🌱விவிலிய விதைகள்🌱
Friday, January 28, 2022
🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 4-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) ----- 30-01-2022- ஞாயிற்றுக்கிழமை
பொதுக்காலம் 4-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
முதல் வாசகம்: எரேமியா 1: 4-5, 17-19
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 12: 31- 13: 13
நற்செய்தி: லூக்கா 4: 21-30
அன்பால் உடனிருப்பவர்களை உருவாக்குவோம்
சில நாட்களுக்கு முன்பு நான் வாசித்த கதை அது. அலுவலகத்தில் தான் எதிர்பார்த்ததுபோல ப்ரமோஷன் கிடைக்காததால், வேலையை விடப் போகிறேன் என்றாள் சுமதி. ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் டீம் லீடரான அவள் அசிஸ்டன்ட் மேனேஜர் ப்ரமோஷன் ரேஸில் இருந்தவள் எனத் தெரியும். "எனக்கு ப்ரமோஷன் கொடுக்காததுமில்லாம என்னைப்போல MBA கூட முடிக்காத ராஜேஷுக்கு அதை அவங்க கொடுத்தது பிடிக்கலை'' என்று தன் தோழியிடம் சொன்னாள். எதையும் ஒப்பிட்டுப் பார்ப்பது மனித இயல்பு என்பது புரிந்தாலும் நிலைமையை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள, யோசிக்க சொன்னாள் தோழி. என்னைவிட ராஜேஷ்கிட்ட அப்படி என்ன தகுதி அதிகமாயிருந்திருக்கு?" என எண்ணினாள். "அவன் MBA கூட படிக்கவில்லை, ஆனா ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட் தொடர்பா போன வருஷம் இரண்டு சர்ட்ஃடிபிகேட் கோர்ஸ் முடிச்சான். அது கூடுதல் அட்வான்டேஜ் ஆகிடுச்சு போல" என்றாள். "உன் வேலைக்கு அந்த கோர்ஸ் அவ்வளவு முக்கியமா, அப்படின்னா ப்ரமோஷனை எதிர்பார்த்த நீ ஏன் அதை பண்ணல?" என்ற தோழியின் கேள்விக்கு மெளனமாக இருந்தாள் சுமதி. எதிர்பார்த்த பதவி உயர்வு வரவில்லை என நம்மில் பலரும் புலம்புவோம். ஆனால், அந்த ப்ரமோஷனுக்கு எப்படியெல்லாம் தகுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என பல நேரங்களில் சிந்தக்கவும், அதை நோக்கி நம் கவனத்தை செலுத்தவும் தவறிவிடுவோம். இன்று நமது வாழ்க்கை பயனமும் இப்படி தான் இருக்கிறது. நம்மோடு உடனிருப்பவர்களின் வளர்ச்சியை கண்டு பொறைமை கண்டு, அவர்களை சந்தேகிக்கின்ற நாம் அவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்து விடுகின்றோம். இத்தகைய தேவையற்ற எண்ணங்களை அழித்து நம்மோடு உடனிருப்பவர்களை அன்பால் உருவாக்க இன்றைய இறைவார்த்தை அழைப்பு தருகிறது.
இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தொழுகைக் கூடத்தில் வாசித்ததை மற்றும் பேசியதைக் கண்டு மக்கள் வியப்புற்றனர் மற்றும் பாராட்டினர். அவரை பார்த்து, வியந்து மற்றும் பாராட்டிய மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இயேசு செய்த செயலைக் கண்டு வியந்த அவர்கள் அவரை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு மூன்று காரணங்களை தரலாம்.
1. தெரிந்த முகம்
2. பொறாமை உள்ளம்
3. சந்தேக குணம்
1.தெரிந்த முகம்
நாம் வியக்கின்ற அளவுக்கு அருள் மொழிகளை பேசும் இம் மனிதர் நமக்கு தெரிந்தவர் தானே. "இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர் தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்?" (மத்தேயு 13:54-56) என எண்ணற்ற கேள்விகளை கேட்கிறார்கள். தெரிந்த முகம் அவரை ஏற்றுக் கொள்ள தடையாக மாறுகிறது. இப்படிதான் நமது வாழ்க்கையும் இருக்கின்றது. "பழகப் பழகப் பாலும் புளிக்கும்" என்று கூறுவார்கள், அதிகம் பழகுவதால் என்னவோ தெரியவில்லை நாம் நம்முடன் இருப்பவர்களின் நல்ல குணங்களை மறந்து விடுகின்றோம்.
