Thursday, December 16, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு - ( ஆண்டு- C) ----- 19-12-2021- ஞாயிற்றுக்கிழமை

 



நற்செய்தி:-  லூக்கா 1: 39-45


நம் வாழ்வின் சந்திப்புகள்


"மழை நிலத்தை சந்திக்கிறது,
கடல் அலை கரையை சந்திக்கிறது,
சூரியன் ஒவ்வொரு நாளும் நம்மை சந்திக்கிறான்,
நாம் ஒவ்வொரு நாளும் பலரை சந்திக்கின்றோம்."

சந்திப்பு மனித வாழ்வின் அங்கமாகும். நாம் பேசும்போது நம் உதடுகள் கூட சந்திக்கின்றது. இன்றைய நற்செய்தியில் அன்னை மரியாள் எலிசபெத்தை சந்திக்கிறார். இது வெறும் இருவரின் சந்திப்பு அல்ல, யுகங்களின் சந்திப்பு, விசுவாசத்தின் சந்திப்பு, பழைய ஏற்பாட்டின் மற்றும் புதிய ஏற்பாட்டின் சந்திப்பு. ஆக, அன்னை மரியாள் எலிசபெத்தை சந்தித்தது மாற்றத்தின் மற்றும் புது வாழ்வின் சந்திப்பு. இங்கு அன்னை மரியாள் மட்டும் எலிசபெத்தை சந்திக்கவில்லை, எலிசபெத்தும் அன்னையை சந்திக்கிறார், யோவான் இயேசுவை சந்திக்கிறார், இயேசு எலிசபெத்தையும் அவர் வயிற்றிலிருந்த யோவானையும் சந்திக்கிறார். சந்திப்புகள் இங்கே எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்துவதை பார்க்கின்றோம்.

1. மகிழ்ச்சி
"குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று" என்னும் வார்த்தைகள் அன்னை மரியாள் - எலிசபெத்து சந்திப்பு மகிழ்வை ஏற்படுத்தியதை காட்டுகிறது. எலிசபெத்தும் அவர் வயிற்றிலிருந்த குழந்தையும் மகிழ்ந்ததை பார்க்கின்றோம். அன்னையின் சந்திப்பு மகிழ்வைத் தருகிறது, நாமும் நமது வாழ்வில் பலரை சந்திக்கிறோம். இன்று நமது சந்திப்புகள் பிறருக்கு மகிழ்வை தருகிறதா? வேதனையை தருகிறதா? தொல்லையை தருகிறதா? அன்னையின் சந்திப்பை போல, நமது சந்திப்பு பிறருக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கட்டும்.
2. தூய ஆவி

அன்னையின் சந்திப்பு எலிசபெத்துக்கு தூய ஆவியை பெற்று தருகிறது. அன்னையின் சந்திப்பின் நிமித்தமாக தான் எலிசபெத்து தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அன்னையிடம், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்" என்று கூறுகின்றார். இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகளின் அடித்தளத்தில் "எங்கெல்லாம் நன்மை ஏற்படுகின்றதோ, அங்கெல்லாம் தூய ஆவியாரின் பிரசன்னம் நிறைந்திருக்கின்றது". அவ்வகையில் நமது சந்திப்பு பிறருக்கு நன்மையை ஏற்படுத்துகின்ற பொழுது, தூய ஆவியின் பிரசன்னமும் அங்கு நிறைந்திருக்கும். பிறருக்கு நான் தூய ஆவியின் பிரசன்னத்தை தருபவனாக இருக்கின்றேனா?

3. உதவி

முதிர்ந்த வயதில் கருத்தாங்கிய எலிசபெத்துக்கு அன்னையின் சந்திப்பு மிகப்பெரும் உதவியாக இருந்திருக்கும். முதிர்ந்த வயதானவர்க்கு எப்போதும் உதவிகள் தேவைப்படும், அதிலும் கருத்தாங்கியவர்க்கு இன்னும் அதிக உதவியாக இருந்திருக்கும் அன்னையின் சந்திப்பு.

