Saturday, January 30, 2021

விவிலிய விதைகள் - Biblical Seeds-Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - பொதுக்காலம் 4-ஆம் வாரம்- ( ஆண்டு- B)- 31-01-2021- ஞாயிற்றுக்கிழமை

 

விவிலிய விதைகள்  

பொதுக்காலம் 4-ஆம் வாரம் ( ஆண்டு- B)

31-01-2021

ஞாயிற்றுக்கிழமை


நம் அன்றாட வாழ்வில் அதிகாரம்



              அறுபத்தைந்து நாட்களாக விவசாயிகளின் போராட்டம், நாட்டின் 72வது குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி, யாரும் எதிர்பார்த்திராத கலவரம், அதில் ஒரு பலி என டெல்லியில் நடக்கும் இத்தனை நிகழ்வுகளுக்கும் ஒரே காரணம்- அதிகாரம். ஒரு பக்கம் தன் அதிகாரத்தை காட்ட துடி துடிக்கும் ஒரு கூட்டம், மறுபக்கம் தன் அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ள  போராடும் ஒரு கூட்டம், அதிகாரம் இங்கே விளையாடிக் கொண்டிருக்கிறது.   அதிகாரம் சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் அது பலரின்  வாழ்வின் அதிகாரங்களை சாகடித்து கொண்டுதான் இருக்கும். அதிகாரம் பிறரை வாழ வைக்க வேண்டும், சாகடிக்க கூடாது. தனக்கு அதிகாரம் உண்டு என்று அறியாத கூட்டம் ஒரு பக்கம், அதிகாரம் என்னும் ஆணவத்தால் அழிந்து கொண்டிருக்கின்ற கூட்டம் மறுபக்கம், தானும் அதிகாரத்தை எட்டிப்பிடிக்க வேண்டும் என்று ஓடி, தேடி, நாடி அலைந்து கொண்டிருக்கின்ற கூட்டம் இன்னொரு பக்கம். இதுதான் இன்றைய சமுதாயத்தின் சூழல், இத்தகைய சூழலின் மத்தியில் இறைமகன் இயேசு கிறிஸ்து தன் அதிகாரத்தை உணர்ந்து, தன் அதிகாரத்தால் தன்னை வெளிப்படுத்த, பிறர் வாழ்வு பெற நமக்கு முன்மாதிரியாய் இருப்பதை இன்றைய இறைவார்த்தை சுட்டிக்காட்டுகின்றதுநாம், நமது அதிகாரத்தை உணர்ந்து, அதனால் நம் நிலையை வெளிப்படுத்த, பிறரும் பலன் பெற செய்ய இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம்.

                       அதிகாரம் அது ஒன்றைச் செய்யுமாறு அல்லது ஒன்றை நம்புமாறு ஒருவரை வழிப்படுத்தும் ஆற்றல், ஒருவரை இணங்குவிக்கவல்ல; செயல் தூண்டுதல் அளிக்கவல்ல; மனம் ஏற்கும்படி ஒன்றைக் கூறவல்ல ஆற்றல். மேலும், மற்றவர்கள் நம்பும் முறையிலும், அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் நடந்துகொள்ளும் ஒருவரது பண்பு; நம்பகத்தன்மை; நம்பகம் என அதிகாரத்தை வரையறுத்து கொண்டே செல்லலாம். இன்றைய நற்செய்தியில் இயேசுவும் அதிகாரத்தோடு போதிப்பதையும், அதிகாரத்தோடு குணப்படுத்துவதையும் காண்கிறோம். இது இயேசு தன் அதிகாரத்தை உணர்ந்ததையும், பிறர் நலனுக்காக தன் அதிகாரத்தை பயன்படுத்தியதையும் மற்றும் இதன் மூலம் தன்னை வெளிப்படுத்தியதையும் காட்டுகிறது.

1. அதிகாரத்தை உணர்ந்திருத்தல்

                       இன்றைய முதல் வாசகத்தில் மோயீசன் இறைவன் தனக்கு கொடுத்த  அதிகாரத்தை உணர்ந்திருத்தலை நாம் பார்க்கின்றோம். தன்னை "இறைவாக்கினர்" என்று கூறுவதும் "அவருக்கு செவி கொடு" என்று   எடுத்துரைப்பதும் அவர் தனக்கு இறைவன் கொடுத்த அதிகாரத்தை  உணர்ந்திருப்பதை புரிந்துகொள்ள முடிகின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு அதிகாரத்தோடு அறிவிப்பதும், குணமாக்குவதும் அவர் தன் அதிகாரத்தை  முழுவதுமாக உணர்ந்திருந்ததை நமக்கு எடுத்துரைக்கின்றது. கிறிஸ்து தன்னுடைய அதிகார சக்தியை உணர்ந்திருந்தார். அதன் மத்தியில் விழிப்பாய் இருந்ததால், அதனை செயல்படுத்துவதில் பெரும் மகிழ்வும், நிறைவும் கொண்டிருந்ததால், அதனை இறை ஆசீரோடு செயல்படுத்த, இரவெல்லாம் செபித்தார். இன்று நாமும் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு இறைவன் கொடுத்த பொறுப்புகளின் வழியாக நாம் பெற்றிருக்கின்ற அதிகாரத்தை முதலில் உணர்ந்து வாழ்வோம்.