எங்கோ தெரியாதவர்கள் செய்கின்ற சாதனைகளை பார்த்து வியந்து பாராட்டி அவர்களின் ரசிகர்களாக மாறும் நாம், நம் மத்தியில் வாழுகின்றவர்களை மற்றும் நமது குடும்பங்களில் இருக்கின்றவர்களை பாராட்ட மறந்து விடுகின்றோம். நம் குடும்பத்தில் இருக்கின்ற கணவன், மனைவி மற்றும் பிள்ளைகளின் சாதனைகளை அவர்களுடைய அலுவலகங்களில் இருக்கின்றவர்கள் மற்றும் தெருவில் இருக்கின்றவர்கள் பாராட்டுவார்கள் ஆனால் உடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம் அதை அறிந்திருந்தும் அதை பாராட்டுவதில்லை ஏனென்றால் அவர்கள் தெரிந்த முகம். ஓட்டலுக்கு சென்று, சாப்பிட்டு சாப்பாடு நன்றாக இருக்கின்றது என்று வியந்து பாராட்டுகின்ற நாம், ஒவ்வொரு நாளும் நமக்கு உணவு தரும் நம்முடைய தாய், மனைவி மற்றும் சகோதரிகளின் சமையலை ஒரு நாளும் பாராட்டுவதில்லை ஏனென்றால் அவர்கள் தெரிந்த முகம். பிறரை பாராட்ட, அவர்களின் சாதனையை ஏற்றுக்கொள்ள தெரிந்த முகம் ஒரு தடையாக ஒருபோதும் மாறிவிடக்கூடாது. இது நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் பொருந்தும். தலைமுறை தலைமுறையாக கிறிஸ்தவர்களாக இருப்பதால் என்னவோ தெரியவில்லை, நம்முடைய கிறிஸ்தவ விசுவாசமும் தெரிந்த முகமாக இருப்பதால் அது மறைந்த முகமாக மாறியிருக்கின்றது. அதுவே நம்மை அன்றாட திருப்பலியில் பங்கு கொள்வதற்கும், ஜெபமாலை ஜெபிப்பதற்கும், இறைவார்த்தையை வாசித்து, தியானிப்பதற்கும் மற்றும் குடும்ப ஜெபமாலையை ஜெபிப்பதற்கும் தடைக்கல்லாக மாறியிருக்கின்றது. தெரிந்த முகம் என்னும் தடைக்கல்லை தூக்கியெறிந்து, இறைவனையும் நம்மோடு இருக்கின்ற ஒவ்வொருவரையும் ஏற்றுக்கொண்டு மகிழ்வோடு வாழ முயலுவோம்.
2. பொறாமை உள்ளம்
ஜப்பான்காரன் வேலை செய்யவில்லை என்றால் செத்து விடுவான். சீனாக்காரன் சூதாடாமல் இருந்தால் செத்து விடுவான். நம்ம சொந்தக்காரன் நாம் சந்தோஷமாக இருந்தால் செத்து விடுவான். இதுதான் இன்றைய உலகம், இவர்கள் தான் இன்றைய மனிதர்கள். பொறாமை எனும் நோயினால் அவதியுற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இயேசுவின் சொந்த ஊர் மக்கள் சாதாரண ஒரு தச்சரின் மகன் எப்படி இந்நிலைக்கு உயர முடியும்? எப்படி ஞானம் மிகுந்தவராக வளர முடியும்? என பேசுவதே, அவர்களின் பொறாமை உள்ளத்தையும், இயேசுவை ஏற்றுக் கொள்ளாமையையும் காட்டுகிறது. ஒருவர் மற்றவரின் மிகச்சிறந்த நடத்தை, சாதனை அல்லது உடைமை ஆகியவற்றை பெறமுடியாமல் போகும் போதும் மற்றும் அதைப் பெற விரும்பும் போதும் அல்லது மற்றொருவர் அதைப் பெறக்கூடாது என விரும்பும் போதும் நிகழும் ஒரு வித உணர்ச்சியாக வரையறுக்கப்படுவதே பொறாமையாகும். பெர்ட்ராண்ட் ருஸ்ஸல் என்பவர் பொறாமை மகிழ்ச்சியின்மையின் முக்கிய காரணங்களில் ஒன்று எனக் கூறுகின்றார். இது மனித இயல்பின் உலகளாவிய நோய் ஆகும்.
