திருக்குடும்பத் திருவிழா
(ஆண்டு- B)
27-12-2020
ஞாயிற்றுக்கிழமை
திருக்குடும்பத்தின் முக்கனிகள்
வேடிக்கையாக இளைஞர்களின் வாழ்க்கை நிலையை நான்கு வகையாக கூறுவார்கள். அதில் திருமணத்திற்கு முன்பு இரண்டு பருவங்கள், திருமணத்திற்கு பிறகு இரண்டு பருவங்கள். முதலாவதாக ஸ்பைடர்மேன் பருவம், இது ஏறக்குறைய எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்க கூடிய ஒரு பருவம். இந்த பருவத்திலே பையனுக்கு வீட்டிலே இருக்க முடியாது, நண்பர்களிடையே ஊர் சுற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகம் வரும், மொபைல் மற்றும் சோஷியல் நெட்வொர்க் போன்றவற்றை பயன்படுத்துவதற்காக மனம் அலையும், வீட்டில் யார் எதைச் சொன்னாலும் கேட்க காது கொடுக்க இயலாத ஒரு பருவம், ஸ்பைடர் மேனை போல மனம் சுற்றி சுற்றி பல இடங்களுக்கும் செல்லுகின்ற ஒரு பருவம்.
இரண்டாவது பருவம் சூப்பர்மேன் பருவம். கல்லூரி படிக்கக்கூடிய காலத்திலே உருவாகும் ஒரு பருவம், காதல் வசப்படும் ஒரு பருவம், மோட்டார் சைக்கிளில் சுற்றி திரியும் ஒரு பருவம், வித்தியாசமாக முடி வெட்டி, அழகாக இருக்க வேண்டும், ஸ்டைலாக உடை அணியவேண்டும் என என்னும் ஒரு பருவம். சூப்பர்மேன் போல சுற்றுவதால் இதனை சூப்பர்மேன் பருவம் என்று கூறுவார்கள்.
திருமணத்திற்கு முன்பு இந்த இரண்டு பருவங்களை கடக்கின்ற போது மூன்றாவது பருவமான ஜென்டில்மேன் பருவத்திற்குள் நுழைகின்றோம். இது திருமணமான பிறகு உருவாகின்ற ஒரு பருவம். திருமணத்திற்கு முன்பு காலை 10 மணி வரை உறங்கிய ஒருவனை, திருமணத்திற்குப் பிறகு காலை 6 மணிக்கே எழ வைக்கும் பருவம். திருமணத்திற்கு முன்பு வித்தியாசமான ஸ்டைலான உடைகளை அணிந்த ஒருவன் திருமணத்திற்குப் பிறகு ஃபார்மலான உடைகளை அணிகின்ற பருவம். ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு முன்பு வீடு வந்து சேருகின்ற பருவம். பொறுப்பாக வேலை செய்து, தான், தன் குடும்பம் என்று வாழ்வது இந்த ஜென்டில்மேன் பருவம்.
இறுதியாக திருமணத்திற்குப் பின்பு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என எல்லாவற்றையும் அனுபவித்த பிறகு உருவாகுவது டாபர்மேன் பருவம் என்று கூறலாம். நாய்ப்படாத வாழ்க்கை, சோறு கேட்பதற்குக் கூட மனைவியிடம், பிள்ளைகளிடம் அஞ்சுகின்ற ஒரு நிலை, வேலைக்கெல்லாம் ஒய்வு கொடுத்து விட்டு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருக்கின்ற ஒரு பருவம், இந்த டாபர்மேன் (நாய்) பருவம்.
இவ்வாறாக மனிதனுடைய வாழ்வின் நிலையை திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு என வேடிக்கையாக இத்தகைய பருவங்களில் கூறினாலும், இது இன்றைய குடும்பங்களின் நிலையையும் அது நம் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றத்தையும் எடுத்துக் கூறுகிறது. திருமணம், திருமண வாழ்வு, குடும்பம் மற்றும் குடும்ப வாழ்வு என்றாலே அது ஒரு மகிழ்வற்ற வாழ்வு, பாதாள கிணறு மற்றும் கொலைக்களம் என்ற ஒரு மனநிலை ஏற்படுகிறது. நம் குடும்பங்களின் இத்தகைய நிலை மாற திருக்குடும்பமே நமக்கு முன்மாதிரியாக இருக்கின்றது, அதுவே நம் குடும்பங்களுக்கு முக்கனிகளை கொடுக்கின்றது.
இன்று நமது குடும்பங்களிலே திருக்குடும்பத்தின் இத்தகைய முக்கனிகள் காணப்பட வேண்டும். கிறிஸ்துவின் அன்பு என்னும் கனியும், அன்னை மரியாவின் பணிவு/ கீழ்ப்படிதல் என்னும் கனியும் மற்றும் யோசேப்பின் அமைதி என்னும் கனியும், இன்று நம்முடைய குடும்பங்களில் நிலவுகின்ற போது, நமது குடும்பங்கள் என்றும் குன்றின் மீது எரிகின்ற ஒளியாக அமையும்.
1. மரியாவின் பணிவு /கீழ்ப்படிதல்
அன்னை மரியாள் இன்று கீழ்ப்படிதல் என்னும் கனியை நம்முடைய குடும்பங்களுக்கு தருகிறார். "இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்" (லூக்கா. 1:38) என தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கீழ்ப்படிதலிலும் மற்றும் பணிவிலும் சிறந்து விளங்கினார். கிறிஸ்து பிறப்புக்கு பிறகு எகிப்துக்கு செல்ல வேண்டிய ஒரு சூழ்நிலையின் போது அன்னை மரியாள் தன்னுடைய கணவரான யோசிப்புக்கு கீழ்ப்படிந்து நடந்தார். அவர் அழைக்கின்ற இடத்திற்கெல்லாம் தன்னுடைய குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றதை பார்க்கின்றோம், இது அன்னையின் கீழ்ப்படிதலை நமக்கு எடுத்தியம்புகிறது. நம்முடைய குடும்பங்களில் இத்தகைய பணிவு/ கீழ்ப்படிதல் என்னும் பண்புகள் தேவைப்படுகின்றது. கணவருக்கு பணிந்திருக்க வேண்டும், கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று கூறுகின்ற போது இது வெறும் அடிமைத்தனம் அல்ல. மாறாக அர்ப்பணிப்பு உங்களுடைய வாழ்வில் ஒருவர் மற்றவருக்காக உங்களையே அர்ப்பணிப்பது. "திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள்.ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோருக்கு இதுவே தகும்".(கொலோசையர் 3:18) மேலும் "பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது." (எபேசியர் 6:1) என்னும் பவுலடிகளாரின் வார்த்தைக்கு ஏற்ப பணிவு நம் குடும்பங்களுக்கு அவசியமானது. "திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பது போல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும்". (எபேசியர் 5:24) மேலும் "பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்".(லூக்கா 2:51) என இறைமகன் இயேசுவும் நமக்கு முன் உதாரணமாக இருக்கின்றார். எனவே அன்னையின் வழியில் கீழ்படிதல்/பணிவு என்னும் கனியை நம் குடும்பங்களுக்கு எடுத்து கொள்வோம்.
2. சூசையின் அமைதி
"விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை" எனும் பழமொழிக்கேற்ப அமைதி நிலவ விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். "மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது". (1 பேதுரு 3:4) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் அமைதி மற்றும் விட்டுக் கொடுத்தல் இறைவனின் பார்வையில் விலை உயர்ந்தது. புனித சூசையப்பர் அமைதியானவராக, பொறுமையானவராக இருந்தார் என்பதை விவிலியம் நமக்கு சுட்டிக் காட்டுகின்றது. புனித சூசையப்பரின் வார்த்தைகள் விவிலியத்தில் காணப்படவில்லை, ஆனால் அவரின் அமைதி எண்ணற்ற வார்த்தைகளையும், நம் வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இறைவனுடைய வார்த்தைகளை அமைதியான முறையிலே அவர் ஏற்றதை பார்க்கின்றோம்.
நூலின் இரு புறத்தையும் இருவர் இழுத்துப் பிடித்துக் கொண்டே இருந்தால் நூலானது அறுபடும். திருமண வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் அப்படி தான், கணவனும் மனைவியும், பிள்ளைகளும் பெற்றோர்களும் நூலைப்போல தங்களுடைய வாழ்க்கையில் இருவரும் இரு புறத்தையும் பிடித்து இழுத்துக் கொண்டே இருந்தால், நூலானது அதாவது வாழ்க்கையானது அழிந்துபோகும். மாறாக ஒருவர் மற்றவர் விட்டுக் கொடுத்து வாழும் போது வாழ்க்கையானது ஒருபோதும் அறுபடாது. வாழ்க்கையை தொலைத்து நிற்கும் நமது குடும்பங்களுக்கு புனித சூசையப்பர் அமைதி என்னும் கனியை தருகின்றார். புனித சூசையின் அமைதி என்னும் கனியை நம்முடைய குடும்பங்களில் என்றுமே நிலவச் செய்வோம்.
3. கிறிஸ்துவின் அன்பு
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
ஒருமுறை ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் இணைந்து தன்னுடைய மகனுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இறுதியாக அவர்கள் தங்களுடைய மகனிடம் உனக்காக நாங்கள் ஒரு பெண் பார்த்து இருக்கின்றோம் என்று கூறுகின்ற போது, அவனோ எனக்கு திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றான். அப்பொழுது மனைவி கணவனிடம், பாருங்கள் பிள்ளைக்கு நம்மை விட்டு பிரிந்து போக மனமில்லை. நம்மீது எவ்வளவு அன்பு, திருமணமே வேண்டாம் என்று கூறுகின்றான் என்றாள். அதற்கு கணவனோ அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. காலை முதல் இரவு வரை நம்மிடையே நடக்கும் சண்டையை பார்த்து விட்டு தான் இவன் இப்படி சொல்கின்றான் என்றார். இதுதான் இன்று நம்முடைய குடும்பங்களின் நிலையாக இருக்கின்றது. குடும்பங்களை பற்றிய எண்ணங்களாக இருக்கின்றது. திருக்குடும்பமாக இருக்க வேண்டிய நம்முடைய குடும்பங்கள், தெரு குடும்பங்களாக, திருதிருவென்று விழித்துக் கொண்டிருக்கும் குடும்பங்களாக இருந்து கொண்டிருக்கிறது. நூலைப் போல சேலை, தாயைப் போல பிள்ளை என்று கூறுவார்கள். ஆனால், இன்று இத்தகைய பழமொழி நம்முடைய சமுதாயத்தில் அப்பா வட்டம் வட்டமாக சிகரெட் பிடித்தால், பிள்ளை மாவட்டம் மாவட்டமாக சிகரெட் பிடிப்பான் என்ற ஒரு நிலைக்கு தள்ளி காணப்படுகிறது. பெற்றோர்களைப் பார்த்து பிள்ளைகள் கற்றுக்கொள்ள கூடிய ஒரு சமுதாயத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
தனி மரம் தோப்பாகாது, தனிமனிதன் சமுதாயமாக மாற முடியாது. பலபேர் சேர்ந்து வாழ்ந்தால் அது குடும்பம் பல குடும்பங்கள் சேர்ந்து வாழ்ந்தால் அது சமுதாயம். எனவே, நாம் அனைவரும் ஒரே குடும்பமாக அதுவும் திருகுடும்பமாக வாழ, இன்று நாம் கொண்டாடும் திருக்குடும்ப திருவிழா நம்மை அழைக்கிறது.
"மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது." (மத்தேயு. 7:25) என்னும் இறைவார்த்தையின் அடித்தளத்தில் நம் குடும்பங்கள் என்றும் பாறையின் மீது கட்டிய வீடாக அமைய, மழை, காற்று மற்றும் வெள்ளம் என்னும் கஷ்டங்களின்றி நிலைத்து நிற்க திருக்குடும்பத்தின் கனிகள் நம் குடும்பங்களுக்கு அடித்தளமாக தேவைப்படுகிறது.
"இல்லறம் நல்லறமாகட்டும்"
"பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க"
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"
"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன"
"கூடி வாழும் குடும்பம் கோடி நன்மை பெறும்"
"நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்"
என்னும் குடும்பங்கள் சார்ந்த இத்தகைய பழமொழிகள் அனைத்தும், குடும்பத்தின் மேன்மையை நமக்கு எடுத்துரைக்கின்றன. துன்பத்தில் துடிக்கின்ற, வறுமையில் வாடுகின்ற, சந்தேகத்தில் சாகின்ற, அலைகடலில் அலைக்கழிக்கப்படுகின்ற குடும்பங்களாக நம்முடைய குடும்பங்கள் அல்லாது, திருக்குடும்பத்தின் மாதிரியை பின்பற்றி என்றுமே நிலைத்து நின்று கிறிஸ்துவின் வழியிலே வளர்கின்ற குடும்பங்களாக வளர திருக்குடும்பம் தரும் கனிகளை நம்முடைய குடும்பங்களில் நிலவச் செய்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.