Friday, February 25, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 8-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) ----- 27-02-2022 - ஞாயிற்றுக்கிழமை

                                                                                                        பொதுக்காலம் 8-ஆம் ஞாயிறு

தமிழ் திருவழிபாட்டு மறையுரை

முதல் வாசகம்: சீராக் 27: 4-7

இரண்டாம் வாசகம்: கொரிந்தியர் 15: 54-58

நற்செய்தி:  லூக்கா 6: 39-45        


வாழ்வின் விதி
("உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்")

அக்பரின் அரசவையில் இருந்த பீர்பாலின் புகழ் இந்திய நாடு தவிர அயல்நாடுகளான பாரசீக நாட்டிலும் பரவியிருந்தது. ஆதலின் பாரசீக மன்னர் பீர்பாலை தனது நாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அனுப்பி வைக்கும்படி மன்னர் அக்பருக்கு ஒரு ஓலை அனுப்பினார். மன்னர் அக்பரும் சில பரிசு பொருட்களுடன் பீர்பாலை பாரசீக நாட்டிற்கு அனுப்பி வைத்தார். பீர்பாலும் இதுவரையில் பாரசீக மன்னரை நேரில் பார்த்தது இல்லை. ஆதலின் அரசவையில் அரசரை சந்திக்க ஆவலுடன் காத்திருந்தார். பீர்பாலை மிக மரியாதையுடன் அரசவைக்கு அழைத்துச் சென்றனர் அதிகாரிகள். பீர்பாலின் அறிவாற்றலை சோதிக்க விருப்பம் கொண்ட பாரசீக மன்னர். அரசவையில் அரசர் அமர்வதற்காகப் போடப்பட்டுள்ள ஆசனங்கள் ஐந்தாக போடப்பட்டு ஒரே மாதிரியான தோற்றமுடைய ஐந்து பேர் ஆசனத்தில் அமர்ந்தனர். அரசவைக்குச் சென்ற பீர்பாலுக்கு ஆச்சர்யமாகி விட்டது. அரசர் அமரும் ஆசனங்கள் ஐந்திலும் ஐவர் அரசர்கள் போன்று அமர்ந்திருப்பதைப் பார்த்தார். இந்த ஐவர்களில் எவர் அரசராக இருக்க முடியும் என்று யோசனை செய்தபடி நின்றிருந்தார். பின்னர் ஐந்து பேர்களையும் நன்றாக உற்றுப் பார்த்துவிட்டு மிகப் பணிவுடன் அரசர் அமர்ந்திருந்த ஆச
த்தின் அருகே சென்று மேன்மை மிகு பேரரசே! தங்களைப் பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன், என்று கூறி மன்னர் கொடுத்தனுப்பிய பரிசுப் பொருட்களை பாரசீக மன்னரிடம் அளித்தார் மாமேதை பீர்பால் அவர்கள். பாரசீக மன்னருக்கு பெரும் வியப்பாகி விட்டது. தான் தான் மன்னர் என்பதை எப்படி உடனடியாக பீர்பால் அறிந்து கொண்டார் என்று பீர்பாலைப் பார்த்து வினவினார். இது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த நான்கு பேர்களின் கண்களும் தங்களின் மீதே பதிந்திருந்தது. அது மட்டுமின்றி அவர்களின் பார்வையில் ஒருவித மிரட்சி இருப்பதைக் கண்டேன். ஆனால் தாங்கள் மட்டுமே அரசருக்கான கம்பீரமான பார்வையுடன் அமர்ந்து என்னை நேருக்கு நேராகப் பார்த்தீர்கள். அதனைக் கொண்டு தான் அமர்ந்திருந்த ஐவரில் தாங்கள் தான் அரசர் என்பதை அறிந்து கொண்டு வணங்கினேன். அதுமட்டுமின்றி என்னதான் நாம் போலியாக நடித்தாலும் நம்முடைய உள்ளத்தை முகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். இதனைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர் என்றார் பீர்பால்.

இயேசுவில் அன்பார்ந்தவர்களே, எவ்வாறு நமது அகத்தின் அழகை முகம் காட்டி கொடுக்கிறதோ அதே போல நமது உள்ளத்தில் இருப்பவற்றை தான் நமது நாவும் பேசுகிறது என்கின்றது இன்றைய நற்செய்தி வாசகம். "பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா?" (லூக்கா 6:39) மற்றும் "கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும்" (லூக்கா 6:43-44) என "உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்" (லூக்கா 6:45) என்னும் வாழ்வின் விதியை கற்றுக் கொள்ள அழைப்பு தருகிறது இன்றைய பொதுக்காலத்தின் 8-ஆம் ஞாயிறு.