பொறாமை படைத்த நபர் தனது பொறாமையால் தனக்கு மட்டும் மகிழ்வின்மையை விளைவிப்பது இல்லை மாறாக பிறருக்கும் இடையூறுகளை ஏற்படுத்துகிறார். பொறாமை என்பது ஏழு கொடும் பாவங்களில் ஒன்றாகும். சொந்த அண்ணன் மற்றும் தம்பி தனது வாழ்க்கையில் நல்ல வேலை, வீடு என உயர்ந்தாலும் பொறாமைப்படும் ஒரு நிலை இன்று நமது சமுதாயத்தில் நிலவி வருகிறது. நான் மட்டும் இப்படி இருக்க மற்றவர் ஏன் வளர வேண்டும்? என்னும் பொறாமை உள்ளம் தான் இன்று நம்மையும், நம்முடைய சமுதாயத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுவது போல நம்முடைய உள்ளங்கள் அன்பின் உள்ளமாக மாற பொறாமை உள்ளம் தூக்கி எறியப்பட வேண்டும். வாழ்ந்து உயர்ந்து விட்டால் பொறாமையில் பேசுவார்கள். தாழ்ந்து விழுந்து விட்டால் கேவலமாக பேசுவார்கள். இவ்வளவு தான் மனிதர்களின் உலகம் என எண்ணி நமது பொறாமை உள்ளத்தை மாற்றி அன்பில் வாழ்வோம்.
3. சந்தேக குணம்
"சந்தேகத்தை போல் வேகமாக வளரும் விஷ விருட்சம் வேறேதுவுமில்லை". நற்செய்தியில் "கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உன் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்" (லூக்கா 4:23) என இயேசு கூறுவது அவர்களுடைய சந்தேகத்தை நமக்கு வெளிப்படுத்திக் காட்டுகிறது. இயேசுவின் வாசிப்பையும் மற்றும் பேச்சையும் கேட்டு வியந்து பாராட்டிய மக்கள் அவரை ஏற்று கொள்ளாததற்கு அவர்களில் இருந்த சந்தேக குணமே காரணமாக அமைகிறது. அன்று இறைவன் முன் ஆபிரகாம்(தொ.நூல் 17:15-21), கிதியோன்(நீதி.த 6:36-40), செக்கரியா(லூக் 1:18) மற்றும் பேதுரு (மத் 18: 30-31) சந்தேகம் கொண்டது போல இன்று நாமும் நம்முடைய குடும்பத்தில் நமது கணவர் மற்றும் மனைவி மீது சந்தேகம் கொண்டு நமது வாழ்வை இழந்து வருகின்றோம். தேவையற்ற சின்ன சின்ன சந்தேகங்கள் தான், பெரிய பெரிய பிளவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. சந்தேகங்களை ஒழித்திடும் போது நம் உறவுகளை இணைக்கும் மற்றும் மகிழ்விக்கும்.
அன்பால் வெல்லுவோம்
"வாழ்வின் உண்மையான பொருள், அன்பு செலுத்துவதிலும், அன்பு செலுத்தப்படுவதிலுமே பொதிந்துள்ளது" என்கிறார் புனித அன்னை தெரசா. ஆலிவ் மரத்தின் ஒவ்வொரு பகுதியிலும் எண்ணெய் இருப்பதைப் போலவே, படைப்பின் ஒவ்வொரு பகுதியிலும் அன்பு ஊடுறுவுகிறது. ஆனால் ஓர் ஆரஞ்சுப் பழத்தின் நறுமணச்சுவையை சொற்களால் விளக்க முடியாது, அதே காரணத்திற்காக அன்பிற்கு சொல்விளக்கம் கூறுவதும் மிகவும் கடினம். அதன்` நறுமணச்சுவையை அறிய நீங்கள் பழத்தைச் சுவைக்க வேண்டும். அன்பும் அதுபோலத்தான். "அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்"(1 கொரிந்தியர் 13:7) என்னும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடிகளாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப பிறரை வெறுக்க வைக்கும் எண்ணங்களை ஒழிக்க அன்பை ஏற்று வாழ்வோம். தெரிந்த முகமும், பொறாமை உள்ளமும் மற்றும் சந்தேக குணமும் நம்மிலிருந்து அன்பால் அழிக்கப்படும் போது, நாம் மட்டும் அல்ல நம்மோடு உடனிருப்பவர்களும் உருவக்கப்படுவார்கள்.
இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
அன்புடன்
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF
Thursday, January 20, 2022
🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 3-ஆம் ஞாயிறு - ( ஆண்டு- C) ----- 23-01-2022- ஞாயிற்றுக்கிழமை
🌱விவிலிய விதைகள்🌱
பொதுக்காலம் 3-ஆம் ஞாயிறு
தமிழ் திருவழிபாட்டு மறையுரை
முதல் வாசகம்: நெகேமியா 8: 2-4a, 5-6, 8-10
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 12: 12-30
நற்செய்தி: லூக்கா 1: 1-4; 4: 14-21
தூய ஆவியில் வாழ்வு
விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தில் உருளைக்கிழங்கு பயிர் செய்து, அதை ஒவ்வொரு முறையும் தன்னுடைய மாட்டு வண்டியில் சந்தைக்கு எடுத்துச் சென்று வியாபாரம் செய்கிறார். திடீரென்று அவருடைய நிலத்தின் ஒரு பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதாக கண்டறிகிறார். எண்ணெய் கிணற்றின் மூலமாக அவர் மிகப் பெரிய பணக்காரராக மாறுகிறார். மிக ஆடம்பரமான சொகுசு கார் ஒன்றையும் வாங்குகிறார். மீதமுள்ள நிலத்தில் தொடர்ந்து அவர் உருளைக்கிழங்கு பயிர் செய்து அதை தன்னுடைய காரில் சந்தைக்கு எடுத்து செல்கிறார். ஆனால் அவர் தன்னுடைய காரை எடுத்து சென்ற விதம் கண்டு சந்தையில் மக்கள் அனைவரும் அவரைப் பார்த்து சிரித்தார்கள். ஏனென்றால் அவருடைய சொகுசு காரையும் அவரது மாட்டு வண்டியை இழுத்துச் சென்ற அதே மாடுகள் இழுத்துச் சென்றன. பணத்தால் தனது பழைய நிலையிலிருந்து மாறி கார் வாங்கிய அந்த மனிதனுக்கு பழைய மாடுகளை விடவும் தெரியவில்லை, புதிய காரை பயன்படுத்தவும் தெரியவில்லை. அதனால் தான் அவன் காரை இன்னும் மாடுகள் இழுத்து செல்கின்றன. கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, பல வேளைகளில் நமது கிறிஸ்தவ வாழ்வும் இந்த விவசாய பணக்காரன் போல தான் இருக்கிறது. "யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்".(1 கொரிந்தியர் 12:13) என்னும் இன்றைய இரண்டாம் வாசகத்தின் அடித்தளத்தில், நாம் தூய ஆவியால் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்துவின் உறுப்புகளாக இருக்கின்றோம் என்பதை மறந்து வாழ்கின்றோம். தூய ஆவியால் இயங்கும் கிறிஸ்து என்னும் புது கார் நமக்கு கிடைத்த பிறகும் கூட, நமது பழைய மனித பலவீனங்களை கொண்டே அந்த கிறிஸ்து என்னும் காரை இயக்க முற்படுகின்றோம். அர்த்தமற்ற வாழ்வை வாழுகின்றோம்.
"உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார்" (1 கொரிந்தியர் 12:12). என்பதை உணர்ந்து, "ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார்" (1 கொரிந்தியர் 12:11). என நமது வாழ்வு தூய ஆவியில் ஆட்கொள்ளப்பட்ட வாழ்வாக அமைய வேண்டும். இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு, பாலைவனத்தில் நாற்பது நாட்கள் நோன்பிருக்க மற்றும் சாத்தானால் சோதிக்கப்பட அழைத்து செல்லப்பட்டு அதில் வெற்றியும் பெற்று தூய ஆவியின் வல்லமை உடையவராக கலிலேயாவுக்கு திரும்பிப் போனார் (லூக்கா 4:14) என்னும் இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடித்தளத்தில் இயேசுவினுடைய பணி வாழ்வு முழுவதும் தூய ஆவி நிறைந்திருந்தார். நம் அனைவருக்கும் அவரே தூய ஆவியில் வாழ்வுக்கு முன் உதாரணமாக இருக்கிறார். ஆவியிலும் உண்மையிலும் வாழ ஒரு மனிதருக்கு இயேசுவே சிறந்த எடுத்துக்காட்டு.
1. தூய ஆவி அவரில் தங்கியிருக்கும் என்னும் வாக்குறுதி.
