முதல் வாசகம் :
எரேமியா 33: 14-16
இரண்டாம் வாசகம் :
1தெசலோனிக்கர் 3: 12 - 4: 2
நற்செய்தி:-
லூக்கா 21: 25-28, 34-36
காத்திருப்போம் வருகைக்காய்...
இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பிறந்து இன்று உலகம் அறிந்தவர் தான் கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை. இவர் ஒரு முறை தேனீர் நிலையம் ஒன்றுக்கு செல்கிறார். அங்குள்ள உதவியாளரை அழைத்து தேனீரை கேட்கின்றார், அதன் பிறகு அந்த தேனீர் நிலையத்தில் ஆங்காங்கே உட்கார்ந்து தேனீர் குடித்துக் கொண்டிருப்பவர்களை பார்க்கின்றார். ஒரு மேசையில் அமர்ந்திருந்த ஒரு குழுவினர் திடீரென்று கூச்சலிடுவதை பார்க்கின்றார். ஏன் இந்த கூச்சலென்று பார்த்த போது, அங்கு ஒரு கரப்பான்பூச்சி ஒருவர் மேல் உட்கார்ந்திருந்தது. சிறிது நேரத்தில் அந்த கரப்பான் பூச்சி அடுத்த மேசையிலிருந்த ஒருவர் மீது உட்கார அங்கிருந்தவர்களும் எழுந்து பெரும் கூச்சலிட்டனர். இவ்வாறு அந்த கரப்பான் பூச்சி இரண்டு மூன்று நபர்கள் மீது உட்கார அவர்களும் சத்தம் போட ஆரம்பித்தார்கள். அதன் பிறகு அந்த கரப்பான்பூச்சி அங்கிருந்த உதவியாளர் மீது உட்கார்ந்தது. ஆனால், அந்த நபர் எந்த ஒரு சத்தமும் போடவில்லை, சிறிது நேரம் அமைதியாக காத்திருந்தார். அந்த கரப்பான் பூச்சி அவர் மேல் மெல்ல ஏறி நகர்ந்தது. அதன்பின் சிறிது நேரத்தில் அது அமைதியாக உட்கார அவர் அந்த கரப்பான் பூச்சியை பிடித்து வெளியே எடுத்து சென்று அதைக் கொன்று போட்டாராம். இந்நிகழ்வை பற்றி சுந்தர் பிச்சை கூறும் பொழுது, "இன்று உலகில் எவருக்கும் காத்திருக்குமளவுக்கு பொறுமையில்லை, யாருக்கும் காத்திருக்க நேரமுமில்லை. தேனீர் நிலையத்தில் அந்த உதவியாளரை போல மற்றவர்களும் சிறிது நேரம் அமைதியாய் காத்திருந்தால் கரப்பான் பூச்சியை பிடிக்க முடிந்திருக்கும்" என்கிறார். இன்று நாம் அனைவரும் உடனடி உலகத்தில் இருக்கின்றோம். எல்லாமே நமக்கு உடனடியாக நடந்துவிட வேண்டும் மற்றும் உடனடியாக கிடைத்துவிட வேண்டும் என்று எண்ணுகின்றோம். நாம் எதிலும், எதற்காகவும் எத்தகைய சூழலிலும் காத்திருக்க மனமில்லாமல் இருக்கின்றோம். இத்தகைய ஒரு சூழலில் தான் காத்திருப்பதற்கு ஒரு காலம் நமக்குத் தரப்பட்டிருக்கிறது. அதுதான் நாம் அடியெடுத்து வைத்திருக்கும் திருவருகைக்காலம். திருவருகைக் காலத்தில் நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்காக, அவர் வருகைக்காய் காத்திருக்க இன்றைய இறைவார்த்தையின் வழியாய் அழைக்கப்படுகின்றோம்.
'திருவருகை' அதாவது ஆங்கிலத்தில் 'Advent' என்னும் வார்த்தை இலத்தீன் மொழியின் Advenio என்னும் வார்த்தையிலிருந்து வருகின்றது. இது தமிழில் "வருகிறார்" அல்லது "வந்து கொண்டிருக்கிறார்" என பொருள்படும். திருவருகை காலத்திலே இயேசுவின் வருகைக்காக எதிர்பார்த்து, நம்மை நாமே தயாரித்து காத்து கொண்டிருக்க அழைக்கப்படுகின்றோம். இக்காலம், இறை மகனின் வருகைக்காக நம்மை தயாரிக்கின்ற காலம். விழித்திருந்து நம் மீட்பரை சந்திக்க நம்மை அழைக்கின்ற காலம். அவர் வருகைக்காய் நாம் நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டிய காலம்.
இயேசுவின் வருகையை மூன்று நிலைகளில் எடுத்துரைக்கலாம். இந்த நிலைகள் மூன்று விதமான காத்திருப்புகளின் வெளிப்பாடு.