இன்றைய நற்செய்தி பகுதி இயேசுவின் சமவெளி பொழிவின் தொடர்ச்சியாக அமைகிறது. நமக்கு தெரியாததை நாம் எவருக்கும் சொல்லித்தர இயலாது. நாம் எதை அறிந்திருக்கின்றோமோ மற்றும் தெரிந்து வைத்திருக்கின்றோமோ அதை தான் நாம் பிறருக்கும் எடுத்துரைக்க இயலும். நமது உள்ளம் தவறானவற்றை நினைத்து கொண்டிருந்தால், நமது சொற்களும் தவறாகத்தான் அமையும். நமது உள்ளங்கள் தூய்மையான நல்ல சிந்தனைகளை விதைத்திருந்தால் நமது சொற்களும் நன்றாகத்தான் அமையும். இதுதான் வாழ்வின் விதி ஏனென்றால் மா மரத்தில் பலாப்பழம் காய்ப்பதுமில்லை, பலா மரத்தில் மாம்பழம் காய்ப்பதுமில்லை. இதைத்தான் இன்றைய முதல் வாசகம் "கனி, மரத்தின் கண்காணிப்பைக் காட்டுகின்றது; சொல், மனிதரின் உள்ளப் பண்பாட்டைக் காட்டுகின்றது" (சீராக் 27:6) என எடுத்துரைக்கிறது.

பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் மோயீசன் வழியாக எகிப்தில் அடிமையாக இருந்த இஸ்ராயேல் மக்களை மீட்க முயலுகின்றார். மோயீசன் பார்வோன் மன்னன் முன் இதை எடுத்துரைத்த போதும், இறைவன் பத்து பெரும் துன்பங்களை உண்டாக்கிய போதும் பார்வோனின் மனம் அதாவது உள்ளம் கடினப்படுத்தப்படுகிறது மற்றும் இறுகி போக செய்யப்படுகிறது எனவேதான் பார்வோன் மன்னன் அடிமையாக இருந்த இஸ்ராயேல் மக்களை அனுப்ப மறுக்கிறான் (விப 7:13, 8:15, 8:19, 8;32, 9:7, 9:12, 9:35 & 10:20). தனது தலைமகனின் இறப்புக்கு பிறகு அவனது உள்ளம் இலகியதால் மக்களை அனுப்புகிறான். ஆனால், மீண்டும் அவனுடைய மனமானது இறுகி விடசெய்யப்படுகிறது. செங்கடலை கடக்க செல்லுமுன் தன்னுடைய படைகளை அனுப்புகிறான் (விப 14:8). இங்கு இஸ்ராயேல் மக்களை பார்வோன் மன்னன் அனுப்புவதற்கும் மற்றும் அனுப்ப மறுப்பதற்கும் அவனுடைய உள்ளம் தான் காரணமாக அமைகின்றது. வாழ்வில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளுக்கும் நமது உள்ளம் தான் காரணமாக அமைகின்றது. நம்முடைய உள்ளத்தை சீர்படுத்தினால் நம்முடைய வாழ்வு நலமாக அமையும்.

இதைத்தான் நற்செய்தியும், நல்ல மரம் நல்ல கனி தரும், நச்சு மரம் கெட்ட கனியே தரும் என கூறுகிறது. இதை வள்ளுவரும் ''பயன்மரம் உள்ர்ப் பழுத்தற்றால்...'' எனத் தொடங்கும் குறளும் (216), ''நச்சு மரம் பழுத்தற்று...'' என முடியும் குறளும் (1008) இங்கு நல்ல மரம்; பயனுள்ள கனிகளைத் தருகின்ற மரம் - பயன்மரம் எனவும், கெட்ட மரம்; உண்ணத் தகாத நச்சுக் கனிகளைத் தருகின்ற மரம் - நச்சு மரம் என்னும் வேறுபாட்டை உறுதிப்படுத்துகின்றார். கனியிலிருந்து மரத்தை அறியலாம் என்பது உண்மை என்றால், மனிதர் வாயிலிருந்து பிறக்கின்ற சொற்கள், அவர்கள் புரிகின்ற செயல்கள் ஆகியவற்றிலிருந்து அம்மனிதர் எப்பண்புடையவர் என்பதை அறியலாம் என இயேசு உணர்த்துகிறார். பேசும் திறன் அதாவது தகவல் பரிமாற்றம் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிக முக்கியமான வாழ்வியல் கோட்பாடு. நமது வார்த்தைகள் தான் வாழ்வை தீர்மானிக்கின்றது என்று கூறலாம். உளவியலில் பேசும் திறனிற்கு மூன்று முக்கியமான காரணிகள் தேவை என்று கூறப்படுகிறது.