4. இயேசு
சந்திப்பின் வழியாய் அன்னையானவள் இயேசுவை அவர்களுக்கு தந்திருக்கின்றார். தன் வயிற்றிலிருந்த இயேசுவை, அவரது பிரசன்னத்தை அவர்களுக்கு தந்ததன் வாயிலாகத்தான் அவர்களில் மகிழ்ச்சியும், தூய ஆவியும் நிறைந்ததை நாம் பார்க்கின்றோம்.

இன்று நமது வாழ்க்கையிலும் ஒவ்வொரு நாளும் நாம் எண்ணற்ற மனிதர்களை சந்திக்கின்றோம். இன்று எனது சந்திப்புகள் பிறருக்கு எப்படி அமைகின்றது? என் சந்திப்புகள் பிறருக்கு மகிழ்ச்சியை தருகிறதா? பிறருக்கு உதவியாக அமைகின்றதா? தூய ஆவியாரின் பிரசனத்தை ஏற்படுத்தும் நன்மையை தருகிறதா? இவை அனைத்திற்கும் மேலாக இயேசுவின் பிரசன்னத்தை உருவாக்கி தருகிறதா? நமது சந்திப்புகள் பிறருக்கு துன்பத்தை ஏற்படுத்தாமல் என்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்த கூடியதாகவும், இறையருளை உருவாக்குவதாகவும் அமையட்டும்.


இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

அன்புடன்,

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF

வீடியோவாக பார்க்க...




                            https://youtu.be/JF43BxMto9s






Friday, December 10, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு - ( ஆண்டு- C) ----- 12-12-2021- ஞாயிற்றுக்கிழமை

 


முதல் வாசகம் : 

                 செப்பனியா  3: 14-17

இரண்டாம் வாசகம் : 

                 பிலிப்பியர் 4: 4-7

நற்செய்தி:-

      லூக்கா 3: 10-18

நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
(மகிழ்ச்சி தரும் மூன்று நற்செய்தியின் மதிப்பீடுகள்)


கிராமம் ஒன்றில் வயதான முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரை பார்த்தாலே எல்லோருக்கும் பயம், யாரும் அவர் அருகில் வரக் கூட மாட்டார்கள் ஏனென்றால் அவர் எப்பொழுதும் யாரையாவது மற்றும் எதையாவது குறை கூறிக் கொண்டே இருப்பார், அவர் வார்த்தைகள் எல்லாம் உள்ளத்தை பாதிக்கக் கூடியதாக இருக்கும். எனவே, அந்த ஊரில் யாருக்கும் அவரை பிடிக்காது இதனால் அவரைச் சார்ந்தவர்கள் அதிகமாக கஷ்டப்பட்டார்கள். ஒருநாள் அவர் தன்னுடைய 80-வது பிறந்தநாளை கொண்டாடினார், அன்று ஊரெல்லாம் இவரைப் பற்றிய பேச்சு. இந்த முதியவர் இன்று யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் குறை கூறவில்லை, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். இதையறிந்த ஊர் மக்களுக்கு ஒரே ஆச்சரியம், யோசித்தார்கள், எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அந்த முதியவரிடம் கேட்டார்கள். அதற்கு அந்த முதியவர் ஊர் மக்களிடம், "நான் கடந்த 80 ஆண்டுகளாக என்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை தேடிக்கொண்டே இருந்தேன். அது கிடைக்கவில்லை, அதனால் இனி தேடுவதை நிறுத்தி விட வேண்டும் என்று நினைத்தேன், எனது மகிழ்ச்சிக்கான தேடலை நிறுத்தினேன், இன்று மகிழ்ச்சியாக இருக்கின்றேன்" என்றார். இந்த முதியவர் மகிழ்ச்சியை தன்னிலே தேடாமல், அவர் பார்க்கின்ற மனிதர்களிடத்திலும் மற்றும் சமுதாயத்திலும் தேடிக்கொண்டிருந்தார். ஒரு கால கட்டத்தில் அவர் அதை நிறுத்துகின்ற பொழுது தன்னிலே மகிழ்ச்சி இருப்பதை உணர்கின்றார். இது தான் உண்மை, இன்று நாம் எல்லோரும் மகிழ்ச்சியை வெளியே தேடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், மகிழ்ச்சி நம்மில் இருக்கிறது, நம்மோடு இருக்கின்றது, இதை நாம் தான் உருவாக்க வேண்டும். மகிழ்ச்சி என்பது கானல் நீரைப் போல அதைத்தேடி நாம் வெளியே சென்றோமென்றால் அது நம்மை விட்டு விலகி தான் செல்லும். கிறிஸ்தவர்களாகிய நம்மில் மகிழ்ச்சி இருக்கிறது, அது கிறிஸ்து தரும் மகிழ்ச்சி, அவரது பிறப்பு, வாழ்வு, இறப்பு மற்றும் உயிர்ப்பு தருகின்ற மகிழ்ச்சி. திருவருகைக் காலத்தில் கிறிஸ்தவத்தில் மற்றும் கிறிஸ்துவின் பிறப்பில் மகிழ்ச்சியை நாம் உணரவும், இந்த மகிழ்ச்சி என்றும் நிலையாய் இருக்க நம்மை நாமே தயாரிக்கவும் இன்றைய திருவழிபாட்டின் வழியாக அழைக்கப்படுகின்றோம்.

