Saturday, August 28, 2021

🌱விவிலிய விதைகள்🌱 - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக் காலம் 22-ஆம் வாரம் - ( ஆண்டு- B)- 29-08-2021- ஞாயிற்றுக்கிழமை

🌱விவிலிய விதைகள்🌱

பொதுக் காலம் 22-ஆம் வாரம்

தமிழ் திருவழிபாட்டு மறையுரை

ஞாயிற்றுக்கிழமை

நற்செய்தி:-மாற்கு 7: 1-8, 14-15, 21-23

உடலை கழுவாதீர்கள் ...  

               உள்ளத்தை கழுவுங்கள் ... 


         கிறிஸ்து இயேசுவில் அன்பார்ந்தவர்களே, ஒரு முறை குரு ஒருவர் தன்னுடைய மடத்திற்கு சொம்பு வாங்குவதற்காக சென்றிருந்தார். அந்த சொம்பை வாங்கி விட்டு வருகின்ற வழியில் கோவிலின் அருகில் இருந்த குளத்தில் நீராடலாம் என்று சென்றார். அப்போது தான் வாங்கிய சொம்பை எங்கு வைப்பது என்று தெரியாமல் யாரும் எடுத்து விடக்கூடாது என்று, யாருக்கும் தெரியாமல் அந்தக் குளக்கரையில் மண்ணை நோண்டி அதிலே புதைத்து வைத்தார். புதைத்த இடத்தை கண்டுபிடிப்பதற்காக அந்த இடத்தில் ஒரு மணல் குவியலை ஏற்படுத்தினார். அவர் மண்ணை குவித்ததை கண்ட சிலர் குருவே இந்தக் குளத்தில் நீராடுவதற்கு முன்பாக மண் குவியலை ஏற்படுத்துகின்றார். இந்த குளத்தில் குளிப்பதற்கு முன் வேண்டியது நிறைவேற வேண்டும் என்றால் நாம் இந்தக் குளக்கரையில் மண் குவியலை ஏற்படுத்த வேண்டும் என எண்ணிக் கொண்டு அவர்களும் அவ்வாறே செய்தார்கள். அவர்களைப் பார்த்து, அவர்கள் பின் வந்தவர்களும் செய்தார்கள், தொடர்ந்து பலரும் செய்தார்கள். குருவோ குளத்தில் குளித்து விட்டு வெளியே வந்து பார்த்த பொழுது அந்தக் குளக்கரை முழுவதும் மண் குவியலாக இருந்தது. தன்னுடைய சொம்பு எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் வருத்தத்தோடு அவர் தன்னுடைய மடத்திற்குச் சென்று விட்டார்.

     ஆம் அன்பார்ந்தவர்களே, இது ஒரு எதார்த்தமான கதையாக இருந்தாலும் இதில் உள்ள ஆழமான கருத்தை நாம் புரிந்து கொள்வோம். இன்றைக்கு மனித வாழ்க்கையும் இப்படித்தான், மற்றவர் செய்கின்ற செயலைத்தான் பார்க்கிறார்களே தவிர அதனுள் இருக்கின்ற உள்ளார்ந்த அர்த்தங்களை யாரும் பார்ப்பதில்லை. அன்று பரிசேயரும் சதுசேயரும் இப்படிதான் இருந்தார்கள், இதைத் தான் இறைமகன் இயேசு கிறிஸ்துவும் சுட்டிக்காட்டினார். இன்றைய நற்செய்திலே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவைப் பார்த்து உம் சீடர்கள் ஏன் கைகளை கழுவுவது இல்லை? ஏன் பாத்திரங்களை கழுவுவது இல்லை? அது தீட்டாயிற்றே என்று கேள்விகளை கேட்கின்றார்கள். இறைமகன் இயேசு கிறிஸ்து நீங்கள் கைகளை கழுவுவது பற்றி பேசுகிறீர்கள். உங்களுடைய உடலை கழுவாது, உங்கள் உள்ளத்தை கழுவுங்கள், ஏனெனில் உள்ளத்தில் இருந்து வருகின்ற களவு, பரத்தமை மற்றும் உள்ளத்தின் வெளிப்பாடான செயல்களில் இருந்து தான் தீட்டு வருகின்றது. தீட்டு உடலில் இருந்து வருபவை அல்ல, உள்ளத்திலிருந்து வருகிறது எனவே, உங்கள் உள்ளத்தை கழுவுங்கள் என்று குறிப்பிடுகின்றார். இன்று நம்முடைய வாழ்க்கையில் உடலை கழுவுகின்றோமா? அல்லது உள்ளத்தை கழுவுகின்றோமா? எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம்? பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் போல வெறும் செய்யும் செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமா? சிந்திப்போம்