1. சூழ்நிலையை புரிந்து கொள்ளுதல்: அதாவது எங்கு போய் பேசுகின்றோம்? அங்குள்ள சூழல் என்ன என்பதை அறிந்து கொள்ளுதல்.
2.பேசும் நபரை அறிந்து பேசுதல்: அதாவது யாரிடம் பேசுகிறோம்? அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை உணர்தல்.
3.எண்ணங்களை சீராக்குதல்: அதாவது எதை பேச வேண்டுமோ அதை உள்ளத்தில் சிந்தித்து பேசுதல்.

     இவை மூன்றுக்கும் அடித்தளமாக கூறப்படுவது நமது எண்ணங்களை சீராக்குதல். நாம் பேச போவதை நம்முடைய உள்ளத்திலே இருத்தி அவை சரியானதா? அல்லது தவறானதா? என்பதை சிந்தித்து பேசுதல் ஏனென்றால் நம் உள்ளத்தின் நிறைவை வாய் பேசுகிறது. இதை வள்ளுவரும்,

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்
(706)
            என தனக்கு அடுத்து இருக்கும் பொருளைப் பளிங்கு காட்டுவதுபோல , ஒருவன் மனத்தில் இருப்பதை அவனது முகம் காட்டி விடும் என்கிறார். நமது கிறிஸ்தவ வாழ்விலும் இறை பிரசன்னம் உள்ளத்தில் நிறைந்திருக்காவிட்டால், நாவினால் இறைவனை பற்றி எடுத்துரைக்கவும் இயலாது மற்றும் அவர் காட்டும் வழியில் வாழவும் முடியாது. நமது உள்ளத்தில் இறைவனை விதைப்பவர்களாக மாறுவோம். இன்று நமது குடும்பங்களிலும் பெற்றோர்களாகிய நாம் எதை குழந்தைகளின் உள்ளத்தில் விதைக்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்போம். இன்று நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகவே நாளை அவர்கள் மாறுவார்கள். 'சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்' என்னும் நாட்டுப்புற வழக்கிற்கு ஏற்றவாறு உள்ளத்தில் இருப்பதுதான் வாய்பேசும் மற்றும் வாழ்வாக மாறும் என்பதை உணர்வோம். நமது மற்றும் குழந்தைகளின் உள்ளங்களையும் தூய்மையாக்குவோம், நல்ல சிந்தனைகளை விதைப்போம், நமக்கான புது வாழ்வை அமைப்போம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.


அன்புடன்:-
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF


காணொளியில்/ஆடியோவில்  காண...



Wednesday, February 16, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 7-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) ----- 20-02-2022 - ஞாயிற்றுக்கிழமை

 பொதுக்காலம் 7-ஆம் ஞாயிறு

தமிழ் திருவழிபாட்டு மறையுரை

முதல் வாசகம்: சாமுவேல் 26: 2, 7-9, 12-13, 22-23

இரண்டாம் வாசகம்: கொரிந்தியர்  15: 45-49

நற்செய்தி:  லூக்கா 6: 27-38



பகைவரை அன்பு செய்வது சாத்தியமா?

          1981-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் தேதி வத்திக்கான் நகர் புனித பேதுரு சதுக்கத்தில், அன்றைய திருத்தந்தையும், இன்றைய திருஅவையின் புனிதருமான இரண்டாம் ஜான்பால் அவர்கள் மக்களை சந்திக்க வந்தபோது, மெகமத் அலி அகா என்பவரால் சுடப்பட்டு காயமுற்றார். அவர் உடலிலிருந்து பீறிட்டு வெளியான இரத்தமும், அவரில் ஏற்பட்ட வலியும் அவரை சாவின் விளிம்புக்கு தள்ளிச் சென்றது. திருத்தந்தையை கொல்ல நினைத்த மெகமத் அலி அகாவுக்கு இத்தாலி நாட்டின் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உடனடியாக வழங்கி தீர்ப்பளித்தது. மருத்துவ சிகிச்சையின் உதவியால் மீண்டும் உயிர் பெற்று நலமாகி வந்த திருத்தந்தை, சிறைச்சாலை சென்று, மெகமத் அலி அகாவை சந்தித்து, அவரை மன்னித்து, அரசுக்கு அவனை விடுவிக்க பரிந்துரை கடிதமும் எழுதினார். தன்னைக் கொல்ல நினைத்த தனது பகைவரையும் மன்னித்து அன்பு செய்த அன்றைய திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கினார். இன்று இந்த புனிதரை போல நாமும் நமது வாழ்க்கையில் நமது பகைவரையும் அன்பு செய்து வாழ அழைக்க பெறுகின்றோம். இன்றைய காலகட்டத்தில் நமக்கு தீங்கீழைக்கும் நமது பகைவரை மன்னிப்பது சாத்தியமா? வாருங்கள் விடையளிக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. 

பழைய ஏற்பாட்டில் பகைவரிடம் அன்பு 

         பழைய ஏற்பாட்டில் அடுத்திருப்பவரிடம் அன்பு’ மற்றும் ‘பகைவரிடம் வெறுப்பு’ என்னும் நிலைப்பாடு இருந்தது (லேவி 19: 18). ஆனால், விண்ணகத் தந்தை தன்னை வெறுத்து, பாவத்தால் பிரிந்த இஸ்ராயேல் மக்களை ஒவ்வொரு முறையும் அன்பு செய்தார். தன் அன்பை பல்வேறு விதத்தில், பலர் வழியாக தொடர்ந்து காட்டினார். இன்றைய முதல் வாசகத்தில் தாவீது அபிசாயிடமும், இறைவனிடமும் தன்னை எதிரியாக நினைத்த சவுலை கொல்லவில்லை என எடுத்துரைக்கின்றார், இது அவரது அன்பை காட்டுகிறது. நாம் பகைவர்களிடம் அன்பு கூறுகின்ற பொழுது நம் விண்ணகத் தந்தையைப் போன்று நாமும் நிறைவுள்ளவர்களாக இருப்போம். இதைத்தான் இன்றைய நற்செய்தியும் "உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்" என்று பகைவரை அன்பு செய்வதை சாத்தியமாக்குகிறது.
 
இயேசுவின் வாழ்வில் பகைவரிடம் அன்பு 

வெறுப்போருக்கு நன்மை, சபிப்போருக்கு ஆசி, இகழ்ந்து பேசுவோருக்காக இறைவேண்டல், ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தை காட்டுதல், மேலுடையை எடுப்பவருக்கு அங்கியையும் எடுத்து கொள்ள செய்தல் மற்றும் எடுக்கும் பொருளை மீண்டும் கேட்காதிருத்தல் என நமது அன்றாட வாழ்வில் கொஞ்சம் கூட சாத்தியமே இல்லாதவற்றை கூறுகிறது இன்றைய நற்செய்தி வாசகம் என்று நாம் நினைத்தாலும், இவையனைத்தும் தனது வாழ்வில் வாழ்ந்து காட்டியவரின் வார்த்தைகள் என்பதை நாம் மறந்து விட கூடாது. அதுவே பகைவரை அன்பு செய்வதை சாத்தியமாக்கி விடுகிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து வார்த்தையிலும், போதனையிலும் மட்டுமல்ல வாழ்க்கையிலும் தன் அன்பை வெளிப்படுத்தினார். இயேசு தம்மை சுற்றியிருந்த திரளான மக்களிடம், ‘நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்’ என்றார். (மத்தேயு 5:23 - 24) இயேசு தனக்கு துரோகம் செய்தவரிடம் அன்பை காட்டினார்: தம் பன்னிரு சீடர்களில் ஒருவரான யூதாசு ஆண்டவர் இயேசுவிடம் வந்து, ‘ரபி வாழ்க’ என்று சொல்லி அவரை முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்த பொழுது, அவர் யூதாசிடம், ‘தோழா, எதற்காக வந்தாய்?’ என்று அதே மாறாத பாசப்பிணைப்புடனே அழைக்கின்றார். (மத்தேயு 26:50) அவரை கைது செய்ய வந்தவரிடமும் அன்பை வெளிப்படுத்தினார்: யூத சமய குருக்களும், மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் ஆண்டவர் இயேசுவைக் கைது செய்ய வந்த பொழுது, அவரோடு இருந்த பேதுரு தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக்காதைத் துண்டித்தார். அப்பொழுது ஆண்டவர் அவர்களைப் பார்த்து, ‘விடுங்கள் போதும்’ என்று கூறி அந்த பணியாளரின் காதைத்தொட்டு நலமாக்கினார். ஆண்டவர் இயேசுவைப் பிடித்து அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள். அவரைப் பழித் துரைத்தார்கள், காரி உமிழ்ந்தார்கள், சாட்டையால் அடித்தார்கள், முள் முடி சூட்டினார்கள். இறுதியாக சிலுவையிலே அறைந்தார்கள். அப்போது இயேசு, ‘தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை’ என்றார். தனக்கு தீங்கீழைக்கும் பகைவரையும் மன்னிக்கும் அன்பு நம் இயேசுவின் அன்பு. இதை நமது வாழ்விலும் கடைப்பிடித்து வாழ இன்றைய நற்செய்தியில் "உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக " என்கிறார்.   

