வீட்டுப் பணியாளர் மூலமாக தனது தம்பி வந்திருக்கின்றார் என்று கேள்விப்பட்டதும் சினம் கொள்கிறார். அவன் ஒரு நாளும் தன் சகோதரன் தன்னோடு இல்லை என்ற கவலையில்லாமல் வாழ்ந்ததையும், அன்பு செய்யாமல் இருந்ததையும், மேலும் தனக்கு சகோதர உறவு இல்லையே என்ற வருத்தம் அவனில் துளிக்கூட இல்லை என்பதை இது காட்டுகிறது. சாதாரணமாக, நம் உறவுகள் நம்மோடு இல்லாமல், மீண்டும் அவர்கள் நம்மிடம் வந்தால் அதை கண்டு நாம் மகிழ தான் செய்வோம். ஆனால், இவன் அதை நினைத்து கோபம் கொள்கின்றான், அதே கோபத்தை தன் தந்தையிடமும் வெளிப்படுத்துகின்றான்.

2.வீட்டிற்குள் செல்லாமை:-
அவனது உள்ளத்தில் எழுந்த சினத்தை வீட்டிற்குள் செல்லாமல் செயலில் காட்டுகின்றான். அதன் விளைவாக அவனைப் பெற்று வளர்த்தெடுத்த தந்தை அவனை வீட்டிற்குள் வர வைப்பதற்கு கெஞ்சுகிறார். தன் சொந்த தம்பி வந்ததை நினைத்து மகிழாமல், அதை நினைத்து சினமுற்று வீட்டிற்குள் செல்லாமலிருப்பது அவனது நினைவுகள், ஊதாரித்தனமாக இருந்ததை எடுத்துரைக்கிறது.

3. அடிமை போன்று வேலை செய்தேன்:- அவனது கோபத்தையும் மற்றும் வீட்டிற்குள் செல்லாமலிருந்த நிலையையும் தாண்டி, தான் அடிமை போன்று இந்த வீட்டில் வேலை செய்தேன் என்று கூறுகிறான்.
இந்த வார்த்தைகள் அவன் தன் தந்தையை ஒரு நாளும் தந்தையாக நினையாது, முதலாளியாக நினைத்திருக்கின்றான் என்பதை காட்டுகின்றது. மேலும், அந்த வீட்டில் அவனும் ஒரு மகன் என்னும் உறவை ஒரு போதும் உணர்ந்ததே இல்லை என்பதையும் இது நமக்கு காட்டுகிறது. ஆக அவன் தன் குடும்பத்திலிருந்து, தந்தையின் உறவிலிருந்து மற்றும் சகோதரனின் உறவிலிருந்து ஊதாரித்தனமாக இருந்திருக்கின்றான் என்பது தான் உண்மை. அந்த வீட்டில் அவனும் ஒரு பிள்ளை என்று கூறாமல் அடிமை என்று கூறியது அவன் தந்தையின் உறவிலிருந்து வெகுதூரத்தில் வாழ்ந்திருக்கின்றான் என்பதை எடுத்துரைக்கிறது.

4. ஓர் ஆட்டுக்குட்டிக்கூட தரவில்லை:-
நான் என் நண்பரோடு மகிழ்ந்து கொண்டாட ஒரு ஆட்டுக்குட்டியை கூட நீர் எனக்கு தந்ததே இல்லை என மூத்த மகன் தன் தந்தையை பார்த்து கூறுகின்றான். இது அவன் உறவில் மட்டுமல்ல அவனது உடமைகளிலும் கூட அவன் ஊதாரித்தனமாக தான் இருந்திருக்கின்றான் என்பதை காட்டுகிறது. அப்படியென்றால் அவன் ஒரு நாளும் தன் தந்தையிடம் அவனது ஆசைகளை வெளிப்படுத்தவில்லை என்றும், குடும்பத்தில் ஒருவனாக தன்னை எண்ணவில்லை என்றும் புரிகிறது. இவையெல்லாம் மூத்த மகனின் பிரிவையும் மற்றும் ஊதாரித்தனத்தையும் எடுத்து காட்டுகிறது.

5. விலைமகளிரோடு:- தன் கோபத்தின் உச்சகட்டத்தில் தன் சகோதரனை பழித்துரைக்கவும் ஆரம்பிக்கின்றான். 'விலை மகளிரோடு சேர்ந்து சொத்துக்களையெல்லாம் அழித்தவன்' என்று தன்னுடைய சகோதரனை பற்றி சொல்கின்றான். இணையதளமும் மற்றும் மொபைல்
போனும் இல்லாத ஒரு காலகட்டத்தில் தன் சகோதரன் விலைமகளிரோடு சேர்ந்து சொத்துகளையெல்லாம் அழித்தான் என்று இவனுக்கு எப்படித் தெரியும்? விலை மகளிரை பற்றிய அறிவு இவனுக்கு எங்கிருந்து வந்தது? சொத்துக்களை அழித்தவன் என்று மட்டும் கூறாமல், விலைமகளிரோடு சேர்ந்து அனைத்தையும் அழித்தவன் என வீண்பழி கூறுகின்றான்.


6. உம் மகன்:- எவ்வாறு 'அடிமை' என்ற வார்த்தை மூத்த மகனை தந்தையின் உறவிலிருந்து பிரித்தெடுத்ததோ, அதே போல 'உம் மகன்' என்னும் வார்த்தை அவனை தன்னுடைய சகோதரத்துவ நிலையிலிருந்து பிரித்தெடுப்பதாக இருக்கிறது. இது, அவன் தனது சகோதரத்துவத்திலும் ஊதாரியாக வெகுதொலைவில் வாழ்ந்திருக்கின்றான் என்பதை காட்டுகிறது.

மேற்சொன்ன இந்த ஆறு காரணங்களும் மூத்த மகன் தனது சிந்தனையால், சொல்லால் மற்றும் செயலால் தந்தையிடமிருந்தும், தன் சகோதரனிடமிருந்தும் மற்றும் குடும்பத்திலிருந்தும் பிரிந்து ஊதாரித்தனமாக வாழ்ந்திருக்கின்றான் என்பதை எடுத்துரைக்கிறது.
இன்று கிறிஸ்தவர்களாகிய நாமும் பலவேளைகளில் தந்தையாகிய இறைவனைப் பிரிந்து ஊதாரித்தனமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மது, மாது, பொருள், பணம், பதவி, பட்டம், செல்வம், உறவு, மொபைல்போன், லேப்டாப் மற்றும் சமூக வலைதளங்கள் என அனைத்திற்கும் அடிமையாகி, இறைவனைப் பிரிந்து ஊதாரித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பல வேளைகளில் இந்த மூத்த மகனைப் போல நாம் இறைவனோடு இருப்போம் மற்றும் அனைத்து ஜெப வழிபாடுகளிலும் பங்கேற்போம். ஆனால், நாம் உள்ளத்தளவில் பொறாமையுணர்வு, மற்றவரை ஏற்காத நிலை, பிறர் மீது வீண்பழி சுமத்துதல், நமது பெற்றோரை கஷ்டப்படுத்துதல், நாம் இறைவனின் மகன்/மகள் அதாவது கிறிஸ்தவன்/கிறிஸ்தவள் என உணராத நிலை மற்றும் கோபம் என இவையனைத்தும் நம்மில் இருக்கும் போது நம்மை அறியாமலே ஊதாரித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தந்தையின் மூத்த மகனும் மற்றும் நாமும் இத்தகைய நிலையிலிருப்பதற்கு இரண்டு காரணங்களை சொல்ல முடியும்.