முதல் பெற்றோர்கள் பாவம் செய்தது அவர்கள் உடலால் மட்டுமல்ல மாறாக அவர்களுடைய உள்ளத்தில் எழுந்த ஆசையால் தான் (தொநூ.3:5-6). முதல் சகோதரர் பாவம் செய்தது உடலால் மட்டுமல்ல மாறாக அவன் உள்ளத்தில் எழுந்த பொறாமையால் தான் (தொநூ.4:9). சவுல் தாவீதைக் கொல்ல நினைத்தது அவன் உள்ளத்தில் எழுந்த பொறாமையால் தான்(1சாமுவேல். 18:15). திருமுழுக்கு யோவானின் தலை துண்டிக்கப்பட்டது ஏரோதியாவின் உள்ளத்தில் எழுந்த பழிவாங்கும் எண்ணத்தால் தான் (மத்தேயு.14:8). இவ்வாறாக விவிலியத்தில் மட்டுமல்லாது நமது அன்றாட வாழ்விலும் மனிதனை பாவத்தில் விழச் செய்வது வெறும் உடல் மட்டுமல்ல மாறாக உள்ளத்தில் எழுகின்ற எண்ணங்களும் ஆசைகளும் மற்றும் அதன் வெளிப்பாடாக வருகின்ற செயல்களுமே ஆகும். "வாழைப்பழத் தோலை எடுத்துக்கொண்டு பழத்தை தூக்கி எறிவது போல" பரிசேயரும் மறைநூல் அறிஞர்களும் சட்டத்தின் வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு அதனுடைய உள்ளார்ந்த அர்த்தங்களை தூக்கி எறிந்து விடுகிறார்கள். இன்றைய நற்செய்தியில் கை கழுவுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் அதனுடைய உள்ளார்ந்த அர்த்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால் தான் இறைமகன் இயேசு கிறிஸ்து உள்ளத்திலிருந்து வருபவை மட்டுமே உங்களை தீட்டு படுத்துகின்றது என்று குறிப்பிடுகின்றார். இன்று நம்முடைய வாழ்க்கையிலும் நாம் இப்படி தான் இருக்கின்றோம். நம் உள்ளத்தை பார்க்க மறுக்கின்றோம் மாறாக நம் உடலை சார்ந்தவற்றிலே அதிகமாக கவனம் செலுத்திக் கொண்டே இருக்கின்றோம். நாம் ஆலயத்திற்கு சென்று திருப்பலியில் கலந்து கொள்கின்றோம் மற்றும் நற்கருணை உட்கொள்கின்றோம். ஆனால் நம்முடையடைய உள்ளங்கள் எப்படி இருக்கின்றது, உள்ளத்திலே மற்றவர் மீது கோபம், வெறுப்பு, பொறாமை மற்றும் தேவையற்ற தவறான எண்ணம் என என்னுடைய எண்ணங்கள் மற்றும் பேச்சு அனைத்தும் பாவ கறைகள் நிறைந்து இருக்கின்றது. அது கழுவப்பட வேண்டும். நம்முடைய உடல் மட்டும் ஆண்டவரிடம் சென்று திருப்பலியில் பங்கு கொண்டு அதனால் என்ன பயன்? நம்முடைய உடலை கவனிக்கும் நாம் , உள்ளத்தை கவனிக்க மறந்து விடுகின்றோம் . அதனால் தான் இயேசு இன்றைய நற்செய்தியின் வழியாய் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் கழுவுங்கள் என்கின்றார் . இன்று நாம் உடலைச் சார்ந்த கிறிஸ்தவர்களாக வாழ்கின்றோமா ? உள்ளத்தை சார்ந்த கிறிஸ்தவர்களாக வாழ்கின்றோமா ? சிந்திப்போம் .

- அருட்பணி. அ. குழந்தை யேசு CMF