திருஅவையில் பகைவரிடம் அன்பு

    திருஅவையிலும் இறை மைந்தன் இயேசுவைப் பின்பற்றி எண்ணற்றோர் தனக்கு தீங்கு இழைத்தோரை மன்னித்து அவர்கள் மீது அன்பு காட்டியதை நாம் அறிவோம். 1890 ஆம் ஆண்டு இத்தாலியில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் மரிய கொரற்றி. இவரது பதினோராவது வயதில் இவர் வீட்டு அருகிலிருந்த அலெக்ஸாண்டரோ என்பவன் இவள் மீது ஆசை கொண்டு தவறாக நடக்க முயன்ற போது, மரிய கொரற்றி அதற்கு இடம் கொடுக்கவில்லை என்பதையறிந்து கத்தியால் 14 முறை குத்திக் கொன்றான். அவள் இறக்கும் தருவாயிலும் தன்னை குத்திக்கொன்ற அலெக்சாண்டரை மன்னித்ததும், பின்பு அவன் சிறையிலிருந்த போது அவன் முன் தோன்றி லில்லி மலர்களை கொடுத்ததும் பகைவரை அன்பு செய்வதன் மாபெரும் எடுத்துக்காட்டாக அமைகிறது. 1954-ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் கொச்சியில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து துறவற சபையில் அருட்சகோதரியாக வார்த்தைப்பாடு அளித்து வட இந்தியாவில் தனது இறைப்பணியை ஆற்றி வந்தவர் அருட்சகோதரி ராணி மரியா. 1995-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி வட இந்தியாவில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த அருட்சகோதரியை இழுத்து கத்தியால் குத்தி சமுந்தர் சிங் அவரை கொன்றார். இச்சகோதரியின் மனநிலையை அறிந்து, அவர் விருப்பத்திற்கேற்ப அவருடைய குடும்பத்தாரும், சபையைச் சார்ந்த சகோதரிகளும் அவரை மன்னித்து பகைவர் மீது அன்பு செலுத்திய இந்நிகழ்வு நாம் ஒவ்வொருவரும் நன்றாக அறிந்ததே. அதன் பிறகு திருஅவையானது அருட்சகோதரி ராணி மரியாவுக்கு முத்திப்பேறு பட்டம் வழங்கி தூய நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், புனித மரியா கொரற்றி, அன்னை தெரேசா மற்றும் அருட்சகோதரி ராணி மரியா என இன்னும் எண்ணற்றோர் திருஅவையில் பகைவரை அன்பு செய்வதை சாத்தியமாக்கி சென்றிருக்கிறார்கள்.