பழைய ஏற்பாட்டில் உங்களுக்காக மெசியா வருவார் என்னும் வாக்குறுதியில், மெசியாவில் தூய ஆவி நிறைந்திருப்பார் அதாவது அவர் மேல் இருப்பார் என்னும் வாக்குறுதியும் தரப்பட்டிருக்கிறது. "ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு — இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்." (எசாயா 11:2) ஆக மெசியாவின் வாழ்வு தூய ஆவியில் நிறைந்திருக்கும் என்பது பழைய ஏற்பாட்டிலே முன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2. தூய ஆவியில் பிறப்பு
இயேசுவின் பிறப்பும் தூய ஆவியால் நிகழ்வதை பார்க்கின்றோம். அன்னை மரியாளுக்கு மங்கள வார்த்தை கூறியபொழுது, “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்". (லூக்கா 1:35)
3. பணிவாழ்வில் தூய ஆவி
இயேசுவின் பணி வாழ்வு முழுவதும் தூய ஆவியில் நிறைந்திருந்தார்.(யோவான் 3:34) தொடக்கத்தில் திருமுழுக்கு பெற்ற பொழுது தூய ஆவி இறங்கி வருவதும் (மத்தேயு 3:16), அதே ஆவி அவரை பாலைவனத்துக்கு அழைத்துச் செல்வதும் (லூக்கா 4:1), பாலைவன சோதனைக்குப் பிறகு அவர் தூய ஆவியின் வல்லமை உடையவராய் கலிலேயாவுக்கு திரும்பி செல்வதும் (லூக்கா 4:14) மற்றும் தொழுகைக் கூடத்தில் "ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்" (லூக்கா 4:18) என பறைசாற்றுவதும் மற்றும் தூய ஆவியில் தீய ஆவிகளை விரட்டுவதும் ( மத்தேயு 12:22-32) இவருடைய பணி வாழ்வில் தூய ஆவி நிறைந்திருந்ததை எடுத்துரைக்கிறது. இன்னும் தனது பணி வாழ்வில் பல தருணங்களில் இயேசு தனக்கும் தூய ஆவியாருக்கும் உண்டான உறவைப் பற்றியும், உங்களுக்காக துணையாளராம் தூய ஆவியை அனுப்புவதாகவும் வாக்களித்திருக்கிறார் (யோவான் 14: 15-31).
4. இயேசுவின் இறப்பில் - உயிர்ப்பில் தூய ஆவி
இறைமகன் இயேசு கிறிஸ்து தான் இறக்கும் பொழுதும் மற்றும் அவரது உயிர்ப்பில் உம் தூய ஆவி நிறைந்திருந்திருக்கிறது. "கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே"(எபிரேயர் 9:14). ஆக இயேசு சிலுவையில் இருந்தபொழுதும் தூய ஆவி அவரோடு இருந்தது. இயேசுவின் உயிர்ப்பின் போதும் தூய ஆவி உடனிருந்ததை பார்க்கின்றோம்.(உரோமையர் 1:4, 8:11)
இயேசுவின் வாழ்வு கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாழ்வு , ஏனெனில் அது தூய ஆவியால் நிறைந்திருந்தது. ஆவியின் வல்லமையில் ஜெபித்த வாழ்வு, தந்தையின் குரலுக்கு செவிகொடுத்து, எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு, இறையாட்சியை அறிவித்தார். ஆவியில் நம் வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர் இறைமகன் இயேசு. தூய ஆவியானவரால் வழிநடத்தப்பட்டு வாழப்படும் வாழ்வு தொடக்கம் முதல் இறுதி வரை கிறிஸ்துவில் இணைந்த வாழ்வாக அமைகிறது. அன்று நாம் குழந்தையாக இருந்தபோது திருமுழுக்கின் வழியாக தூய ஆவியில் பிறப்பெடுத்தோம். உறுதிப்பூசுதல் வழியாக தூய ஆவியில் உறுதிபடுத்தப்பட்டோம். இன்றும் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியின் ஆலயங்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் நாம் பாவத்திற்காக மன்னிப்பு கேட்கின்ற பொழுது பாவசங்கீர்த்தனத்தின் வழியாக மீண்டும் நாம் தூய ஆவியில் உறுதிபடுத்தப்படுகின்றோம். "இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார்". (உரோமையர் 8:11) கிறிஸ்துவிலிருந்து இறைத்திட்டத்தை நிறைவேற்றிய தூய ஆவி நம் உள்ளும் இருக்கின்றார். உலக ஆசைகளுக்கு மற்றும் மாயைகளுக்கு அடிமை ஆகாமல், இறைவன் நமக்குக் கொடையாக கொடுத்திருக்கின்ற தூய ஆவியை உணர்ந்து, கிறிஸ்து என்னும் உடலின் உறுப்புகளாய் வாழ்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
அன்புடன்
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF
Friday, January 7, 2022
🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு பெருவிழா - ( ஆண்டு- C) ----- 09-01-2022- ஞாயிற்றுக்கிழமை
நீங்கள் திருமுழுக்கு பெற்ற நாள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதை கொண்டாடுவீர்களா? நமது பிறந்த நாளை தெரிந்து, அதை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்றோம். ஆனால், நமது திருமுழுக்கு நாளை மறந்து விடுகின்றோம். ஏனென்றால் நமது திருமுழுக்கின் முக்கியத்துவத்தை நாம் எப்பொழுதும் உணர்வதில்லை. இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்குப் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றோம். இது இயேசுவின் மற்றும் நமது திருமுழுக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள அழைப்பு தருகிறது. இயேசுவின் திருமுழுக்கு பெருவிழா கிறிஸ்து பிறப்பு காலத்தின் நிறைவாகவும் அமைகிறது.