கத்தோலிக்கத் திருஅவை ஒவ்வொரு ஆண்டும் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையை மகிழ்ச்சியின் ஞாயிறாக கொண்டாடுகிறது. "Gaudete" ('Rejoice' in English) என்னும் இலத்தீன் வார்த்தையிலிருந்து மகிழ்ச்சி என்னும் வார்த்தை வருகின்றது. நவம்பர் மாதம் 11-ஆம் தேதி புனித மார்ட்டின் அவர்களின் திருவிழாவிலிருந்து சரியாக நாற்பது நாட்கள் திருவருகைக் கால நோன்பு கடைபிடித்ததின் நிறைவாக இந்த மகிழ்ச்சியின் ஞாயிறானது கொண்டாடப்படுகிறது. இது கிறிஸ்தவத்தின் மற்றும் நமக்காக மீட்பர் ஒருவர் பிறக்கிறார் என்னும் கிறிஸ்தவர்களின் மகிழ்ச்சி. அதனால் தான் இயேசுவின் பிறப்பில் வானதூதர் இடையர்களிடம், “அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" (லூக்கா 2:10,11) என்றார்.

"மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி; இஸ்ரயேலே! ஆரவாரம் செய்; மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி". (செப்பனியா 3: 14) என இன்றைய முதல் வாசகத்தில் செப்பனியா இறைவாக்கினர் இஸ்ரயேல் மக்களிடம் ஆண்டவராகிய இறைவன் நம் மத்தியிலே இருக்கின்றார். எனவே எதற்கும் அஞ்சாமல் மகிழ்வோடு இருங்கள் என்கின்றார். இது வரவிருக்கும் இறைவன் நமக்காக இருக்கின்றார் என்பதை நினைத்து நாம் மகிழ்வு கொள்ள வேண்டும் என்பதை காட்டுகின்றது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார் பிலிப்பியருக்கு "ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்" (பிலிப்பியர் 4: 4)என்று கூறுகின்றார். எனவே "ஆர்ப்பரித்து அக்களியுங்கள்" என்னும் இன்றைய பதிலுரை பாடலுக்கு ஏற்றவாறு இயேசுவின் பிறப்பை மற்றும் அவர் நம்மில் வாழுகின்றார் என்னும் இந்த கிறிஸ்தவ வாழ்வை நினைத்து மகிழ்ந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

கிறிஸ்தவர்களிடத்தில் எதிர்நோக்கு மற்றும் தயாரிப்பை வலியுறுத்தும் இன்றைய திருவருகைக்காலத்தில் கிறிஸ்து பிறப்பின் மகிழ்ச்சியில் நிலைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விகளுக்கு இன்றைய நற்செய்தி பதில் அளிக்கின்றது. இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவானிடம் மூன்று விதமான மனிதர்கள் (மக்கள் கூட்டத்தினர், வரிதண்டுவோர் மற்றும் படைவீரர்) "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" (லூக்கா 3:10) என்னும் ஒரே கேள்வியைக் கேட்கின்றார்கள். இதற்கு அவர் மூன்று விதமான நற்செய்தியின் மதிப்பீடுகளை எடுத்துரைக்கின்றார்.
1. பகிர்வு