சமுதாயத்தில் பகைவரிடம் அன்பு

        1999-ம் ஆண்டு சனவரி மாதம் ஒரிஸாவில் தன் கணவர் கிரகாம் ஸ்டெயின்ஸையும், பிலிப் மற்றும் திமொத்தி என்ற தன் இரு மகன்களையும் உயிரோடு எரித்துக் கொன்ற தாரா சிங்கின் மரண தண்டனையை இரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்ட கிளாடிஸ் ஸ்டெய்ன்ஸ் பற்றிய செய்திகளை நாம் அறிவோம். மன்னிப்பில் மட்டுமே நம்பிக்கை வளரும் என்று பகைவரையும் அன்பு செய்து வாழ்ந்த கிளாடிஸ் சொன்னதும் நமக்கு நினைவிருக்கலாம். நம் வாழ்வில் எதிரிகளையும் மற்றும் எதிர்ப்புகளையும் எவ்வாறு எதிர்கொள்வது, எப்படி நமக்குச் சாதகமாக்கிக்கொள்வது என்பதற்கான யுக்தியை இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்குச் சொல்கிறார். எதிரியை, அல்லது பகைவனைப் பகைவனாகக் காணமுற்பட்டால், அந்த பகைக்குள் நாமே மூழ்க நேரிடும். இயேசு சொல்வதுபோல பகைவனையும் அன்பு செய்யவும் அவனுக்காகச் செபிக்கவும் பழகிக்கொண்டால், பகையை வெல்ல முடியும். பகைவனை வென்ற மகிழ்வில் வாழலாம். 'உனது பட்டரையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன். ஏனென்றால் என்னை எதிரியாக, நீ நினைக்கிறாயே தவிற, உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை' என்னும் பெரிய மனிதரின் வார்த்தைகள் இயேசுவின் வார்த்தைகளை வாழ்வாக்கிய வார்த்தைகள். இதை நாமும் நமது வார்த்தையாக்கி வாழ்வோம். மன்னிப்பதால், மறு கன்னத்தைக் காட்டுவதால் வளரும் நம்பிக்கையை நாமும் வளர்த்துக் கொள்ள முயல்வோம். நாம் மறு கன்னத்தைக் காட்டும்போது, அக்கன்னத்தில் அறையும் நம் பகைவர்களை மனம் மாற்றும் கனிவும், துணிவும் நமக்கு வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம். 
                                                                          இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.


அன்புடன்
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF


காணொளியில்/ஆடியோவில்  காண...




Friday, February 11, 2022

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) ----- 13-02-2022 - ஞாயிற்றுக்கிழமை

                                                         

 பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு

தமிழ் திருவழிபாட்டு மறையுரை

முதல் வாசகம்: எரேமியா 17: 5-8

இரண்டாம் வாசகம்: கொரிந்தியர்  15: 12, 16-20

நற்செய்தி:  லூக்கா 6: 17, 20-26



பேறுபெற்றவர்களா? சபிக்கப்பட்டவர்களா?
(
பேறுபெற்றவர்களாக்கும் இறைநம்பிக்கை)


                      அவர் அப்பா ஒரு பள்ளி ஆசிரியர், சிறிய வயதிலிருந்தே படிப்பைக் காட்டிலும் வேலை செய்வதை அதிகம் விரும்பியவர். பள்ளியில் பாடம் கற்ப்பதை காட்டிலும் சாலைகளில் வேலை செய்பவர்கள் எப்படியெல்லாம் வேலை செய்கிறார்கள் என்று நுணுக்கமாக பார்த்து அறிந்தவர். ஒருமுறை தன் தாயிடம் சென்று, 'ஒரு நாள் நிச்சயம் நான் அதிகம் சம்பாதிப்பேன், உன்னை நிச்சயம் நன்றாக பார்த்துக் கொள்வேன்' என்று வாக்கு கொடுத்தவர். பள்ளி படிக்கின்ற பொழுதே வார இறுதி விடுமுறையில் பஜ்ஜி விற்று பணம் சம்பாதித்தவர், இளம் வயதிலேயே ஏமன் நாட்டுக்கு சென்று வேலை செய்தவர். இரண்டு ஆண்டுகளில் அதே எண்ணெய் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் வகித்தவர். இந்தியாவுக்கு வந்த பிறகு நெசவுத் தொழிற்சாலையை துவங்கி, பிறகு பல முதலீட்டாளர்களை ஒன்று சேர்த்து ரிலையன்ஸ் நிறுவனத்தை உருவாக்கியவர், ஆம் அவர் தான் தீருபாய் அம்பானி. இன்று மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கின்ற இவரது வாழ்க்கை பயணத்தில் வெறும் வெற்றிகள் மட்டும் வந்தது என்று சொல்லி விட முடியாது. எண்ணற்ற தடைகளும், போராட்டங்களும் மற்றும் சவால்களும் வந்ததாக அவரே கூறியிருக்கிறார். இவை அனைத்திலிருந்தும் அவர் மீண்டும் எழுந்து வந்தது அவருடைய நம்பிக்கையால் மட்டுமே என்கிறார். இவர் மட்டுமல்ல உலகின் எல்லா பகுதியிலும் இன்று உயர்ந்தவர்களாக, மக்களால் போற்றப்படுபவர்களாக இருக்கின்ற ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் தோல்விகளை சந்தித்து, அச்சவால்களில் மூழ்கி விடாமல் நம்பிக்கையோடு மீண்டும் எழுந்தவர்கள். அம்பானிக்கு மட்டுமல்ல உலகில் உள்ள யாவருக்கும் வெற்றியாளர்களாக மற்றும் மக்கள் மத்தியில் பெரும் பெயர் பெற்றவர்களாக மாற நம்பிக்கை மாபெரும் சக்தியாக இருக்கிறது. நம்மை உயர்த்துவதும் வீழ்த்துவதும் நாம் நம் மீதும், நமது வாழ்வின் மீதும் வைக்கின்ற நம்பிக்கையில் தான் இருக்கின்றது. இது நமது கிறிஸ்தவ வாழ்விற்கும் பொருந்தும். நம்மை பேறுபெற்றவர்களாக்குவதும், சபிக்கப்பட்டவர்களாக்குவதும் நாம் இறைவன் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையில் தான் இருக்கின்றது என்பதை விவரித்து விளக்குகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. எது நம்மை பேறுபெற்றவர்களாக்குகிறது? எது நம்மை சபிக்கப்பட்டவர்களாக்குகிறது? என்னும் கேள்விகளுக்கு விடையளிக்கிறது இன்றைய பொது காலத்தின் ஆறாம் ஞாயிற்றுக்கிழமை திருவழிபாடு. நமது இறை நம்பிக்கை தான் இறைவனில் நம்மை பேறுபெற்றவர்களாக்குகிறது என்பதை சிந்தித்து பார்க்க அழைக்க பெறுகின்றோம்.

இறை மற்றும் மனித நம்பிக்கை

                    இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்பட்டோர், ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர் என்கின்றார். யூதா அரசன் யோயாக்கின் பாபிலோனியர்கள் படையெடுத்து வந்த போது முழுவதுமாக சரணடைந்தான். வலிமையற்ற எகிப்து நாட்டு மனிதர்களிடத்தில் நம்பிக்கை வைத்து கொல்லப்பட்டு இறந்தான். ஆண்டவரின் மக்களுக்கு அரசனாக இருக்கின்ற யோயாக்கின் பாபிலோனிய படையெடுப்பின் போது இறைவன் மீது நம்பிக்கை கொள்ளாமல், மனிதர் மீது நம்பிக்கை கொண்டு தன்னுயிரையும் பாபிலோனிய அடிமைத்தனத்தையும் உருவாக்கியதால் ஏரேமியா இறைவாக்கினர் இவ்வாறாக விவரித்து எழுதுகின்றார். நமது வாழ்விலும் பாபிலோனிய படைகள் போல் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள், சவால்கள், தாக்கங்கள் பாரங்கள் மற்றும் கடன் தொல்லைகள் என எல்லா சூழலிலும் நாம் இறைவன் மீது முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும். அதுதான் நம்மை வாழ வைக்கும், கிறிஸ்தவ வாழ்வில் பேறுபெற்றவர்களாக்கும். இதை தான் ஏரேமியா ஆண்டவரில் நம்பிக்கை வைக்கின்றவர், நீர் அருகே நடப்பட்ட மரத்தைப் போல பசுமையாக வாழ்கின்றவர்கள் எனவும், மனிதரில் நம்பிக்கை கொள்பவர் வறண்ட பகுதியான பாலை நிலத்தில் வளர்கின்ற புதரை போலானவர்கள் என உருவகங்களாக எழுதுகிறார்.

இறை மற்றும் உலக நம்பிக்கை

       இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும் விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம் என இவ்வுலகின் மீது நம்பிக்கை கொள்ளாது, கிறிஸ்துவின் மீதும் மற்றும் அவர் உயிர்ப்பின் மீதும் நம்பிக்கை கொண்டு வாழ அழைப்பு தருகிறார். உலகச் சிந்தனைகளின் படி இறப்பு மற்றும் உயிர்ப்பு பற்றி நினைத்துப் பார்த்த கொரிந்து நகர மக்களுக்கு, உயிர்க்கும் போது இருக்கும் உடல் அழியாமையை அணிந்து கொள்கின்றது என்றும், இந்த அழியா உடலையே இயேசு பெற்றார் என்றும், அவரின் இறப்பில் பங்கேற்கும் நாம் அவரைப் போல அழியா உடல் பெற்று உயிர்ப்போம் என்னும் இறைநம்பிக்கையை எடுத்துரைக்கிறார். மாறிவரும் இந்த நுகர்வு கலாச்சார உலகில் ஆசைகள் நம்மை அலைக்கழித்து கொண்டிருக்கிறது. அதுவே வாழ்வின் மையமாக மாறி, இலட்சியங்களில் இருந்து நம்மை சீர்குலைத்து கொண்டிருக்கிறது. இந்நிலை மாறி இவ்வுலக உடலின் மேல் அல்ல, இறைவனின் உயிர்ப்பில் நம்பிக்கை வைக்க அழைக்கின்றார் திருத்தூதர் பவுல்.

இறை மற்றும் பண நம்பிக்கை

                    இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் சமவெளி பொழிவை தருகிறது. மத்தேயு நற்செய்தி தரும் மலைப் பொழிவிலிருந்து சிறிது மாறுபட்டதாக இருக்கிறது. அங்கு எட்டு பேறுகளை நாம் வாசிக்கின்றோம். லூக்கா நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி நான்கு பேறுகளையும் மற்றும் நான்கு சாபங்களையும் எடுத்துரைக்கிறது. ஏழைகள், பட்டினியாய் இருப்போர், அழுவோர் மற்றும் கிறிஸ்துவின் பொருட்டு வெறுக்கப்பட்டு இகழப்படுவோர் பேறுபெற்றவர்களாகவும், செல்வம் படைத்தோர், உண்டு கொழுத்திருப்போர் மற்றும் பிறரைப் பார்த்து ஏளனமாக சிரித்து இன்புறுகின்றோர் சபிக்கப்பட்டவர்களாகவும் கருதப்படுகிறார்கள். எழ்மை, பட்டினி, அழுகை மற்றும் துன்பம் தான் நம்மை பேறுபெற்றவர்களாக மாற்றுகிறதா? இல்லை. இவர்கள் உடலால் துன்பபட்டாலும், ஆன்மாவில் இறைவனோடு இணைந்து, அவர் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களாக வாழ்கிறார்கள். எனவே தான் இவர்கள் இறைவனில் பேறு பெற்றவர்களாக திகழ்கிறார்கள். சபிக்கப்பட்டவர்கள் இறைவனில் நம்பிக்கை வைக்கவில்லை, அவர்கள் பணத்திலும் பொருளிலும் மற்றும் உணவிலும் நம்பிக்கை வைத்தார்கள். இன்றைய நற்செய்தியில் கூறப்படுகின்ற செல்வர்கள் பணத்தில் நம்பிக்கை வைத்தார்கள், உண்டு கொழுத்திருப்பவர்கள் உணவில் நம்பிக்கை வைத்தார்கள், சிரித்து இன்புறுகின்றவர்கள் பிறர் பொருளில் நம்பிக்கை வைத்து பாவத்தில் வாழ்ந்தார்கள். எனவே தான் இவர்கள் சபிக்கப்பட்டவர்களாக கருதப்படுகிறார்கள். ஆக பணத்தில், உணவில் மற்றும் பொருளில் நம்பிக்கை வைத்தவர்கள் சபிக்கப்பட்டவர்களாகவும், இறைவனில் நம்பிக்கை வைப்பவர்கள் பேறுபெற்றவர்களாகவும் கருதப்படுகிறார்கள். இன்றைக்கு நமது வாழ்விலும் பணம், பொருள், பதவி மற்றும் சொத்துகள் மீது உள்ள ஆசைகளில் நாம் இறைவனிடமிருந்து பிரிந்து சபிக்கப்பட்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாம் இறைவனில் நம்பிக்கை கொள்ளுகின்ற பொழுது தான், பேறுபெற்றவர்களாக, இறையாட்சியில் இணைந்தவர்களாக வாழ முடியும். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.


அன்புடன்
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF


காணொளியில்/ஆடியோவில்  காண...