திருவிவிலியம் நமக்கு எண்ணற்ற திருமுழுக்கின் நிலைகளை/வகைகளை எடுத்துரைக்கிறது.
1. யோவானின் திருமுழுக்கு (மத் 3:6)
2. இயேசுவின் திருமுழுக்கு (மத் 3:13-17)
3. தூய ஆவியில் திருமுழுக்கு (1 கொரி 12:12-13)
4. நெருப்பில் திருமுழுக்கு ( லூக். 3:16)
5. நம்பிக்கையாளரின் திருமுழுக்கு (தி. பணி 2:41)
6. மேகத்தால்/கடலால் திருமுழுக்கு-மோசேயின் திருமுழுக்கு (1 கொரி 10:2)
7. இறந்தோருக்காக திருமுழுக்கு ( 1 கொரி 15:29)
ஆனால், கத்தோலிக்க திருஅவையில் மூன்றுவிதமான திருமுழுக்கை பற்றி சொல்லப்படுகிறது.
1. தண்ணீரால் திருமுழுக்கு:-
இது திருஅவையிலிருக்கும் பொதுவான முறையாகும். நாம் எல்லோருமே குழந்தையாக இருந்த பொழுது, குருவானவர் நம்மீது தண்ணீர் ஊற்றி, தமத்திருத்துவத்தின் பெயராலே நமக்கு பெயர் வைத்து கிறிஸ்துவில் நம்மை இணைத்தார். இது தண்ணீரால் திருமுழுக்கு என்பதாகும்.
2. இரத்தத்தால் திருமுழுக்கு:-
திருமுழுக்குப் பெறாத ஒருவர் கிறிஸ்துவுக்காக, அவரின் பொருட்டு தன்னுடைய உயிரையே அர்ப்பணித்து, அவருக்காக இரத்தம் சிந்துவது தான் இந்த திருமுழுக்கு. இயேசுவின் பிறப்பின் பொழுது எண்ணற்ற குழந்தைகள் ஏரோதுவால் கொல்லப்பட்டார்கள். (மத் 2:16) இந்த மாசில்லா குழந்தைகள் கிறிஸ்துவின் பொருட்டு இரத்தம் சிந்தி மறைசாட்சியாக திருமுழுக்கு பெற்றவர்கள். தொடக்க கால கிறிஸ்தவர்கள் உரோமையர்களால் இயேசுவின் பெயரால் கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட போதும் இரத்தத்தால் திருமுழுக்குப் பெற்றார்கள். ஆக இரத்தத்தால் திருமுழுக்கு என்பது தண்ணீரால் திருமுழுக்கு போல திருஅவையால் ஏற்றுக்கொள்ளபட்டதாகும் (CCC-1258).
3. விருப்பத்தால் திருமுழுக்கு
கிறிஸ்தவத்தை சாராத ஒரு நபர் தன்னுடைய வாழ்வின் ஏதாவது ஒரு நிலையில் அல்லது சாகும் தருவாயில் தான் ஒரு கிறிஸ்தவராக இருக்க வேண்டும் என மனதால் நினைத்தாலோ மற்றும் கிறிஸ்தவராக மாறுவதற்கு தன்னைத் தயாரித்து கொண்டிருக்கையில் இறந்திருந்தாலோ, அவர்கள் தங்களது விருப்பத்தால் திருமுழுக்கு பெற்றவர்களாக கருதப்படுகிறார்கள் (CCC-1260). இன்று நாம் கொண்டாடுகின்ற இயேசுவின் திருமுழுக்கு, நமது திருமுழுக்கை நினைவுபடுத்துகின்றது. இது திருமுழுக்கின் உன்னதமான நிலைகள், அதன் அர்த்தங்கள் மற்றும் அது தரும் அழைப்பு பற்றியும் புரிந்து கொள்ள அழைக்கிறது. இதற்கு அடித்தளமாய் இருப்பது இயேசுவின் திருமுழுக்கு.
இயேசுவின் திருமுழுக்கு:-
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான தருணம் இருக்கும். அது அவனுடைய வாழ்க்கையை மாற்றி அமைக்கும் மற்றும் புது மாற்றத்தை தரும். இறைமகன் இயேசுவின் வாழ்க்கையிலும் அத்தகைய சில தருணங்கள் இருந்தது. அவர் தன்னுடைய பன்னிரண்டாம் வயதில் ஆலயத்திலேயே தங்கியிருந்து தந்தைக்கும் அவருக்கும் உண்டான உறவை முதன் முதலாக கண்டுணர்ந்தது.(லூக்கா 3:23).
ஏறக்குறைய 18-வருடங்களுக்கு பிறகு அவருடைய 30-வது வயதில் மீண்டும் அப்படி ஒரு தருணம் ஏற்படுகிறது, அது தான் அவரின் திருமுழுக்கு. பெரும் கூட்டம் ஒன்று யோவானை நோக்கி திருமுழுக்கு பெறுவதற்காக செல்கிறது. அந்தக் கூட்டம் கடவுளோடு தங்களுடைய உறவை புதுப்பிப்பதற்காக மற்றும் தந்தையாகிய கடவுளை கண்டு கொள்வதற்காக சென்றது. இயேசுவும் அங்கு சென்றது 18- ஆண்டுகளுக்கு முன்பு ஆலயத்தில் கண்டு கொண்ட தந்தையின் உறவில் இணைந்து கொள்வதற்காகும். இயேசுவின் திருமுழுக்கு அவரது மூன்று விதமான சாயலை நமக்கு வெளிப்படுத்துகிறது.
1. இறைச்சாயல்
2. மனித சாயல்
3. பணிச்சாயல்
1. இறைச்சாயல்:-
தந்தையோடு உறவை மீண்டும் புதுப்பித்த அந்த தருணம் தான் இயேசுவின் இறைச்சாயலை எடுத்து காட்டுகிறது. அவரின் திருமுழுக்கின் போது மூவொரு இறைவனின் பிரசன்னத்தை பார்க்கின்றோம். தந்தையாகிய கடவுள் எனும் வார்த்தையும் புறா வடிவில் தூய ஆவியாரின் வருகையும் என இங்கு இவர்கள் கிறிஸ்துவின் இறைச்சாயலை உறுதிப்படுத்துகிறார்கள். இதற்கும் மேலாக தந்தையாகிய இறைவன் "என் அன்பார்ந்த மகன் நீயே" (லூக்கா 3:22) என எடுத்துரைத்தது, இவர் கடவுளின் மகன் மற்றும் இறைச்சாயல் கொண்டவர் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
2. மனித சாயல்:-
யோவானிடம் பெருந்திரளான மக்கள் இறைவனை தங்களது வாழ்க்கையில் தேடியவர்களாக மனமாற்றம் பெற்று திருமுழுக்கு பெறுகிறார்கள், அவ்வேளையில் இயேசுவும் திருமுழுக்கு பெறுகிறார். இறைவனைத் தேடும் மக்களோடு தன்னையும் அடையாளப்படுத்தி கொள்வதற்காக இந்த திருமுழுக்கு. இதைத்தான் இயேசுவின் திருமுழுக்கின் போது கேட்ட அந்த விண்ணக குரலும் உறுதி செய்கிறது. என் அன்பார்ந்த மகன் நீயே" (லூக்கா 3:22) என்பது திருப்பாடல் 2;7 -லிருந்து எடுக்கப்பட்டது. இது வரவிருக்கின்ற மெசியா இவர் என்பதை சுட்டிக்காட்டுகிறது. "உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (லூக்கா 3:22) என்பது இறைவாக்கினர் எசாயாவின் நூலில் காணப்படுகிறது (எசாயா 42 ;1). இது இவர் தந்தையின் பணியாளனாக இறை சித்தத்தை நிறைவேற்ற மனித சாயலில் தன்னை அர்ப்பணித்ததை காட்டுகிறது. தங்களுடைய பாவத்திலிருந்து மனமாற்றம் பெறுவதற்காக, யோவானிடம் திருமுழுக்கு பெற்ற மக்களோடு இயேசுவும் திருமுழுக்கு பெறுவது, அவர் ஒரு பாவி என்பதை காட்டுவதற்காக அல்ல. மாறாக மனித பாவங்களைப் போக்க தெய்வமே மனித சாயலை தெரிந்து கொண்டதாகும். ஆக இயேசுவின் திருமுழுக்கு மனித சாயலையும் காட்டுகிறது.
3. பணிச்சாயல்:-
இயேசுவின் பணிச்சாயல் என்பது திருமுழுக்கு அவரது பணி வாழ்வின் தொடக்கமாக அமைந்ததாகும். "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்னும் கூற்றுக்கு ஏற்ப, "தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டாற்றுவதற்கே வந்தேன்" என்னும் வார்த்தையை வாழ்வாக்க, ஊற்றாக அமைந்தது தான் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்கு. முப்பது ஆண்டுகள் தன்னுடைய பிரசன்னத்தால் நற்செய்தியைஅறிவித்தவர், அடுத்த மூன்று ஆண்டுகள் ஆற்றும் மகத்தான வரலாற்று நினைவுக்கு தொடங்கியிருக்கும் பணிக்கு அச்சாணி தான் இந்த திருமுழுக்கு. அவரின் இந்த மகத்தான பணியை போல எவரும் இம்மண்ணுலகில் செய்ததும் இல்லை, ஏன்? இவ்வாறு செய்ய போவதும் இல்லை என்று கூறலாம். அதற்காக தம்மை கடுமையாக தயாரித்து அளப்பெரிய இறைபணியாம் மீட்புப்பணியை இறைமகன் இயேசு கிறிஸ்து செய்தார் என்பதை தான் அவரது இந்த திருமுழுக்கு நினைவுப்படுகின்றது. "ஜெபமின்றி ஜெயம் இல்லை, தூய ஆவியின்றி பணியில் நிறைவில்லை" என்பதை முற்றிலும் உணர்ந்த இறைமகன் இயேசு கிறிஸ்து, ஆவியின் துணைப்பெற்று பணி வாழ்வை தொடங்க முற்படுகின்ற ஒரு நினைவுச் சின்னம் தான் அவரது இந்த திருமுழுக்கு.
கிறிஸ்தவர்களின் திருமுழுக்கு:-
கிறிஸ்தவர்களின் திருமுழுக்கு என்றால் என்ன? திருமுழுக்கு "baptizein" என்னும் கிரேக்க வார்த்தையிலிருந்தும் அதாவது ஆங்கிலத்தில் "plunge" அல்லது "immerse". இது தமிழில் தண்ணீரில் மூழ்குதல் என பொருள் படும். அன்று நாம் குழந்தையாக இருந்த பொழுது நம்முடைய ஜென்ம மற்றும் கர்ம பாவத்தை நீக்கி, இறைவனுக்கும் திருஅவைக்கும் நம்மை பிள்ளைகளாக மாற்றிய ஒரு உன்னதமான திருவருட்சாதனம் தான் இந்த திருமுழுக்கு. இது ஒரு திருவருட்சாதனம் = திரு + அருள் + சாதனம். கடவுளின் அருளை நமக்கு பெற்று தரும் ஒரு சாதனமாகும். இதன் முக்கியத்துவத்தை கத்தோலிக்க மறைக்கல்வி நமக்கு ஏழு நிலைகளில் எடுத்துரைக்கிறது. (Catechism of Catholic Church - CCC-1213)
1. கிறிஸ்தவத்தின் அடித்தளம்.
2. தூய ஆவியில் நாம் வாழ்வதற்கான நுழைவுவாயில்.
3. மற்ற திருவருட்சாதனங்கள் பெறுவதற்கான முதல் படி.
4. பாவத்திலிருந்து நம்மை கழுவி புது பிறப்பெடுக்க வைக்கிறது.
5. இறைவனின் பிள்ளையாக மாற்றுகிறது.
6. கிறிஸ்துவின் அங்கத்தினர்களாக உருவெடுக்க வைக்கிறது.
7. திருஅவையில் நம்மை இணைத்து அதன் பணி பொறுப்பை நமக்குத் தருகிறது.
இன்று நாம் எதற்காக திருமுழுக்குப் பெற்றோம்? மேற்காணும் திருமுழுக்கின் அர்த்தங்களை நமது வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறோமா? என சிந்திப்போம். கிறிஸ்துவிடம் திருஅவையில் நம்மை இணைத்து இறையருளை நமக்கு வழங்கியிருக்கும் திருமுழுக்கு என்னும் திருவருட்சாதனம் நம்மை இறைவனின் பணி வாழ்விற்கு அழைக்கிறது. இதைத்தான் பெற்றோர்களாகிய நாம் கொடுத்த திருமுழுக்கு வாக்குறுதிகளும் நமக்கு நினைவூட்டுகிறது. "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்"( மத்தேயு 28:19). எனும் இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப நமது வாழ்க்கையால் நாம் நம்முடைய திருமுழுக்கை வெளிப்படுத்த அழைப்பு பெறுகிறோம். நமது வார்த்தை, செயல் மற்றும் வாழ்வு நாம் திருமுழுக்கு பெற்ற கிறிஸ்தவர்கள் என்பதை பிறருக்கு எடுத்து கூற வேண்டும். அத்தகையோராய் நாம் வாழ்வோம்.
இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
Subscribe to:
Posts (Atom)