மக்கள் கூட்டத்தினர் கேட்ட பொழுது திருமுழுக்கு யோவான், “இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்” (லூக்கா 3:11) என்றார். இது பகிர்வு என்னும் நற்செய்தியின் மதிப்பீட்டை அவர் எடுத்துரைப்பதை காட்டுகிறது. நமது அன்றாட வாழ்விலும் நம்மால் முடிந்தவரை இல்லாதவரோடு பகிர்ந்து கொள்கின்ற பொழுது, நம்முடைய உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி பிறக்கும். இதை நாமும் நமது வாழ்க்கையில் உணர்ந்திருப்போம்.
2. நேர்மை

வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, “போதகரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரிடம் கேட்டனர். அவர், “உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்” (லூக்கா 3:12,13) என்றார். இது நேர்மையானவர்களாக வாழ்வதற்கு தருகின்ற அழைப்பாகும். நேர்மையும், உண்மையும் நம்மை கிறிஸ்துவின் வழியில் வாழ வைக்கும். கிறிஸ்துவின் வழி- மகிழ்வின் வழி. வரிதண்டுபவரான சக்கேயுவை இயேசு அழைத்த போதும், நேர்மையின் வழியில் வாழ்வதற்கு தான் அழைப்பு தருகின்றார். நேர்மையின் மகிழ்வில், தான் பெற்றதிலிருந்து பல மடங்காக திரும்ப கொடுக்கின்றார்.

3. நீதி

படைவீரரும் திருமுழுக்கு யோவானை நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். அவர், “நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்” (லூக்கா 3:14) என்றார். இது எவரையும் அநீதிக்கு உட்படுத்தாமல் நீதியின் பொருட்டு வாழ்வதற்கு அழைப்பு தருகின்றது. இதைத் தான் மலைப்பொழிவில், "நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர் (மத்தேயு 5:6) என்கிறார், இங்கு நிறைவு மகிழ்வாகும்.
               திருமுழுக்கு யோவான் தரும் இந்த மூன்று நற்செய்தியின் மதிப்பீடுகளும் கிறிஸ்தவ வாழ்வின் மகிழ்வை நமக்கு காட்டுபவை. கிறிஸ்தவ வாழ்வின் முழுமையான மகிழ்வை நம்முடைய உள்ளங்களில் பெறுவதற்கு, இன்று நாம் என்ன செய்ய வேண்டும்? என்னும் அதே கேள்வியை நம்மில் எழுப்புகின்ற போது, நாமும் நற்செய்தியின் மதிப்பிடுகளான பகிர்வு, நேர்மை மற்றும் நீதி இந்த மூன்றையும் நம்முடைய வாழ்க்கையில் வாழ வேண்டும். அப்போது கிறிஸ்துவின் பிறப்பு நமது வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சியை தரும்.

   இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

அன்புடன்,

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF

வீடியோவாக பார்க்க...

                           


https://youtu.be/BZnTwZLmwq4
    


 


  






Friday, December 3, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு - ( ஆண்டு- C) ----- 05-12-2021- ஞாயிற்றுக்கிழமை

 


முதல் வாசகம் : 

                  பாரூக்கு  5: 1-9

இரண்டாம் வாசகம் : 