2. அதிகாரத்தை பயன்படுத்துதல்

                       இன்றைய முதல் வாசகத்தில் மோயீசன் தன்னுடைய அதிகாரத்தை பிறருக்காக பயன்படுத்துவதை பார்க்கின்றோம். இறைவன் தனக்கு கூறிய யாவற்றையும் அதிகாரத்தோடு மக்கள் நலம் பெற எடுத்துரைத்தார்இயேசு கிறிஸ்து தன்னுடைய அதிகாரத்தை குணமாக்குவதிலும், நற்செய்தியை அறிவிப்பதிலும் பயன்படுத்துவதை, அதிலும் மக்கள் வாழ்வு பெற பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இறைமகன் இயேசு அனைத்து அதிகாரங்களையும் தன் தேவைக்காக பயன்படுத்தாமல், மக்கள் வாழ்வு பெற  பயன்படுத்தியதால், நோய் நீங்கியதுஅனைத்தும் அவருக்கு அடி பணிந்ததுதீமைகளை அழித்தார். மோசே, ஆபிரகாம், ஈசாக்குதாவீது மற்றும் சாலமோன் என பழைய ஏற்பாடு தொடங்கி புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவால் தலைமைத்துவப் பணியில் அமர்த்தப்பட்ட சீடர்கள் வரை அனைவரும் தங்களுடைய அதிகாரத்தை தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்தாமல் அழைப்பின் நோக்கம் அறிந்து, பிறர் நலம் பெற செயல்படுத்த ஆர்வமாக இருந்தார்கள்விழிப்பாய் இருந்தார்கள்.நம் வாழ்வில் கிறிஸ்துவை முன்மாதிரியாகக் கொண்டு வாழ அழைப்பு பெற்ற நாம், நம்முடைய அதிகாரத்தை இறைவனைப் போல் பயன்படுத்தி வாழ்ந்தால் நாம் நல்ல ஆயனாக இருப்போம்

3. அதிகாரத்தால் தன்னை வெளிப்படுத்துதல்

                       மோயீசனின் அதிகாரம் அவரை ஒரு இறைவாக்கினராக வெளிப்படுத்தியது அதனால் தான் அவர் தன்னையே ஒரு "இறைவாக்கினர்" ஆக இன்றைய முதல் வாசகத்தில் சுட்டிக்காட்டுகின்றார். இறைமகன் இயேசு கிறிஸ்துவின் அதிகாரம் அவரை ஒரு இறை மைந்தனாக, இறைவனுடைய மகனாக வெளிப்படுத்திக் காட்டியது. ஆக ஒரு அதிகாரம் ஒருவரை இறைவாக்கினர் ஆகவும், நற்செய்தியில்  இயேசுவை இறைமகனாகவும் வெளிப்படுத்திக் காட்டுகின்றது. இன்று என்னுடைய அதிகாரம் என்னை ஒரு அரக்கனாக, ஆணவம் பிடித்தவனாக மற்றவர் மனதிலே வெளிப்படுத்திக் காட்டுகின்றதா அல்லது நேர்மையான உண்மையுள்ள தலைவனாக சுட்டிக் காட்டுகின்றதா என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.

நம் அன்றாட வாழ்வில் அதிகாரம்

            இன்று, நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் எண்ணற்ற விதங்களில்  நம்முடைய அதிகாரத்தை பெறுகின்றோம்.

. பதவியால் வரும் அதிகாரம்

எனக்கு கிடைக்கின்ற பதவிக்கு உண்டான சில பொறுப்புகள் சில அதிகாரத்தை உருவாக்குகின்றது. இது பதவியால் வந்த அதிகாரம்.

. பணத்தால் வரும் அதிகாரம்

         நான் சம்பாதிக்கின்ற பணம், சமுதாயத்தில் என்னை ஒரு உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லுகின்றது இதன் விளைவாக நான் சில அதிகாரத்தை கொண்டிருக்கின்றேன். எனக்கு கீழே இருக்கின்றவன் பணம் இருப்பதால் நான் சொல்வதைக் கேட்கின்றான். இது பணத்தால் வந்த அதிகாரம்.

. அறிவால் வரும் அதிகாரம்

        நான் நன்றாகப் படித்து அறிவில் சிறந்தவனாக இருப்பதால், என்னை மதித்து பலரும் இவன் ஒரு அறிஞர், இவன் கூறுவதை நாம் கேட்போம் என்று எனக்கு சில அதிகாரத்தை கொடுக்கின்றனர். என்னுடைய அறிவின் நிமித்தமாக நான் சில அதிகாரத்தை பெறுகின்றேன். இது அறிவால் வந்த அதிகாரம்.

. அனுபவத்தால் வரும் அதிகாரம்

   பல ஆண்டுகளாக ஒரு துறையில் நான் பணியாற்றிக் கொண்டிருப்பதன்  நிமித்தமாக நான் அதிகமான அனுபவங்களைக் கொண்டிருப்பதால் எனக்கு அதிகமான அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் தரப்படுகின்றது. இதன் நிமித்தமாக என்னிடையே அதிகாரம் தோன்றுகின்றது. பல விதமான அனுபவங்களை நான் பெற்றதாக என்னை மதித்து, என்னிடம் வருகின்றனர். எனக்குக் கீழே என்னுடைய அதிகாரத்தை கேட்க வருகின்றார்கள், இது அனுபவத்தால் வருகின்ற அதிகாரம்.

. தொடர்பால்/உறவால் வரும் அதிகாரம்

         சமுதாயத்தில் ஏற்கனவே உயர்ந்த நிலையில், அதிகாரத்தில் உள்ள ஒருவரை எனக்கு நன்றாக தெரியும். அவரோடு நான் நல்ல உறவில் மற்றும் தொடர்பில் இருக்கின்றேன். அவரை எனக்கு தெரிந்ததால் அவரிடமிருந்து சில காரியங்களை பெறுவதற்காக எனக்கு மதிப்பு கொடுத்து என்னிடம் வருகின்றனர். என் வழியாக அவர்கள் அவரிடம் செல்ல நினைக்கின்றார்கள். அப்போது எனக்கென்று சில அதிகாரம் என்னிலே உருவாக்கப்படுகின்றது இது தொடர்பால் மற்றும் உறவால் வரும் அதிகாரம்.

. கட்டாயத்தால் வரும் அதிகாரம்

      சிலரை கட்டாயப்படுத்தி சில பொறுப்புகளில் அமர செய்வார்கள்அந்த பொறுப்புகளின் நிமித்தமாக அவர் சில அதிகாரங்களை பெறுகின்றார்இது கட்டாயத்தால் வருகின்ற அதிகாரம் ஆனால் இத்தகைய அதிகாரங்கள் நிச்சயமாக முழுமை பெறுவதில்லை.

           அன்பார்ந்தவர்களே, நாம் எத்தகைய விதமான அதிகாரங்களை நம்முடைய வாழ்க்கையிலே பெற்றாலும், அந்த அதிகாரங்களை நான் என்னுடைய வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்துகிறேன் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். என்னுடைய அதிகாரம் மற்றவரை வாழ வைக்க வேண்டும், என்னுடைய அதிகாரத்தை நான் என்னுடைய வாழ்க்கையிலே உணர வேண்டும். எனக்கு இறைவன் தந்த அதிகாரத்தை  ஒரு தந்தையாக, தாயாக, பிள்ளையாக, தலைவனாக, ஆயனாக, சகோதரனாக மற்றும் சகோதரியாக உணர்ந்து, வாழ்ந்து, அதை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி, குறிப்பாக பிறருடைய நலனுக்காக அவர்கள் வளர முயல வேண்டும்இறுதியாக அதிகாரத்தின் வழியாக நாம் நம்மை வெளிப்படுத்த வேண்டும். நான் ஒரு நல்ல தந்தையாக, ஆசிரியராக, தலைவனாக, ஆயனாக, சகோதரனாக இருக்கின்றேன் என்பதை நம்முடைய அதிகாரத்தில் பிறருக்கு  வெளிப்படுத்துவோம். இறைமகன் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றி நாம் நம்முடைய வாழ்க்கையில் நாம் பெறுகின்ற அதிகாரங்களை உணர்ந்து, பிறர் வாழ்வுக்காக நாம் அதனைப் பயன்படுத்தி, நம்முடைய நிலையை பிறருக்கு வெளிப்படுத்துவோம்.

 

                                          Fr. குழந்தை யேசு ராஜன் CMF

                                                       கும்பகோணம்.