1. சகோதரனின் தன்னிலை அறிதல் இல்லாமை

இளைய மகனும் ஊதாரித்தனமாக வாழ்ந்தான். ஆனால், தன் வாழ்வின் ஒரு காலகட்டத்தில், "அறிவு தெளிந்தவனாய், ‘என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ‘அப்பா,
கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்’ (லூக்கா 15:17-19) என்று சொல்லி தன்னிலையை உணர்ந்து தந்தையிடம் வந்தான். இது தான் அவனை ஊதாரித்தனத்திலிருந்து மீட்டெடுத்தது. நாம் எத்தகைய ஒரு பாவ குழிக்குள் விழுந்தாலும், தன்னிலையை உணர்கின்ற ஒரு மனநிலை நம்மில் ஏற்பட வேண்டும். இதைத்தான் மனமாற்றம் என்கின்றோம், மாற்றத்தோடு நாம் இறைவனை நோக்கி மீண்டும் வரவேண்டும், நாம் பயணித்துக் கொண்டிருக்கின்ற இந்த தவக்காலமும் அதற்கான ஒரு அழைப்பை தான் நமக்கு தருகின்றது. நம்மை, நம் பாவத்தை மற்றும் நம் வாழ்வை உணர்ந்து நாம் இறைவனை நோக்கி மீண்டும் வருவோம்.


2. தந்தையின் அன்பை மற்றும் இரக்கத்தை உணராமை

இளைய மகன் தன்னிலையை அறிந்து, தந்தையை நோக்கி வருகின்ற பொழுது, தந்தை ஓடோடி சென்று அவனை கட்டி அரவணைத்து முத்தமிட்டு கொழுத்த கன்றை அடித்து அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றார். இறைவன் நம்மீது அளவு கடந்த அன்பையும் மற்றும் இரக்கத்தையும் காட்டுபவராக இருக்கின்றார். நாமும் இளைய
மகனை போல மனமாற்றம் பெற்று அவரை நோக்கி வருகின்ற பொழுது, அவர் தன்னுடைய அன்பின் மிகுதியால் நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்கின்றார். இந்த மகிழ்ச்சியின் ஞாயிறுக்கு இன்றைய வாசகங்களும் முக்கிய காரணமாக அமைகின்றது. மனம்மாறி, பாவசங்கீர்த்தனம் செய்து, இறைவனை நோக்கி வந்து, அவருடைய மன்னிப்பையும் மற்றும் இரக்கத்தையும் பெறுகின்ற போது மனமகிழ்ச்சி நம்மில் ஏற்படுகின்றது. இந்த மகிழ்வை பெற தயாராக இருக்கின்றோமா? எத்தகைய ஒரு பாவ வாழ்க்கை வாழ்ந்தாலும், இளைய மகனைப்போல தன்னிலையை உணர்ந்து இறைவனுடைய இரக்கத்தை பெற தயாராக இருக்கின்றோமா? அல்லது மூத்த மகனைப் போல தன்னிலையை உணராது தந்தையின் இரக்கத்தைப் பெறாமல் கோபத்தோடு இருக்கப் போகின்றோமா? சிந்திப்போம்.
இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

அன்புடன்:-

அருட்பணிகுழந்தை யேசு ராஜன் CMF

 

 காணொளியில்/ஆடியோவில்  காண...





Saturday, March 19, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - தவக்காலம் 3-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) -----20-03-2022 - ஞாயிற்றுக்கிழமை

 


முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 3: 1-8a, 13-15

இரண்டாம் வாசகம்: கொரிந்தியர் 10: 1-6, 10-12

நற்செய்தி:  லூக்கா 13: 1-9


 கடைசி வாய்ப்பு
 
  ஒரு முறை குடும்பத்தில் தந்தை தன் மகனுக்கு புதிய மொபைல் போன் வாங்கி தருவதாக முடிவு செய்கின்றார், செய்தித்தாளை பார்த்தபொழுது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வந்திருந்தது. எனவே தன் மகனிடம் இருக்கின்ற பழைய செல்போனை கொடுத்துவிட்டு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் புதிய செல் போன் வாங்குவதற்கு யோசிக்கிறார். இதையறிந்த அவரது மனைவி 'எனக்கு போன் இல்லை, எனவே மகனின் பழைய மொபைல் போனை எனக்கு கொடுத்து விடுங்கள்' என்று கூறுகின்றார். தந்தையும் மகனின் பழைய போனை மனைவிக்கு தருவதாகவும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் மகனுக்கு புதிய போன் வாங்கித் தருவதாகவும் முடிவெடுக்கிறார்.
  இங்கு தந்தையின் முடிவு சற்று வேடிக்கையாகத்தான் இருக்கிறது. மொபைல் போனை எக்ஸ்சேஞ் ஆஃபர் கொடுத்து வாங்குகின்ற பொழுது எப்படி பழைய போனை மனைவியிடம் கொடுக்க முடியும். கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, இந்த மனிதர் நினைத்தது போலதான் இன்று நம்முடைய வாழ்க்கையும் அமைகின்றது. நான் மனமாற்றம் பெற வேண்டும், புதிய மனிதனாக இறைவனை நோக்கி செல்ல வேண்டும் என்று இந்த தவக்காலத்தில் நாம் நினைக்கின்றோம். ஆனால் பாவம் என்னும் பழைய மொபைல் போன் நம்மிடையே தான் இருக்க வேண்டும் என ஆசைபடுகின்றோம். பாவத்தை விட்டால் தான் புதிய மொபைல் போனான மனமாற்றம் கிடைக்கும் என்பதை அறிந்தும் பாவத்தை நம்மிடையே வைத்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு இத்தகைய நிலை மாறி மனமாற்றம் என்னும் புதுவாழ்வு பெற கடைசி வாய்ப்பு நமக்கு தரப்படுகிறது. நாம் பயணித்துக் கொண்டிருக்கின்ற இந்த தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு இறைவார்த்தை வழிபாடு, நாம் மனம் திரும்புவதற்கு இறைவன் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கின்றார், அது தான் கடைசி வாய்ப்பு என்னும் மையச்சிந்தனையை நம்முன் வைக்கின்றது. 
 
மிதியடிகளை அகற்று

இன்றைய முதல் வாசகத்தில் மோயீசன் தன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது இறைவனால் அழைக்கப்படுகின்றார். இறையழைப்பை பெற்றாலும் தன்னுடைய மிதியடிகளை அகற்றிவிட்டு தான், செல்ல முடியும் என்னும் நிபந்தனை பெறுகின்றார். கிறிஸ்தவர்களாகிய நமக்கு இங்கு மிதியடிகள் என்பது நமது பாவ வாழ்வு. நாம் இறைவன் அருகே செல்ல வேண்டுமானால், மனமாற்றம் பெற்றவர்களாக பாவம் என்னும் மிதியடிகளை அகற்ற வேண்டும். இங்கு மோயீசனுக்கு இறைவன் "மிதியடிகளை கழற்றி வைத்துவிட்டு என்னிடம் வா" என்னும் ஒரு வாய்ப்பை கொடுக்கின்றார். இறைவன் நமக்கும் நமது பாவத்தை விட்டு, மனம் மாறி அவர் அருகே செல்ல வாய்ப்பு தருகிறார். இதை உணர்ந்து வாழ நாம் அழைக்கப்படுகின்றோம்.

 ஆன்மீகப் பாறை 
 
இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கொரிந்து நகர் மக்களுக்கு இஸ்ரயேல் மக்களின் வாழ்வை முன்னுதாரணமாக காட்டி, அவர்கள் தங்களுடைய பாவ வாழ்வை அதாவது முனுமுனுப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறார். இவர்கள் பாவ வாழ்வை விட்டு, மனம்மாறி கிறிஸ்து என்னும் ஆன்மீக பாறையிலிருந்து தண்ணீரை பெறுபவர்களாக இருக்க வேண்டும் எனும் ஒரு அழைப்பை கொடுக்கின்றார். "நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது"(யோவான் 15:5) என்னும் இயேசுவின் வார்த்தைகள் இங்கு வாழ்வு பெறுகின்றன.