                 பிலிப்பியர் 1: 4-6, 8-11

நற்செய்தி:-

      லூக்கா 3: 1-6


உள்ளதை கூர்மையாக்குங்கள் 


            அவன் ஒரு மரம் வெட்டும் தொழிலாளி பல நாட்களாக வேலையில்லாமல் இருந்தான். ஒரு நாள் கிடைத்தது அதிக ஊதியத்துடன் கூடிய வேலை. மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றாக வேலை செய்ய வேண்டும் என தீர்மானித்தான். முதல் நாள் பன்னிரன்டு மரங்களை வெட்டினான். அடுத்த நாள் எட்டு மரங்கள் மட்டுமே அவனால் வெட்ட முடிந்தது. மூன்றாவது நாள் வெறும் ஐந்து மரங்கள் மட்டுமே வெட்டினான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒவ்வொரு நாளும் ஏன் எனது திறன் குறைந்து கொண்டே வருகிறது என யோசித்தான். பின் அவன் முதலாளியிடம், “ஐயா! என் உடம்பில் பலம் அதிகம் உண்டு. நன்றாக வேலை செய்ய வேண்டும் என்னும் ஆர்வமும் உள்ளது, ஆனால் என்னால் அதிக மரங்கள் வெட்ட முடியவில்லை என்றான். அதற்கு முதலாளி அவனிடம் நீ கடைசியாக எப்பொழுது உனது மரம் வெட்டும் இரம்பத்தை கூர்மை செய்தாய்?” என்று கேட்க, அந்த தொழிளாளியோ, கூர்மை செய்வதற்கெல்லாம் எனக்கு நேரம் இல்லை, நான் நிறைய மரங்களை வெட்ட வேண்டும் என்று கூறினான். அதற்கு அந்த முதளாளி, “நன்றாக வேலை செய்ய வேண்டும், ஒன்றை அடைய வேண்டும் என்ற இலக்கு மட்டும் போதாது மாறாக அதற்கான தயாரிப்பும் மிக அவசியமாகும். நீ நான்கு மணி நேரம் வேலை செய்தால் மூன்று மணி நேரம் இரம்பத்தை கூர்மை செய்ய பயன்படுத்து என்று கூறினார்.

                 இன்று நம்மிடையே இலட்சியம் மற்றும் இலக்கு நிறைய உண்டு, ஆனால் அதற்காக எவ்விதமான தயாரிப்பும் இருப்பதில்லை. கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட வேண்டும், இயேசுவை எனது உள்ளத்தில், இல்லத்தில், ஊரில், குடிலில் மற்றும் வாழ்வில் ஏற்க வேண்டும் என ஆசை இருக்கலாம், ஆனால் அதற்கான தயாரிப்பு பல மடங்கு நம்மில் இருக்க வேண்டும் என்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. பிறந்திருக்கின்ற இந்த திருவருகை காலம் ஒரு தயாரிப்பின் காலம், வரவிருக்கின்ற இயேசுவை நம்மில் ஏற்பதற்கு நம்மை முழுமையாக தயாரிக்க இது அழைக்கிறது.

    “ஆண்டவருக்காக வழியை ஆயுத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்” (எசாயா 40:3) என்னும் இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள் இன்றைய நற்செய்தியிலும் தரப்பட்டிருக்கிறது. அன்று இயேசுவின் பிறப்புக்கு முன்பு திருமுழுக்கு யோவான் பாலைவனத்தில் மக்களை தயாரித்தார். இயேசு தனது பணி வாழ்வுக்கு முன் நாற்பது நாட்கள் பாலைவனத்தில் தன்னை முழுமையாக தயாரித்தார்.(மத்தேயு 4:1-2)  இயேசு வாழ்ந்த காலத்தில் யூத சமுதாயத்தில் மெசியாவின் வருகைக்காக தயாரித்து வந்தனர். இன்று, நாமும் ஆண்டவரின் பிறப்புக்காக நம்மை தயாரிக்க அழைக்கப்படுகின்றோம்.

              “The Seven habits of Highly Effective People” அதாவதுஅதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் ஏழு பழக்கங்கள் என்னும் ஆங்கில புத்தகம் ஸ்டீபன் கோவே அவர்களால் எழுதப்பட்டது. இதில் இவர் குறிப்பிட்டுள்ள ஏழாவது பழக்கம் தான் “Sharpen the Saw” அதாவதுரம்பத்தை கூர்மைபடுத்து”, அப்படியென்றால் உனது வாழ்வில் வெற்றியடைய தயாரிப்பாக, உடல் உள்ள, ஆன்மீக மற்றும் சமூக நலம் என்னும் நான்கு நிலைகளையும் கவனிக்க வேண்டும் என்று கூறுகிறார். இதில் இன்றைய இறைவார்த்தை எடுத்துரைக்கும் தயாரிப்பு வெறும் நம்முடைய உடல் மற்றும் சமுதாயம் சார்ந்ததல்ல, மாறாக நமது உள்ளம் மற்றும் ஆன்மீகத்தை சார்ந்தது. நமது உள்ளத்தளவில் நாம் இறைவனின் வருகைக்காக நம்மை தயாரிக்க அழைக்கப்படுகின்றோம். மரம் வெட்டுவதற்காக கோடாரியையும், இரம்பத்தையும் கூர்மைப்படுத்துகின்ற நாம், இயேசுவின் வருகைக்காக நம்மை கூர்மைப்படுத்த அதாவது தயாரிக்க அழைக்கப்படுகின்றோம். நமது தயாரிப்பு நான்கு வழிகளில் அமையலாம்.

1. ஜெபத்தில்: கிறிஸ்தவர்கள் அன்றாட வாழ்க்கையில் செய்கின்ற ஒவ்வொரு செபங்களும் அவர்களை இறைவன் முன்பாக கொண்டு சேர்க்கின்றது. திருஅவையில் பலர் ஜெபத்தின் வழியாக இறைவனை நோக்கி சென்றிருக்கிறார்கள். இந்த நாட்களில் நாம் செய்கின்ற ஒவ்வொரு ஜெபமும் இறைவன் நமது உள்ளத்தில் வருவதற்காக நாம் செய்கின்ற தயாரிப்பு. எனவே, ஜெபத்தில் இறைவனை வரவேற்க நம்மை தயாரிப்போம்.

2. ஆன்மீக செயல்களில்: ஜெபத்தோடு நமது அன்றாட ஆன்மிக செயல்பாடுகளாக தினமும் திருப்பலியில் பங்கு கொள்வது, இறைவார்த்தையை வாசிப்பது, ஜெபமாலையில் பங்கேற்பது, அன்பிய கூட்டங்களிலும் பக்த சபைகளிலும் தமது பங்களிப்பை அளிப்பது மற்றும் பிறருக்கு உதவுவது என்னும் ஆன்மீக செயல்பாடுகளும் நம்மை இறைவனின் வருகைக்காக தயாரிக்கின்ற கருவிகளாகும்.

3. பாவ மன்னிப்பில்: இன்றைய நற்செய்தி வாசகம் நாம் செய்த ஒவ்வொரு பாவங்களையும் நினைத்து அதற்காக மன்னிப்பு கேட்டு புதுவாழ்வு பெறுவதற்கு அழைப்பு தருகிறது. பாவமற்ற வாழ்க்கை- தூய்மையான வாழ்க்கை, தூய்மையான வாழ்க்கை- இறைவனுக்கு உகந்த வாழ்க்கை, அத்தகையதொரு வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் முயற்சி செய்கின்ற பொழுது அதுவே இறைவன் நமது உள்ளத்தில் வருவதற்கான சிறந்த தயாரிப்பாகும்.

 4.   மனமாற்றத்தில்: இருளான நமது பழைய பாவ வாழ்விலிருந்து அதாவது நமது தீய எண்ணங்கள், செயல்கள் மற்றும் வார்த்தைகள் இவற்றிலிருந்து புதியதொரு வாழ்வு வாழ்வதற்கு முயற்சி செய்கின்ற பொழுது, நமது உள்ளத்தில் இறைவனை வரவேற்க நாம் நம்மை தயாரிக்கின்றோம். ஆக மனமாற்றமே திருவருகைக் காலத்தில் கிறிஸ்தவர்களின் சிறந்த தயாரிப்பு.

 நமது வீடுகளில் நடக்கும் திருமண நிகழ்வுகளுக்கு நாம் மேற்கொள்ளுகின்ற தயாரிப்புகள் ஏராளம். வெறும் மண்ணுலக வாழ்விற்கே நாம் எண்ணற்ற முறையில் தயாரிப்புகளை மேற்கொள்கின்ற போது விண்ணுலக வாழ்விற்கு நம்மை அழைத்துச் செல்லுகின்ற இயேசுவின் வருகைக்கு நாம் எத்தகைய முறையில் தயாரிக்க போகின்றோம்? எனவே, இந்த ஆண்டு நமது கிறிஸ்துமஸ் பெருவிழாவின் தயாரிப்பு வெறும் சமூக மற்றும் உடல் சார்ந்த தயாரிப்பாக அல்லாமல், உள்ளம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த தயாரிப்பாக அமைய நம்மை கூர்மையாக்குவோம்.

     இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.


ஆடியோவாக கேட்க...

                                 https://youtu.be/1pa9t9PGuPQ  

அன்புடன்,

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF