Thursday, September 30, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 27-ஆம் வாரம் - ( ஆண்டு- B) - 03 -10-2021- ஞாயிற்றுக்கிழமை

🌱விவிலிய விதைகள்🌱

பொதுக்காலம் 27-ஆம் வாரம்

தமிழ் திருவழிபாட்டு மறையுரை

ஞாயிற்றுக்கிழமை

நற்செய்தி: - மாற்கு 10: 2-16




...இணைந்திருப்போம்...


      மூங்கில் மரங்கள் நம் அணைவருக்குமே தெரிந்தது தான். சந்தையிலிருந்து நாம் ஒற்றை மூங்கில் கன்றை வாங்கி வைத்தாலும் அது வளரும் போது தனியாக வளர்வதில்லை மாறாக கூட்டமாக தான் வளர்கிறது. மூங்கில் மரங்களை உடைத்து பார்க்கும் போது அதனுள் ஒன்றும் காணப்படுவதில்லை, வெறும் வெற்றிடம் தான் இருக்கும், இப்படிபட்ட மரங்கள் எப்படி உயரமாக வளர்கிறது என்று ஆராய்ந்து பார்க்கும் போது இம்மரங்கள் வளரும் போது கூட்டமாக வளர்வதோடு மட்டுமல்லாது, வளரும் போது தனது கிளைகளை ஒன்றோடு ஒன்றாக பின்னி பிணைந்து கொள்வதே காரணமாக அமைகிறது. இங்கு கிளைகளின் பிணைப்பு தான் அவைகளை உயரமாக வளர வைக்கின்றது. இது வெறும் மரங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் தான் நமது வாழ்வில் பிணைப்பும் இணைப்பும் தான் பலனும் வாழ்வும் கொடுக்கும் என்னும் மையச்சிந்தனையை நம் முன் வைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு. இணைப்பு தான் வாழ்வு கொடுக்கும் என்பதற்கு இயேசு இன்றைய  நற்செய்தியில் இரண்டு உருவகங்ளை பயன்படுத்துகின்றார். 

 1. கணவன் மனைவி உருவகம்

 2. சிறிய குழந்தைகள் உருவகம்


1. கணவன் மனைவி உருவகம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமணம் என்னும் திருவருட்சாதனத்தின் வழியாய் இணைக்கப்பெற்ற கணவனும் மனைவியும் இணைந்திருக்க வேண்டும் என்பதை இறைமகன் இயேசு முக்கியத்துவம் கொடுக்கிறார். பரிசேயர்கள் இயேசுவிடம் “கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?” (மாற்கு. 10:2) என மோசேயின் கட்டளையை சுட்டிக்காட்டி கூறிய போது, இயேசு அவர்களிடம் “கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” (மாற்கு. 10:9) என்கிறார். இயேசு வாழ்ந்த சமுதாயத்தின் சூழல் வித்தியாசமாகவே இருந்திருக்கிறது. பெண்கள் ஒரு மனிதராகவே கருதப்படா ஒரு நிலை, அவர்களை ஒரு பொருளாகவே பார்த்தனர். அச்சமுதாயத்தில் ஒரு பெண் தன் கணவரை விலக்கி வைக்க தொழுநோய் என்னும் ஒரு காரணத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் ஒரு ஆண் எத்தகைய காரணத்திற்கு வேண்டுமானாலும் பெண்ணை விலக்கி வைக்க முடியும். இத்தகைய பின்னனியில் அவர்கள் இயேசுவிடம் கேள்வி கேட்கும் போது இயேசு பிரிந்திருப்பது இறைவனுக்கு ஏற்றது அல்ல மாறாக இணைந்திருப்பதும் பிணைந்திருப்பதும் தான் ஆண்டவருக்கு ஏற்றதோரு வாழ்க்கை என்கிறார். பழைய ஏற்பாட்டில் குறிப்பாக இறைவாக்கினர்களின் புத்தகங்களில் கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் உண்டான உறவு கணவன் மனைவி உறவாக சித்தரிக்கப்படுவதை நாம் வாசிக்கின்றோம்.(ஏசாயா.54:5). புதிய ஏற்பாட்டில் பவுல் அடிகளார் தன்னுடைய திருமடல்களில் இறைவனுக்கும் திருஅவைக்கும் உண்டான உறவு கணவன் மனைவி உறவாக சித்தரிக்கின்றார். (2கொரி.11:2) இவை அனைத்திலும் நாம் புரிந்துகொள்வது இறைவனும் திரு அவையும் என்றும் இணைந்திருக்க வேண்டும் என்பதே ஆகும்.

2. சிறிய குழந்தைகள் உருவகம்

இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் இயேசு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது." என்று கூறுவதன் வழியாக இறைவனும் சிறு பிள்ளைகளும் இணைந்திருக்க வேண்டும், பிரிந்திருக்க கூடாது என்னும் கருத்தை உருவகமாக பயன்படுத்துவதை பார்க்கின்றோம். குழந்தைகள் இயேசுவை சந்திக்க சிலர் தடையாக மற்றும் அவர்களை பிரித்து வைக்கின்ற பொழுது அங்கு இயேசு மீண்டும் குழந்தைகளை அழைத்து இணைந்திருத்தலை வலியுறுத்துகின்றார். இயேசுவினுடைய பணி வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இயேசு பிரிவினையை விரும்பாது இணைந்திருத்தலை எடுத்துரைக்கின்றார். "நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது."(யோவான் 15:4) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் நாம் இறைவனுடனும் ஒருவர் மற்றவருடனும் ஒற்றுமையாக இணைந்திருக்க அழைக்கப்படுகின்றோம்.

இன்று நம்முடைய சமுதாயத்தில் குடும்பங்களின் நிலை எப்படி இருக்கின்றது. ஒன்று சேர்ந்து இன்பத்திலும் துன்பத்திலும் நாங்கள் ஒன்றிணைந்து இருப்போம் என்று வாக்களித்த திருமண தம்பதிகள், ஆண்டுகள் சில கழிந்தவுடனே ஒருவரை ஒருவர் இகழ்ந்து பிரிய கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்கிறார்கள். இறைவன் விரும்புவது பிரிவு அல்ல மாறாக, இணைந்திருப்பதையே இறைவன் விரும்புகின்றார். அதனால் தான் திருஅவையில் கூட விவாகரத்து கொடுக்கப்படலாகாது என்கிறார்கள். ஆக, நாம் நமது குடும்பங்களில் ஒருவர் மற்றவரோடு அன்பு உறவில் இணைந்து இருப்போம். குறிப்பாக, கணவர் மனைவியுடனும், மனைவி கணவருடனும் இணைந்து அன்பு உறவில் வாழ வேண்டும். இவர்கள் பிள்ளைகளோடு இணைந்திருக்க வேண்டும். நாம் அணைவரும் இறைவனோடு இணைந்திருக்க வேண்டும். இறையாசீர் பெற வேண்டும்.


ஆடியோவாக கேட்க.......

 https://youtu.be/kEo8B-NgbYk

அன்புடன்

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF





Friday, September 24, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 26-ஆம் வாரம் - ( ஆண்டு- B) - 26 -09-2021- ஞாயிற்றுக்கிழமை

🌱விவிலிய விதைகள்🌱

பொதுக்காலம் 26-ஆம் வாரம்

தமிழ் திருவழிபாட்டு மறையுரை

ஞாயிற்றுக்கிழமை

நற்செய்தி: - மாற்கு 9: 38-43, 45,47-48



அவர் என்னை சார்ந்தவரா?


நான் பிறந்தபோது என் தந்தை தொலைபேசியை எடுத்து ஒரு தம்பதியினரிடம் பேசினார். எதிர்பாராத விதமாக ஒரு ஆண் குழந்தை எனக்கு பிறந்துள்ளது, உங்களுக்கு வேண்டுமா என்று, அன்று சரியான அந்தஸ்து எனக்கு கிடைக்கவில்லை, நான் அவரை சார்ந்தவர் என அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் வளர்ந்து 1976 -ல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கினேன். 1985-ல் என் நிறுவனத்தின் சக உரிமையாளர்களே நான் அவர்களை சாராதவன் மற்றும் ஆளுமை திறன் அற்றவன் என சொன்னார்கள், ஆனால் இன்று? நான் யார் என்று புரிகின்றதா? நான் தான் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆம், இன்று உலகம் அறிந்த ஸ்டீவ் ஜாப்ஸே, அன்று இவன் நம்மை சாராதவன் என்று வெளியேற்றப்பட்டவர். நாம் யார் யாரையெல்லாம் பார்த்து இவன்/இவள் என்னை சாராதவன் என நினைக்கின்றோம். எது/எவை பிறரை என்னை சாராதவனாக மாற்றுகிறது என்னும் சிந்தனைகளை நம்மில் விதைத்து, சாராதவர் என்னும் வேற்றுமையை மாற்றி, சார்ந்தவர் என்னும் ஒற்றுமையில் வளர இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு அழைப்பு தருகிறது.

1.சாராதவர் என்னும் வேற்றுமை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் யோவான் இயேசுவிடம், “போதகரே , ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” (மாற்கு 9:38) என வேற்றுமையை காட்டுகிறார். பிறர் நம்மை சாராதவர் என்று எண்ணுவது பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் மன நிலையாக இருக்கின்றது. இவர்கள் மக்கள் முன்பாக தாங்கள் அனைத்தையும் அறிந்தவர்களாகவும், இறைவனின் திருச்சட்டத்தை சரியான முறையிலே கடைபிடிப்பவர்களாவும், தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, மற்றவர்களை அவற்றிலிருந்து சாராதவர்களாக பிரித்து பார்த்தார்கள். வேற்றுமை உணர்வோடு வாழ்ந்து வந்தார்கள். இன்று பல வேளைகளில் நாமும் மற்றவர்களை இதே மனநிலையோடு தான் பார்க்கின்றோம். இவர்கள் என்னைச் சார்ந்தவர் அல்ல என்று மற்றவர்களுடைய நிலையை கண்டு நாம் மதிப்பிடுகிறோம். நான் பணத்தால், படிப்பால், அதிகாரத்தால், அறிவால், சமுதாயத்தால், சமயத்தால் மற்றும் இனத்தால் உயர்ந்தவனாக இவன்/இவள் இதிலிருந்து என்னை சார்ந்தவனாக இல்லை என்று பலரை வேற்றுமை கண்ணோட்டத்தோடு பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இத்தகைய நிலையிலிருந்து நாம் மாறுபட தான் இன்றைய இறைவார்த்தை நமக்கு அழைப்பு தருகிறது.

2. சார்ந்தவர் என்னும் ஒற்றுமை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மறுமொழியாக, “தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார்.ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்" (மாற்கு 9:39,40) என ஒற்றுமையை காட்டுகிறார். இது தான் இயேசுவின் மனநிலையாக இருக்கின்றது. நான் எத்தகைய நிலையில் உயர்ந்தவனாக அல்லது தாழ்ந்தவனாக இருந்தாலும், எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் மற்றும் இந்நாட்டின் மக்கள் என்னும் உணர்வோடு ஒற்றுமையோடு எல்லோரும் மனித இனத்தைச் சார்ந்தவர்கள் என்று ஏற்றுக் கொள்வதில் தான் அர்த்தமுள்ள வாழ்வு அமைகிறது. இன்று நான் இயேசுவைப்போல எல்லோரும் என்னைச் சார்ந்தவர்கள் என ஏற்றுக் கொள்கின்றேனா? சிந்தித்துப் பார்ப்போம்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமையான்”

எனும் குறள் மானுடத்தை விளக்குகிறது. பிறப்பு என்பது எல்லா உயிர்களுக்கும் சமமான ஒன்று. எனவே அவரவர் செய்கின்ற தொழில் வேறுபட்டாலும்; ஏற்றத் தாழ்வுகளால் சிறப்பென்று கூறயியலாது. மனித உடலில் பாயும் குருதியில் நிறமும், துன்பம் வருகின்றபோது விழிகளில் ஓடும் கண்ணீரின் சுவையும் யாவருக்கும் ஒன்றுதான். இதில் வேறுபாடு உள்ளதென்று எவரேனும் கூற இயலுமா? இல்லை, ஏனெனில் இதனை மறுப்பதற்கான சான்று எவரிடத்தும் இல்லை. இவ்வுண்மையை வள்ளுவன் தன் குறட்பா மூலமாக மனிதர்கள் தங்களது தொழிலால் வேற்றுமையடைந்து காணப்பட்டாலும், பிறப்பால் சமமானவர்கள் தான் தொழிற்காரணமாக சிறப்பியல் பினை அவர்கள் எய்திட முடியாது என்று கூறியுள்ளார். இதுதான் இன்றைய இறைவார்த்தையின் மையச் செய்தியாகவும் அமைகின்றது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு இந்தியா என்று நாம் நம் நாட்டைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தாலும் அது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் வெளிப்பட வேண்டும். அனைவரும் என்னை சார்ந்தவர்கள் என ஏற்றுக் கொள்வதில் தான் இது அர்த்தமாகிறது. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் பாடியது வெறும் ஏட்டு சுரையாக்கி விடாமல் நடைமுறையில் பின்பற்றுவோம். இனத்தால், சமயத்தால் மற்றும் சமுதாயத்தால் வேறுபட்ட மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்வதே நம் வாழ்வு அவ்வாழ்வை முழுமையாக்குவோம். இறைவார்த்தையை வாழ்வாகுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

அன்புடன்

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF




Friday, September 17, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 25-ஆம் வாரம் - ( ஆண்டு- B) - 19 -09-2021- ஞாயிற்றுக்கிழமை

 🌱விவிலிய விதைகள்🌱

பொதுக் காலம் 25-ஆம் வாரம்

தமிழ் திருவழிபாட்டு மறையுரை

ஞாயிற்றுக்கிழமை

நற்செய்தி: -மாற்கு 9: 30-37



வானளவு உயர்த்தும் தாழ்ச்சி

1932 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலாக ஏர்லைன்ஸ் டாட்டா நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டு இது ஏர் இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1947 ஆம் ஆண்டு இந்திய அரசு இந்த நிறுவனத்தை ஏற்று நடத்த ஆரம்பித்தது. ஏறக்குறைய 25 ஆண்டுகளாக இந்த ஏர் இந்தியா நிறுவனத்தினுடைய தலைவராக இருந்தவர் JRD டாட்டா அவர்கள், இவர் ஒவ்வொரு முறையும் விமானத்தில் பயணிக்கும் போது, விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பாதுகாப்பு சோதனைக்கு எல்லோரையும் போல வரிசையில் தான் நிற்பாராம். விமான நிறுவனத்தின் தலைவராக இருக்கின்ற இவரே வரிசையில் நிற்கும் காட்சி, இவரது எளிமையையும் தாழ்ச்சியையும் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது புகழ்பெற்ற தாஜ் ஓட்டலின் நிறுவனராகவும் இருந்த இவர், ஒவ்வொரு முறையும் தன்னுடைய ஓட்டலுக்கு செல்லுகின்ற போது எல்லோரை போலவும் அறை குறிப்பேட்டில் கையெழுத்திட்டு தான் செல்வாராம். இத்தகைய எளிமையும், தாழ்ச்சியும் தான் அவரை வானளவுக்கு உயர வைத்திருக்கின்றது. இதைத் தான் இன்றைய இறைவார்த்தை வழிபாடும் நமக்கு சுட்டிக் காட்டுகின்றது. நமது வாழ்க்கையிலே பணம், பொருள், பட்டம் மற்றும் பதவி மட்டுமே நம்மை வானளவுக்கு உயர்த்தும் என்று பொய்யாக இயங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், உண்மையாக தாழ்ச்சி என்னும் பண்பு தான் நம்மை வானளவுக்கு உயர வைக்கும் என்பதை இயேசு எடுத்துரைக்கின்றார். இத்தகைய தாழ்ச்சி என்னும் பண்பு நம்மில் சிறந்து விளங்க இறைமகன் இயேசு மூன்று மாதிரிகளை தன் வாழ்வின் வழியாய் நமக்கு சுட்டிக் காட்டுகின்றார்.

1. அடிமையின் மாதிரி


இம்மூன்று மாதிரிகளில் முதல் மாதிரியாக அடிமையின் மாதிரியை இயேசு தன்னுடைய வாழ்வில் நமக்கு வாழ்ந்து காட்டி இருக்கின்றார்."ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். (பிலிப்பியர் 2:6,7,8) என்னும் பவுல் அடிகளாரின் வார்த்தையில் கிறிஸ்து அடிமையின் வடிவை ஏற்று, தந்தைக்கு கீழ்படிந்து, தன்னையே தாழ்த்தி தன்னுடைய இறைச்சாயலில் இருந்து மனித சாயலை ஏற்று, அதிலிருந்து அடிமையின் சாயலை ஏற்று தாழ்ச்சி என்னும் பண்பு நம்மில் வளர இயேசு அழைக்கிறார். இயேசு அடிமையை போல் நம்மை வாழ சொல்லவில்லை மாறாக அவர் நம் ஒவ்வொருவரும் இம்மாதிரியை பின்பற்றி தாழ்ச்சி என்னும் பண்பை நம்முடைய வாழ்க்கையிலே வாழ்ந்து காட்ட அழைக்கிறார்.

2. பணியாளரின் மாதிரி
இன்றைய நற்செய்தி பகுதியில் இயேசு தன்னுடைய சீடர்கள் யார் பெரியவர்? என்று தங்களிடையே பேசிக் கொண்டிருப்பதை அறிந்து அவர்களுக்கு தாழ்ச்சி என்னும் பண்பை உணர்த்துகின்றார். அதற்காக இன்றைய நற்செய்தியில் அவர் இன்னும் இரண்டு மாதிரியை அவர்களுக்கு தருவதை பார்க்கின்றோம். “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” (மாற்கு 9:35) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் அவர்கள் ஒவ்வொருவரையும் பணியாளரை போல தாழ்ச்சி என்னும் பண்போடு வாழ அழைப்பு விடுக்கின்றார். இயேசு தன்னுடைய சீடர்களுடைய பாதங்களை கழுவி இத்தகைய ஒரு மாதிரியை தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்ததை பார்க்கின்றோம். நாமும் நம்முடைய வாழ்க்கையிலே அனைவருக்கும் பணியாளராக தாழ்ச்சியில் சிறந்தோங்க அழைப்பு பெறுகின்றோம்.

3. குழந்தையின் மாதிரி

இன்றைய நற்செய்தியின் இறுதி பகுதியில், இயேசு மூன்றாவது மாதிரியாக அவர்கள் முன் ஒரு சிறிய குழந்தையை அழைத்து இக்குழந்தையின் உள்ளத்தை பெற்றவர்களாக வாழ அவர்களுக்கு அழைப்பு தருகிறார். ஆணவமும் அகங்காரமும் இல்லாமல், கள்ளம் கபடமற்ற வெள்ளை மனம் கொண்ட குழந்தைகள் போல வாழ அழைக்கிறார். அதனால் தான் இயேசு "குழந்தைகளை தன்னிடம் வர விடுங்கள்" என்று குறிப்பிடுகிறார்.
“சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்” (மாற்கு 9:37) என்னும் வார்த்தையின் வழியாக அவர் குழந்தைகளை ஏற்றுக் கொள்ள அழைப்பது, குழந்தைகளின் உள்ளமான தாழ்ச்சி நிறைந்த குணத்தை, அகங்காரம் மற்றும் ஆணவம் இல்லாத உள்ளத்தை ஏற்றுக் கொள்ள அழைப்பு தருவதாகும்.

இன்று, நம்மிடம் சற்று அதிகமாக திறமை, பணம், பொருள், பதவி இருந்தாலும் மற்றும் சமுதாயத்தின் உயர்நிலையில் இருந்தாலும் நம்மிடையே நம்மை அறியாமலே ஆணவமும் அகங்காரமும் ஒட்டி விடும். இத்தகைய நிலையிலிருந்து மாறி தாழ்ச்சி என்னும் பண்பில் நாம் வளர்கின்ற பொழுது தான் நம்முடைய வாழ்வு உண்மையாகவே மேலோங்கி நிற்கும். இதை இன்றைய நாளிலே உணர்ந்திருக்கின்றோமா சிந்தித்து பார்ப்போம். தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர். (மத்தேயு 23:12) என்னும் இறைவார்த்தைகளுக்கு ஏற்ப தாழ்ச்சியை நம்முடைய வாழ்க்கையாக்குவோம். இதைத்தான் பவுல் அடிகளார் "கிறிஸ்துவுக்கு திருச்சபை பணிந்து இருப்பது போல மனைவி கணவனுக்கு பணிந்து இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். இன்று நம்முடைய குடும்பங்களிலும் இந்த தாழ்ச்சி என்னும் பண்பு அதிகம் தேவைப்படுகின்றது. தாழ்ச்சி நம்முடைய வாழ்க்கையிலும் எல்லா நிலைகளிலும் நமக்கு அடிப்படையாக தேவைப்படுவதாக உள்ளது. 'எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் ரயில் ஏறுவதற்கு பிளாட்பார்ம் வந்து தான் ஆக வேண்டும்' என வேடிக்கையாக கூறுவதை போல நம்முடைய வாழ்க்கையில் எத்தகைய ஒரு நிலையில் இருந்தாலும் தாழ்ச்சியை நமது வாழ்க்கையாக்க வேண்டும் என்பதை நாம் உணர்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

அன்புடன்

அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF















Friday, September 10, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 24-ஆம் வாரம் - ( ஆண்டு- B) - 12 -09-2021- ஞாயிற்றுக்கிழமை

   🌱விவிலிய விதைகள்🌱

பொதுக் காலம் 24-ஆம் வாரம்

தமிழ் திருவழிபாட்டு மறையுரை

ஞாயிற்றுக்கிழமை

நற்செய்தி: -மாற்கு 8: 27-35


..வாழ்வின் சிலுவைகளில் வாழ்வு..


            இரண்டாம் உலகப்போரின் போது கடவுள் நம்பிக்கையற்ற ஒருவர் தன்னுடைய மனைவியை பிரசவத்திற்காக அருட்சகோதரிகள் நடத்துகின்ற மருத்துவமனையில் அனுமதித்தார். அப்பொழுது அவருடைய மனைவிக்கு ஒரு அறையானது ஒதுக்கப்பட்டது, அந்த மருத்துவமனையின் அறையில்  சிலுவையானது தொங்கவிடப்பட்டிருந்தது. அதை பார்த்த அந்த மனிதர் அங்கிருந்த செவிலியரிடம் அந்த சிலுவையை  அறையிலிருந்து எடுக்க அல்லது அவர் மனைவிக்கு வேறு ஒரு அறை வழங்க கேட்டு கொண்டாராம். அவர் அவர்களிடம் பிறக்கப் போகின்ற தன்னுடைய குழந்தை துயரத்தின் அடையாளமான இந்த சிலுவையை பார்க்கக் கூடாது என்று கூறினார். அவர் வார்த்தைக்கு இணங்க, அவருடைய மனைவிக்கு வேறு ஒரு அறையானது கொடுக்கப்பட்டது. பின்பு அன்று இரவு அவர் மனைவிக்கு குழந்தை பிறந்தது, அப்போது அவர் அந்த செவிலியர்களிடம் குழந்தை எப்படி இருக்கின்றது என்று கேட்டார். அதற்கு  அவர்கள் குழந்தை நன்றாக இருக்கிறது, நீங்கள் ஆசைப்பட்டபடி உங்களுடைய குழந்தை துயரத்தின் அடையாளமான சிலுவையை மட்டுமல்ல, இந்த உலகத்தின் துயரங்களையும் ஒரு போதும் பார்க்கவே பார்க்காது. ஏனென்றால் உங்களுடைய குழந்தை பார்வையற்றதாக பிறந்திருக்கின்றது என்று கூறினாராம்.

   ஆம் அன்பார்ந்தவர்களே,  இந்நிகழ்வில் கண்ட கடவுள் நம்பிக்கையற்றவர் மட்டுமல்ல மாறாக கடவுள் நம்பிக்கை உள்ளவர் கூட இன்று தன்னுடைய வாழ்க்கையில் துயரத்திலிருந்து பயந்து ஓடுகின்றனர். எனக்கு துயரம் ஒரு போதும் வந்து விடக்கூடாது என்று நினைக்கின்றனர். இது தான் நம்முடைய சமுதாயத்தின் நிலை மற்றும் நமது நிலைப்பாடு, இத்தகைய ஒரு சமுதாய சூழலிலிருந்து நாம் விடுபட இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு கிறிஸ்து அழைப்பு விடுக்கிறார். நாம் அவரைப் பின்பற்றி, அவருடைய சீடராக மாற நம்முடைய வாழ்வின் துயரங்களை அதாவது சிலுவைகளை ஏற்று வாழ "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (மாற்கு 8:34) என்று கூறுகின்றார். இதைத் தான் மற்றொரு பகுதியிலும், இயேசு தன்னுடைய சீடர்களைப் பார்த்து, “நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” (மத்தேயு 20:22) என்கின்றார். நமது வாழ்வின் துன்பத்தை அதாவது சிலுவைகளை ஏற்றுக்கொள்ள இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம் ஒவ்வொருவருக்கும் அழைப்பு தருகின்றது.

   இன்று நாம் எதிர்பார்ப்பதெல்லாம் துன்பமில்லாத ஒரு வாழ்வு, நம்முடைய வாழ்க்கையில் நாம் துன்பம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதைத் தான் நினைக்கின்றோம். ஆனால் நமது வாழ்க்கை இன்பமும் துன்பமும் நிறைந்த இரண்டு பக்க நாணயம் என்பதை நாம் உணர்ந்து பார்ப்பதே இல்லை. நம் வாழ்வின் சிலுவைகள்  வாழ்வு தருவதாக உள்ளது. ஆதாமிடம் இறைவன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து வாழ அழைப்பு கொடுக்கின்றார். யோபு துன்பத்தை ஏற்று, அனைத்தையும் இழந்ததால் தான் இறைவனில் இணைந்தார்.  கோதுமை மணி மண்ணில் மடிந்தால் தான் மிகுந்த பலனை அளிக்கும் என்கிறார் இயேசு. ஊதாரி மைந்தன் உவமையில் இளைய மகன் துன்பத்தை எற்றவுடன் தான் வாழ்வை உணர்கின்றான்.இவையனைத்துக்கும் மேலாக இயேசுவின் சிலுவைச் சாவு நமக்கு பாவத்திலிருந்து விடுதலை கொடுத்தது. 

        கிறிஸ்துவில் அன்பார்ந்தவர்களே, மெழுகு உருகுவதால் தான்  ஒளி கிடைக்கிறது. கல் உளி கொண்டு அடிபடுவதால் தான் சிற்பமாக மாறுகிறது. விதை மடிவதால் தான்   செடி வளர்கிறது. ஒவ்வொரு புது வாழ்வுக்கும்  சிலுவை என்னும் துன்பங்கள் அடித்தளமாக இருப்பதைப் பார்க்கின்றோம். புனித அல்போன்சா கிறிஸ்தவ வாழ்வில் சிலுவை என்னும் துன்பத்தை ஏற்றுக் கொண்டதால்,  கிறிஸ்துவின் சிலுவை துன்பத்தில் தன்னை இணைத்து கொண்டதால் திருஅவையில் புனிதையாக உயர்த்தப்பட்டு இருக்கின்றார். திருஅவையின் அனைத்து மறைசாட்சியர்ளும், புனிதர்களும் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு நிலையில் துன்பத்தை வாழ்விலே உணர்ந்து ஏற்றுக் கொண்டதால் தான் அவர்கள் கிறிஸ்துவில் புது வாழ்வு பெற்றார்கள். 

        ஒருமுறை குருவானவர் ஜெப வழிபாட்டில் எல்லோரும் உங்களுடைய சிலுவையை உயர்த்திப் பிடியுங்கள் என்று கூறிய பொழுது, ஒருவர் மட்டும் தன்னுடைய மனைவியை தூக்கி பிடித்தாராம். அன்பார்ந்தவர்களே, நம்முடைய மனைவி, கணவர், பெற்றோர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள் நண்பர்கள், உற்றார் உறவினர்கள், எதிர் வீட்டுக்காரர்கள், நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் என யாவற்றையும்  துன்பமாக நினைக்கின்றோம். நாம் அதனால் கிடைக்கின்ற புது வாழ்வைப் பெறாமலே போகின்றோம். நமது வாழ்க்கையில் எல்லோரும் நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடைகள் நம்முடைய பொறுப்புகள் இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் என்பதை நாம் உணர வேண்டும்.  இன்று நாமும் துன்பம் மனித வாழ்க்கையின் ஒரு அங்கம்,   இது எனக்கு புது வாழ்வைத் தரக்கூடிய ஒரு பயிற்சிப் பாசறை என்பதை உணர்கின்ற பொழுது நம்முடைய வாழ்வில் புது வாழ்வு உருவாகும். இதை நம்முடைய வாழ்க்கையில் உணர்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.


 அன்புடன் 

 அருட்பணி. அ. குழந்தை யேசு ராஜன் CMF

Saturday, September 4, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 23-ஆம் வாரம் - ( ஆண்டு- B) - 05-09-2021- ஞாயிற்றுக்கிழமை

  🌱விவிலிய விதைகள்🌱

பொதுக் காலம் 23-ஆம் வாரம்

தமிழ் திருவழிபாட்டு மறையுரை

ஞாயிற்றுக்கிழமை

நற்செய்தி: -மாற்கு 7: 31-37



திறக்கப்படு - புதுவாழ்வுக்காய்

     
    உலகம் மாறிக் கொண்டே இருக்கின்றது, மாறிக் கொண்டிருக்கும் இந்த மாய உலகத்தில் நாம் புது வாழ்வைத் தொடங்க நம்மை மாற்ற வேண்டும், நம்முடைய செயல்களை மாற்ற வேண்டும்.  வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் புது படிகள் தேவை, இது வெறும் மனித வாழ்விற்கு மட்டுமல்லாது நமது ஆன்மீக வாழ்க்கைக்கும் இன்றியமையாததாக தேவைப்படுகின்றது. வீட்டில் அடைந்து கிடந்தால் நாம் எதையும் பெற்று விட முடியாது. புதியதை பெற புது முயற்சிகளும், புது வழிகளும் நமக்கு தேவை. இதற்கு நம்முடைய உள்ளங்கள் திறக்கப்பட வேண்டும், அப்பொழுது புது வழிகளை நாம் கண்டறிவோம். இன்றைய இறைவார்த்தை வழிபாடு நாம் நமது உள்ளங்களை திறந்து புது வாழ்வைப் பெற அழைப்பு தருகிறது. இன்றைய நற்செய்தி இயேசுவின் மூன்று செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது. இம்மூன்று செயல்பாடுகளும் இயேசு தரும் புதுவாழ்வுக்குரிய மூன்று விதமான வழிகளை நமக்கு காட்டுகிறது.
1. அழைத்தல் (இறையுறவு)
இன்றைக்கு நற்செய்தியில் காதுகேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரை இயேசுவிடம் கொண்டு வருகின்ற பொழுது, "இயேசு அவரைக் கூட்டிலிருந்து தனியே அழைத்துச் ..." (மாற்கு 7: 33a) செல்வது என்பது இயேசு அவனுக்குத் தருகின்ற ஒரு அழைப்பை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது. அழைத்தல் எனும் இயேசுவின் செயல் அம்மனிதரை இறையுறவுக்கு அழைப்பதை குறிக்கிறது. இறையாட்சி என்னும் புது வாழ்வினுடைய முதல் படியாக இறையுறவுக்கு இயேசு அழைக்கிறார். புது வாழ்வில் இணைய இயேசுவின் அழைப்பை ஏற்று அவர் உறவில் பயணிக்க முயலுவோம்.
2. தொடுதல் (இறையுணர்வு)

        எல்லோரும் எல்லோரையும் தொட்டுவிட முடியாது. ஒருவரை தொடுவது வெறும் உறவை மட்டும் சுட்டிக் காட்டுவது அல்லாமல் மற்றவர்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தி காட்டுவதாக உள்ளது. இயேசு பலவிதங்களில் நோயாளிகளை குணமாக்கியிருந்தாலும் தொடுதல் என்பது இறை உறவை மட்டுமல்ல, இறை உணர்வையும் தரக்கூடியதாக அமைகிறது. இயேசு "தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்." (மாற்கு 7: 33b) என்பது புது வாழ்வுக்கான இரண்டாம் படியாக இறையுணர்வை அவருக்கு உருவாக்குவதை வெளிப்படுத்துகின்றது. புது வாழ்வின் பயணத்தில், இறை அழைப்பை ஏற்று இறையுறவில் இணைந்து இறை உணர்வையும் நம் அன்றாட வாழ்வில் உணர்வோம்.
3. திறக்கப்படுதல் (இறையுரிமை)
    இயேசுவின் முப்பெரும் செயல்பாடுகளில் தனிச்சிறப்பை இயேசுவின் குணமாக்கும் செயல் எடுக்கப்படுகிறது. 'எப்பத்தா' என இயேசு கூறுகின்ற வார்த்தை அவரின் தாய் மொழியான அரமாயிக்கை சார்ந்தது. நற்செய்தி நூல்களின் அடித்தளத்தில் இயேசு தன் தாய் மொழி ஐந்து இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.
1. "எப்பத்தா" அதாவது "திறக்கப்படு". (மாற்கு 7:34)
2. “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?". (மத்தேயு 27:46)

3. இனி 'கேபா' எனப்படுவாய் ". 'கேபா' என்றால் 'பாறை'* என்பது பொருள். (யோவான் 1:42)

4. "தலித்தா கூம்". அதற்கு, “சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு” என்பது பொருள். (மாற்கு 5:41)

5. "அப்பா", தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். (மாற்கு 14:36) அப்பா என்பது அரமாயிக் மொழியாகும்.
    பொதுவாக மொழியில் பேசுவது என்பது ஒருவருடன் உண்டான உறவு மற்றும் உணர்வு மட்டுமில்லை, உரிமையையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது. இயேசு மொழியில் பேசுவது தந்தையுடனான இறையுரிமையை தரக்கூடியதாக அமைகிறது. அதிலும் திறக்கப்படுதல் என்ற வார்த்தைகள் இங்கே இரண்டு விதமான அர்த்தங்களைத் தருகிறது.

1. உலக அர்த்தம்
            இயேசு 'எப்பத்தா' அதாவது 'திறப்பது' என்று காது கேளாதவர் மற்றும் திக்கி பேசுபவரை நோக்கி கூறுவது, உலகத்தின் பார்வையில் கேட்கும் திறனையும் பேசும் திறனையும் பெற அவர் காதுகளும் நாமும் 'திறக்கபடு' என்பது அர்த்தமாகும்.
2. ஆன்மீக அர்த்தம்
இயேசு எப்பத்தா அதாவது திறக்கப்படுதல் என்ற வார்த்தைகளை கூறுவதற்கு முன்பு வானத்தை அண்ணாந்து பார்ப்பது, ஆன்மீகப் பார்வையில் அவர் இறையாட்சி என்னும் புதுவாழ்வு பெறுவதற்கு தடையாக இருக்கின்றவர் பாவங்களை மன்னித்து அவர் இறை உரிமையை பெறுவதற்கு விண்ணப்பதாரரின் கதவுகளைத் திறந்து விடுவதாகும். ஆக இயேசுவின் இந்த மூன்றாவது செயல் இறை உரிமையை அம்மனிதருக்கு தருகிறது.
இன்றைய நற்செய்தியில் நாம் பார்ப்பது வெறும் குணப்படுத்துதல் அல்ல மீண்டும் புது வாழ்வுக்கான இறையுறவு, இறையுணர்வு மற்றும் இறையுரிமை என்னும் மூன்று படிகளாகும். ஒவ்வொரு கிறிஸ்தவரும் இந்த மூன்று விதமான படங்களை தங்கள் பக்தி முயற்சிகளின் வழியாக பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்வு இன்னும் திறக்கப்படாமல் இருக்கின்றது. இன்று நமது அன்றாட வாழ்வு பல்வேறு விதமான எண்ணங்களால், நினைவுகளால், செயல்களால் மற்றும் பேச்சுகளால் அடைந்து போய்க் கிடக்கின்றது. இவை அனைத்தும் திறக்கப்பட வேண்டும், அப்போது தான் விண்ணகத்தின் வாயில் நமக்கு புது வாழ்வுக்காக திறக்கும். இத்தகையோரை மாற இறையருளை வேண்டி பக்தியாய் மன்றாடுவோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

- அருட்பணி. அ. குழந்தை யேசு CMF

________________ _______________ ____________ _____________ ___________

அன்னை தெரேசா

செப்டம்பர் 5

( தொகுப்பு : படித்ததிலிருந்து )

புனிதர் அன்னை தெரேசா, ஒரு அல்பேனியன்இந்திய ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும், மறைப்பணியாளருமாவார். அன்னையின் இயற்பெயர், “அன்ஜெஸ் கோன்க்ஸே போஜாக்ஸியுஆகும். (கோன்க்ஸே என்பதற்கு அல்பேனிய மொழியில் "ரோஜா அரும்பு" என்று பொருள்). தற்போதையமசெடோனியா குடியரசின்தலைநகரும், அன்றைய ஒட்டோமன் பேரரசின்கொசோவோ விலயெட்எனுமிடத்தில் பிறந்த அன்னை, தமது பதினெட்டு வயதுவரை அங்கே வாழ்ந்தார். பின்னர் அயர்லாந்துக்கும், அதன்பின்னர் இந்தியாவுக்கும் சென்றார்.

ஒருகொசோவர் அல்பேனியன்குடும்பத்தில் பிறந்த அன்ஜெஸுக்கு எட்டு வயதானபோது, அவரது தந்தை மரணமடைந்தார். பின்னர், அவரது தாயார் அவரை நல்லதொரு கத்தோலிக்க பெண்ணாக வளர்த்தார். தமது பதினெட்டாம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி, "லொரேட்டோ சகோதரிகளின்" சபையில் மறைப் பணியாளராகத் தம்மை இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு தமது தாயையோ, அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் சந்திக்கவில்லை.


இந்தியாவின் பள்ளிக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க லொரேட்டோ சகோதரிகள் பயன்படுத்தும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்காக, அயர்லாந்தின்ரத்ஃபர்ன்ஹாமில்உள்ள லொரேட்டோ கன்னியர் மடத்திற்கு முதலில் சென்றார். 1929ம் ஆண்டு அவர் இந்தியா வந்தடைந்து இமயமலை அருகே உள்ள டார்ஜீலிங்கில் தமது துறவற புகுநிலையினருக்கான பயிற்சியினை ஆரம்பித்தார். தனது முதல் நிலை துறவற உறுதிமொழியினை அவர் 1931ம் ஆண்டு, மே மாதம், 24ம் நாளன்று, ஏற்றார். அச்சமயம், மறைப்பணியாளரின் பாதுகாவலரானலிசியே நகரின் புனிதர் தெரேசாவின்பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். கிழக்குக் கல்கத்தாவின் லொரேட்டோ கன்னியர் மடப் பள்ளியில் தனது இறுதி துறவற உறுதிமொழியினை 1937ம் ஆண்டு, மே மாதம், 14ம் தேதி ஏற்றார்.

பள்ளிக்கூடத்தில் கற்பிக்கும் பணியை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமாய் கலங்கச் செய்தது. 1943ம் ஆண்டின் பஞ்சம், துயரத்தையும் சாவையும் அந்நகரத்துக்குக் கொணர்ந்தது என்றால் 1946ம் ஆண்டின் இந்து - முஸ்லிம் வன்முறை அந்நகரத்தை நம்பிக்கையின்மையிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது. 1946ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 10ம் நாளன்று, தியானத்திற்காகக் கல்கத்தாவிலிருந்து, டார்ஜீலிங்கின் லொரேட்டோ கன்னிமடத்திற்கு தெரேசா பயணம் செய்தபொழுது அவருக்கு நேர்ந்த உள்ளுணர்வை அவர் பின்நாட்களில் "அழைப்பினுள் நிகழ்ந்த அழைப்பு" என அழைத்தார். "நான் கன்னியர் மடத்தை விட்டு வெளியேறி, ஏழைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டே அவர்களுக்கு உதவ வேண்டும். அது ஒரு கட்டளை. அதனைத் தவறுவது (இறை) நம்பிக்கையை மறுதலிப்பதற்கு ஒப்பானது." என்றார் அவர். 1948ம் ஆண்டில் ஏழைகளுடனான தமது சேவையை ஆரம்பித்தார்.

லொரேட்டோ துறவற சபையின் சீருடைகளைக் களைந்து, நீல நிற கரையிட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை சீருடையாய் அணிந்தவராய், இந்திய குடியுரிமையினைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் சேவை செய்தார். தொடக்கத்தில் மோதிஜில்லில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர் மற்றும் பசியினால் வாடுவோரின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அவரது முயற்சிகள் விரைவிலேயே பிரதமர் உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதல்களைப் பெற்றுத்தந்தன.

தெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் துன்பங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் வசதிகளுக்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் தனது நாட்குறிப்பில் எழுதினார். 1950ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7ம் தேதி, பிறர் அன்பின் பணியாளர் சபையை மறைமாவட்ட அளவில் துவக்க தெரெசாவுக்கு கத்தோலிக்க திருச்சபையில் அனுமதி அளிக்கப்பட்டது. அச்சபையின் குறிக்கோளாக அவர் கூறியது, "உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும், கவனிக்கப் படாதவர்களெனவும் எண்ணிக் கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப் பட்டவர்களையும் கவனித்தலே ஆகும்."

    


கொல்கத்தாவில் 13 உறுப்பினர்களைக் கொண்ட சிறியதொரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட இச்சபை, இன்று 6000க்கும் மேலான அருட்சகோதரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும், எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்களையும், தொண்டு மையங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களைக் கவனிக்கும் இடமாகவும் இருக்கிறது. இவர், சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். 1950ம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் "பிறர் அன்பின் பணியாளர்" என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் சேவை செய்து தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும், பின்னர் வெளிநாடுகளுக்கும் "பிறர் அன்பின் பணியாளர் சபை"யினை நிறுவினார். இவர் 1979ல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980ல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.

     அன்னை தெரேசாவின் "பிறர் அன்பின் பணியாளர் சபை", அவர் மறைந்தபோது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களுடன் இயங்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.

    அன்னை அவர்களைப் பற்றி எழுதுவதானால், நிறைய எழுதிக் கொண்டே போகலாம். அன்னையின் கடைசி காலம், மிகவும் கடினமானதாக இருந்தது. இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டார். ஏப்ரல் 1996ல் அன்னை தெரேசா கீழே விழுந்து அவரது காறை எலும்பு முறிந்தது. ஆகஸ்ட் மாதம், மலேரியாவினாலும், இதய கீழறைக் கோளாறினாலும் அவதிப்பட்டார். இதய அறுவை சிகிச்சைக்குட்பட்ட போதிலும் அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. அன்னை 1997ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், ஐந்தாம் தேதி மரணமடைந்தார்.

        செப்டம்பர் 1997ல் இறுதிச்சடங்கிற்கு முன்னதாக ஒரு வார காலம் அன்னை தெரேசாவின் உடல் கொல்கத்தாவின் புனித தோமையார் ஆலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அனைத்து மத ஏழைகளுக்கும் அவர் ஆற்றிய தொண்டுக்குப் பரிகாரமாக, இந்திய அரசின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

  அவரது செயல்களையும், சாதனைகளையும் பகுத்தாய்ந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், "மானுட சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தத் தேவையான பலனும் விடாமுயற்சியும் அன்னை தெரெசாவுக்கு எங்கிருந்து வந்தது? அவர் அதனைப் பிரார்த்தனையிலும் இயேசு கிறிஸ்துவையும் அவரது இறைவார்த்தையையும், அவரின் திருஇருதயதையும் தியானிப்பதிலிருந்து பெற்றுக் கொண்டார்." என்றார். தனிப்பட்ட முறையில் அன்னை தெரேசா தனது மத நம்பிக்கைகளில் அநேக சந்தேகங்களையும் போராட்டங்களையும் கொண்டிருந்தார். இது ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் அவரது வாழ்க்கையின் முடிவு வரை நீடித்தது. 2003ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 19ம் தேதி, திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள், அன்னை தெரேசாவிற்கு அருளாளர் பட்டமளித்தார். 2016ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், நான்காம் தேதி, திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்கள் அன்னை தெரெசாவை புனிதராக அருட்பொழிவு செய்வித்தார்.

- அருட்பணி. அ. குழந்தை யேசு CMF

________________ _______________ ____________ _____________ ___________


ஆசிரியர்கள் தினம்

செப்டம்பர் 5

(தொகுப்பு : படித்ததிலிருந்து )

             ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியப் பணியை புனிதப் பணியாக கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாக விளங்குவோரை சிறப்பிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அப்படி செயல்பட்டவர் தான் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.

 திருத்தணி அருகே சர்வபள்ளி என்ற இடத்தில் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ராதாகிருஷ்ணன் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு பி. பட்டமும், எம். பட்டமும் பெற்றவர். சென்னை பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். 1918ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராக தேர்வானார். 1923ஆம் ஆண்டுஇந்தியத் தத்துவம்என்ற படைப்பை வெளியிட்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு மேடைகளில் மகத்தான சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.1931ஆம் ஆண்டு ஆந்திர பல்கலைக்கழக துணைவேந்தர், 1939ல் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக துணைவேந்தர், 1946ல் யுனெஸ்கோ தூதுவராக நியமிக்கப்பட்டார். நாடு சுதந்திர அடைந்த பின், 1948ஆம் ஆண்டு பல்கலைக்கழக கல்வி ஆணையத் தலைவரானார். அதன்மூலம் கல்வித்துறைக்கு சிறப்பான பங்காற்றினார். 1962 முதல் 1967ஆம் ஆண்டு வரை நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவரை கவுரவப்படுத்தும் வகையில், ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். அதாவது கடந்த 1962ஆம் ஆண்டு முதல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

- அருட்பணி. அ. குழந்தை யேசு CMF