 கடைசி வாய்ப்பு
 
 இன்றைய நற்செய்தியில் அத்தி மரத்திற்கு கடைசி வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. தனது திராட்சை தோட்டத்தில் பல ஆண்டுகளாக கனி தராமல் இடத்தை அடைத்துக் கொண்டிருந்த அத்திமரத்தை வெட்டுவதற்கு உரிமையாளர் கூறியபோது, தொழிலாளர் அந்த மரத்திற்கு கடைசி ஒரு வாய்ப்பை அதாவது இன்னொரு ஆண்டுகள் தர கேட்டு, அதுவும் தரப்படுகிறது. இன்றைக்கு நமக்கும் இறைவன் மீண்டும் ஒரு வாய்ப்பு, அதாவது கடைசி வாய்ப்பை தருகிறார். இது நாம் மனம் மாறுவதற்கான வாய்ப்பு. பலமுறை பல வாய்ப்புகள் நமக்கு தரப்பட்டிருந்தாலும், இறைவன் இந்த தவக்காலத்தில் பாடுகளை தியானிப்பதன் வழியாக மற்றும் வாழ்வின் சிலுவைகளை சுமப்பதன் வழியாக மீண்டுமாக நமக்கு ஒரு வாய்ப்பு தருகிறார். இன்று தோட்ட தொழிலாளி போல, நம் மத்தியிலே பணியாற்றுகின்ற அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினர், நம்மை சுற்றி கொத்தி உரமிட தயாராக இருக்கிறார்கள். அதையேற்று கனி கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோமா? இறைவன் தரும் இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்த முயற்ச்சி செய்வோம்.

இறைவனது உடமை 
 
திராட்சைத் தோட்டம் என்பது ஒரு தனி நபரின் உடமை, அதிலுள்ள அத்தி மரத்தை வெட்டுவது என்பது அவர் எடுக்கும் ஒரு நடவடிக்கை, அது உரிமையாளருக்கு உரிய ஒரு அதிகாரம். ஏனெனில் அது அவர் மரம், அவர் விரும்பியபடி அதை அவர் வெட்ட முடிவெடுக்கலாம், இதில் வேறு எவரும் தலையிட முடியாது. அதே போலத்தான் கடவுள் இந்த உலகத்தை படைத்தார், இது அவரது சொத்து மற்றும் உடமை. நாம் ஒவ்வொருவரும் அவருக்கு சொந்தமானவர்கள். இந்த இறைவனின் திராட்சைத் தோட்டத்தில் நாம் எல்லோரும் இருக்கின்றோம். இத்தோட்டத்தில் பலன் தரா மரங்களாக நாமிருந்தால், நம்மையும் ஒரு நாள் வெட்டுவதற்கு இறைவன் தீர்ப்பீடுவார், அதற்கு அவருக்கு உரிமையும் உண்டு. 
"மனிதர்களே! கடவுளை எதிர்த்துப் பேச நீங்கள் யார்? உருவாக்கப்பட்ட பொருள் தன்னை உருவாக்கியவரிடம், “ஏன் என்னை இவ்வாறு செய்தாய்?” எனக் கேட்குமோ? (உரோமையர் 9:20) என்னும் வார்த்தை இறைவனின் உரிமையை காட்டுகிறது.
 ஆனால் பல வேளைகளில் நாம் இறைவனது படைப்பு என்பதை மறந்து, தன்னாட்சி பெற்றவர்கள் என்ற உணர்விலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படி நடக்க வேண்டும்? என்று சொல்லுகின்ற உரிமை இறைவனுக்கு இல்லை என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால், உண்மை என்னவெனில் நாம் இறைவனது திராட்சைத் தோட்டத்தில் அவரது உடைமையாக இருக்கின்றோம். இதைத்தான் பவுல் அடிகளாரும் நாம் இறைவனுக்கு சொந்தமானவர்கள், நம்முடைய உடல் இறைவனின் ஆலயம் என்றும் குறிப்பிடுகின்றார். எனவே, நாம் ஒவ்வொருவரும் அவர் எதிர்பார்க்கின்ற பலனை கொடுக்க அழைக்கப்பெறுகின்றோம். உரிமையாளரின் எதிர்பார்ப்பு சரியானது, நாம் இறைவனின் திராட்சைத் தோட்டத்தில் நடப்பட்ட ஒரு அத்தி மரம். பல இடங்களில் குறிப்பாக சாலை ஓரங்களில் மற்றும் காடு பகுதிகளில் எண்ணற்ற அத்தி மரங்கள் இருக்கலாம். ஆனால் அவைகளுக்கு யாரும் உரமிடவில்லை, யாரும் அதை பொருட்படுத்தவில்லை. அவைகள் பாறை மற்றும் ஆழமற்ற மண்ணில் அரிதான ஊட்டச்சத்துக்களோடு வாழ வேண்டியிருக்கிறது. ஆனால் இறைவனின் திராட்சைத் தோட்டத்தில் இருக்கின்ற நாம் கொத்தி உரமிடப்பட்டு, தேவையான நீரளித்து வளர்ந்தவர்கள். எனவே தான் உரிமையாளர் நம்மிடையே இருந்து பலனை எதிர்பார்க்கிறார், அதாவது மனமாற்றத்தை எதிர்பார்க்கிறார். அவருக்கு உகந்த வாழ்வை வாழ கடைசியாக ஒரு வாய்ப்பையும் நமக்கு தருகிறார். எவ்வாறு முதலீட்டாளர் தனது முதலீட்டில் ஒரு லாபத்தை எதிர்பார்கிறாரோ, அதே போல இறைவன் அத்தி மரங்களான நம்மிடையே மனமாற்றம் என்னும் பலனை எதிர்பார்த்து இருக்கிறார். மீட்பின் வரலாற்றில் இறைவன் மனிதனுக்கு பலவிதமான வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார். இஸ்ராயேல் மக்கள் ஒவ்வொரு முறையும் பாவம் செய்யும் பொழுது, தனது நீதித்தலைவர்கள், அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள் வழியாக அவர்களை மனமாற்றம் பெற்று, மீண்டுமாக அவரிடம் வருவதற்கு ஒவ்வொரு முறையும் வாய்ப்பு கொடுக்கிறார். இன்றைக்கு நமக்கும் பல்வேறு வகைகளில் அதே போல வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இதோ மனமாற்றம் பெறுவதற்கு மீண்டும் இறைவன் தவக்காலம் என்னும் ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கிறார், இதை கடைசி வாய்ப்பாக எண்ணி மனம் மாறுவோம், அவரிடம் சரணடைவோம்.

 
அன்புடன்,
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF

Thursday, March 10, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - தவக்காலம் 2-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) -----13-03-2022 - ஞாயிற்றுக்கிழமை

                                          

முதல் வாசகம்: தொடக்க நூல் 15: 5-12, 17-18, 21b

இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 3: 17- 4: 1

நற்செய்தி:  லூக்கா 9: 28b-36    

உயிர்ப்பை நோக்கி பயணிக்க…

                                தொழிலதிபர் ஒருவருக்கு பாராட்டு விழா நடக்கின்றது. அதற்கான விழாவில் விருதை பெற்ற அந்த தொழிலதிபர் உரையாற்றுகின்றார். அவரது உரையின் இறுதியில் அதில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் அவரிடம் கேள்வி கேட்பதற்கு வாய்ப்பு தரப்படுகின்றது, யாராவது என்னை கேள்வி கேட்க விரும்புகிறீர்களா? என்று கேட்கிறார். ஒரு மனிதர் எழுந்து உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்கின்றார். அதற்கு அந்த மனிதரைப் பார்த்து இவ்வளவு கீழ்த்தரமான சாதாரணமான உடை அணிந்திருக்கின்ற உங்களுக்கு பதில் சொல்ல முடியாது என அவரை அவமானப்படுத்துகின்றார். அவமானத்தோடு அந்த மனிதர் தலை குனிந்து உட்கார்ந்து கொள்கின்றார். மீண்டுமாக உங்களில்; யாராவது கேள்வி கேட்க விரும்புகிறீர்களா? என்று தொழிலதிபர் கேட்கின்றார். ஒருவர் அவமானத்தை கண்டவுடன் எவருக்கும் எழுந்து அவரிடம் கேள்வி கேட்க தைரியம் இல்லை. இறுதியாக ஒரு மனிதர் எழுந்து நிற்கின்றார். இதற்கு முன் கேள்வி கேட்ட அந்த மனிதரை விட இவர் சாதாரண உடை அணிந்திருக்கிறார். காலில் செருப்பு கூட இல்லை அதே கேள்வியை மீண்டும் கேட்கின்றார். உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன? இப்போழுது தொழிலதிபர் அந்த மனிதரை பார்க்கின்றார். அவரை மேடைக்கு அழைத்து கட்டித்தழுவி அவரிடம் நீங்கள் நிச்சயம் என்னை போல உங்களுடைய வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள் என்று கூறுகின்றார். இப்போது உங்கள் முன் நான் செய்தது எல்லாம் ஒரு டெஸ்ட் என்று கூறுகின்றார். என்னுடைய வாழ்க்கையில் நானும் பல அவமானங்களையும் மற்றும் துன்பங்களையும் சந்தித்தேன். ஆனால் அவரைப் போல நான் உட்காரவில்லை இவரை போல எழுந்து நின்றேன். அதனால் தான் இன்று மாபெரும் தொழில் அதிபராக உயர்ந்து நிற்கின்றேன். நம்முடைய வாழ்க்கையில் நாம் பெறுகின்ற அனைத்து அவமானங்களையும் மற்றும் துன்பங்களையும் ஏற்றுக் கொள்கின்ற பொழுது தான்; வாழ்க்கையிலே நாம் வெற்றி காண முடியும். இயேசுவும் தனது வாழ்க்கையில் துன்பம் என்னும் சிலுவைகளை சுமந்ததால் தான் மூன்றாம் நாள் மாட்சியோடு உயிர் பெற்று மானிடத்தை பாவங்களிலிருந்து மீட்டார். நம்முடைய கிறிஸ்தவ வாழ்விலும் துன்பங்களான சிலுவைகளை ஏற்றுக்கொள்ளும் பொழுது நாம் இறைவனை நோக்கி செல்வோம். இன்றைய நாளில் வாழ்வின் சிலுவைகளின் வழியாய் உயிர்ப்பை நோக்கி பயணிக்க அழைப்பு பெறுகின்றோம்.

                                இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவினுடைய உருமாற்ற நிகழ்வு தரப்பட்டிருக்கிறது. அவரது மகிமையையும் மற்றும் மாட்சியையும் வெளிப்படுத்துகின்ற மற்றும் உயிர்ப்போடு தொடர்புள்ள ஒரு நிகழ்வு, ஏன்? தவக்காலத்தில் நற்செய்தியாக கொடுக்கப்பட வேண்டும் என்று நான் சிந்தித்தேன். இதை ஆராய்ந்த போது இதன் பின்னணியில் இருந்த உண்மை எனக்கு புரிந்தது. மாட்சியையும் மற்றும் மகிமையையும் வெளிப்படுத்துகிற இயேசுவின் உருமாற்றம் நம்மை உயிர்ப்பை நோக்கி பயணிக்க அழைப்பு தருகிறது. உயிர்ப்பை நோக்கி பயணிக்கின்ற பொழுது அதில் வருகின்ற இடர்களையும் மற்றும் துன்பங்களையும் நாம் ஏற்றுக் கொள்ளுகின்ற ஒரு மனநிலையையும் உருவாக்க அழைப்பு பெறுகின்றோம்.

சோதனை தந்த  உடன்படிக்கை (ஆபிரகாம்)

                  இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் ஆபிரகாமுடன் உடன்படிக்கையை ஏற்படுத்துகின்றார். இது ஆபிரகாம் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டு அவருக்கு கீழ்ப்படிந்து நடந்ததன் பலன். பல ஆண்டுகளுக்குப் பிறகு இறைவன் கொடுத்த ஒரே பரிசான தன்னுடைய மகனையே பலியிட தயாரானார், ஆனால் இறைவனே அதை நிறுத்தி அவரோடு உடன்படிக்கையை செய்கின்றார். தன் ஒரே மகனான ஈசாக்கை ஆபிரகாம் பலியிட தயாராவது (தொ.நூல் 22) மற்றும் தனது பலிக்காக சிறுவன் ஈசாக்கே விறகுகளை சுமந்து செல்வதும் (தொ.நூல் 22:6), தன்னுடைய ஒரே மகனான இயேசுவை இந்த உலகிற்கு பலியிட இறைவன் அர்ப்பணித்ததையும் மற்றும் தனது பலிக்காக அவர் சுமந்து சென்ற சிலுவையையும் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. ஆபிரகாமின் வழி மரபில் பிறந்த (காலாத்தியர் 3:16) இயேசுவின் பாடுகள் உடன்படிக்கை என்னும் உயிர்ப்பை நோக்கி அழைத்து செல்கிறது. அவரில் நம்மை இணைய வைக்கும், உயிர்ப்பு என்னும் உடன்படிக்கையை இறைவனோடு நாம் பெற தவக்காலம் என்னும் பயணத்தில் துன்பம், கஷ்டம் மற்றும் சோதனை என்னும் சிலுவைகளை நாம் சுமந்து தான் ஆக வேண்டும்.

சிலுவை தந்த உயிர்ப்பு (இயேசு)

                                 இயேசுவின் இந்த மாட்சிமிகு உருமாற்ற நிகழ்வு சீடர்களுக்கு அவருடைய மூன்றாம் நாள் உயிர்ப்பை எடுத்துக்காட்டுகிறது. அதாவது தான் சிலுவையில் அறையப்பட்டு இறந்தாலும் மீண்டும் மாட்சியோடு உயிர்ப்பேன் என்பதை அவர் முன்னறிவிக்கிறார். ஆனால் இந்த மாட்சியில் பங்கு பெற அவர்கள் சிலுவை துன்பத்தை தங்களது வாழ்வில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறார். அதனால் தான் பேதுரு இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" (லூக் 9:33) என்று அவர் சொல்லும் போது "இவரே என் மைந்தர், நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" (லூக் 9:35) என்று குரல் ஒலிக்கிறது. இது அவர் தன்னுடைய பாடுகளை மற்றும் சிலுவைச் சாவை முன்னதாக சீடர்களிடம் முன்அறிவித்ததை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை காட்டுகிறது. இயேசுவின் உருமாற்றத்தின் போது மோசேயுடனும் எலியாவுடனும் பேசி கொண்டிருக்கும் போது எருசலேமில் நிகழவிருந்த அவரது இறப்பை பற்றி பேசி கொண்டிருந்தார்கள் (லூக் 9:31). ஆக இயேசு தரும் உயிர்ப்பின் மாட்சியில் பங்கு பெற சீடர்கள் சிலுவை துன்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை இது காட்டுகிறது.

                                 இயேசு தனது உருமாற்றத்தின் வழியாக சீடர்களுக்கு உயிர்ப்பு என்னும் நம்பிக்கையை ஊட்டுகின்றார். இன்றைக்கு நமது வாழ்க்கையிலும் பல வேளைகளில் இயேசு நம்மை இந்த உயிர்ப்பின் மாட்சியில் பங்குபெற பல்வேறு வகையில் நம்பிக்கை அளிக்கிறார். நமது வாழ்க்கையின் கஷ்டங்கள் அனைத்திலிருந்தும் நாம் மீண்டு வர, பல வேளைகளில் இறைவன் பலரின் வழியாக நமக்கு மீண்டும் மீண்டுமாக நம்பிக்கை அளித்து நம்மை ஆற்றுப்படுத்துகிறார். இதை நாம் நமது வாழ்க்கையில் உணர்ந்தவர்களாக வாழ்வோம். கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த தவக்காலத்தில், நமது வாழ்வின் துன்பங்களோடு ஜெப மற்றும் தவ முயற்சிகளை அர்ப்பணிப்போம். அது நம்மை கிறிஸ்துவின் உயிர்ப்பின் மாட்சியில் பங்குபெற அழைத்து செல்லும்.
இறைவன்
 நம்மை ஆசீர்வதிப்பார்.

அன்புடன்:-

அருட்பணி. . குழந்தை யேசு ராஜன் CMF

 

 காணொளியில்/ஆடியோவில்  காண...