1. வரலாற்றில் வருகை
(இஸ்ராயேல் மக்களின் காத்திருப்பு)
வரலாற்றில் மானிடகுல மீட்புக்காக இறைமகன் இயேசு மானிடத்தின் ஆடையை அணிந்து மனிதனாக இம்மண்ணுலகில் வந்ததை காட்டுகிறது. இது பாலகன் இயேசுவின் வருகையாம் தெய்வம் மனித குழந்தையாக பிறந்ததாகும் (லூக்கா 1:6-7). இது காத்திருப்பின் அடையாளம், மீட்பின் அடையாளம். ஈராயிரம் ஆண்டுகளாக இஸ்ராயேல் மக்கள் காத்திருந்ததன் வெளிப்பாடு. ஆபிரகாம் முதல் மரியா வரை காத்திருந்ததை வெளிப்படுத்துவது தான் இந்த வரலாற்று வருகை(எசாயா 7:14). ஆக, பழைய ஏற்பாட்டின் மையமே வரவிருக்கும் மெசியாவின் வருகைக்காய் காத்திருந்தது தான்.
2. மாட்சியில் வருகை
(உடனிருந்தவர்களின் காத்திருப்பு)
இயேசுவினுடைய இறப்புக்கு பிறகு அவர் மாட்சியோடு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தது தான் இந்த மாட்சியின் வருகை. தங்களோடு இருந்த இயேசு மாபெரும் அரசராவார் என எதிர்பார்த்த அப்போஸ்தலர்களும், சீடர்களும் அவரது இறப்புக்கு பிறகு என்ன நடக்குமோ என எண்ணி ஏங்கி அவருக்காய் மீண்டும் காத்திருந்தனர். “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” (லூக்கா 9:22) ) என்று இயேசு சொன்னதன் பின்னணியில் இந்த காத்திருப்பு அமைகிறது. இயேசு உடனிருந்தவர்களை சந்திக்க தனது உயிர்ப்பில் மாட்சியோடு வந்தார்.
3. தீர்ப்பில் வருகை
(கிறிஸ்தவர்களின் காத்திருப்பு)
"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத்தேயு 28:20) என்று கூறிய இயேசு என்றும் நம்மோடு இருக்கிறார், இவர் இறையாட்சிக்குள் நம்மை அழைத்து செல்ல மீண்டும் இரண்டாம் முறை நீதி தீர்ப்பீட வருவார் என ஆவலோடு கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருமே நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம். இது இறையாட்சிக்குள் அழைத்து செல்ல தீர்ப்பில் இயேசுவின் வருகையை காட்டுகிறது. இன்றைய நற்செய்தி வாசகம்கூட அவரின் இந்த வருகையின் போது நிகழும் மூன்று விதமான அடையாளங்களை காட்டுகிறது.
1. விண்ணில் அடையாளம்: கதிரவன், நிலா மற்றும் விண்மீன்களில் மாற்றம் ஏற்படும் (லூக்கா 21:25) என இன்றைய நற்செய்தி பகுதியில் குறிப்பிடுவது இயேசுவின் வருகையின் போது விண்ணில் ஏற்படும் அடையாளங்களை காட்டுகிறது.
2 மண்ணில் அடையாளம்: மண்ணுலகில் கடல் கொந்தளிப்பும் முழக்கமும் ஏற்படும் (லூக்கா 21:25) என குறிப்பிடுவது இயேசுவின் வருகையின் போது மண்ணில் ஏற்படும் அடையாளங்களை காட்டுகிறது.
3. மனிதரில் அடையாளம்: மக்களிடத்தில் குழப்பம், அச்சம் மற்றும் மயக்கம் ஏற்படும் (லூக்கா 21:25-26) என குறிப்பிடுவது இயேசுவின் வருகையின் போது மனிதரில் ஏற்படும் அடையாளங்களை காட்டுகிறது.
இன்று நாம் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கின்ற உடனடி உலகத்தில் சற்று நேரம் காத்திருக்க கற்றுக் கொள்வோம். இந்த காத்திருப்பு நமக்கானது, நம்முடைய வாழ்விற்கானது. இதற்காக நம்மைத் தேடி 'நான் உன்னுடைய உள்ளத்தில், இல்லத்தில் மற்றும் வாழ்க்கையில் வர தயாராக இருக்கின்றேன்' என சொல்லக்கூடிய அந்த இறைவனுக்காக காத்திருப்போம். இஸ்ரயேல் மக்கள் மெசியாவின் வருகைக்காக காத்திருந்தது போல நாமும் காத்திருப்போம். விளக்குகளுடன் அன்று இயேசு மொழிந்த பத்து தோழியர் உவமையில் அக்கன்னியர்கள் காத்திருந்ததை போல நாமும் விளக்குகள் ஏற்றி மணமகனின் வருகைக்காக இந்த திருவருகை காலத்தில் நம்பிக்கையோடு நம்மையே தயார் செய்து காத்திருப்போம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
ஆடியோவாக கேட்க...
https://youtu.be/IX3Hn0OrTlA
அன்புடன்,
அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF