Thursday, November 26, 2020

Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் -திருவருகைக் காலம் முதல் ஞாயிறு- (ஆண்டு- B)- 29-11-2020- ஞாயிற்றுக்கிழமை

 

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு
(
ஆண்டு- B)

29-11-2020

ஞாயிற்றுக்கிழமை


நில்... கவனி... செல்...
(இயேசுவுக்காக)




                        சாலையில் செல்வோருக்கு உதவவும், அவர்களின் பாதுகாப்பை கருதியும் ஆங்காங்கே சாலையில்  குறியீடு பலகைகள் வைக்கப்படுகின்றனசாலை குறியீடுகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை,


1.
கட்டாய குறியீடுகள்
2.
எச்சரிக்கை குறியீடுகள் 
3.
தகவல் குறியீடுகள்

என அழைக்கப்படுகின்றன. இதில்நில்... கவனி... செல்... என்பது கட்டாய குறியீடுகள். இத்தகைய கட்டாய குறியீடுகளை, நாம் சாலையிலே செல்லுகின்ற பொழுது, ஆங்காங்கே பார்த்திருப்பது உண்டு. நம்முடைய பாட பகுதிகளிலும் படித்திருப்பது உண்டு. இது வெறும்  சாலையைக் கடப்பதற்கு மட்டுமல்லாது, சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் நம்முடைய வாழ்க்கைக்கும் இவை கட்டாயமாக தேவைப்படுகின்றன. நம்முடைய வாழ்வின் முன்னேற்ற குறியீடுகளாக இவை நமக்கு அமைகின்றன. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும்  நில்... என நிதானமும், கவனி... என கவனமும், செல்... என  முன்னேற்றமும் நமக்கு  அடித்தளமாக தேவைப்படுகின்றது.   நம் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவை பின்பற்றுவதற்கு, கிறிஸ்தவ வாழ்வில் பயணிப்பதற்கு இவை அடித்தளமாகின்றன. திருஅவையின் புதிய திருவழிபாட்டு ஆண்டை துவங்கி, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பு பெருவிழாவிற்காக நம்மை தயாரிக்க திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம்இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள் நாம் நம்முடைய வாழ்க்கையில், நில் என்னும் நிதானத்தையும்கவனி என்னும் கவனத்தையும், செல் என்னும்  முன்னேற்றத்தையும் கிறிஸ்தவ வாழ்வின் கட்டாய குறியீடுகளாக ஏற்றுக் கொள்ள அழைப்பு தருகிறதுநில், கவனி மற்றும் செல் என்னும் இந்த மூன்று கிறிஸ்தவ வாழ்வின் குறியீடுகளும் கிறிஸ்துவோடு, கிறிஸ்துவுக்காக மற்றும் கிறிஸ்துவில் நாம் பயணிக்க பயன்பட வேண்டும்.


1. நில்...( நிதானம்)
              

 எதையும் எப்படியும் செய்யலாம் என்னும் நிலையில், இப்படி செய்தால் தான் வெற்றி என்ற உலகில், நாம் நாடி, தேடி, ஓடி சென்று கொண்டிருக்கின்றோம்நிற்க நேரமில்லாமல்திரும்பி பார்க்க கூட வழியில்லாமல் பயணித்து கொண்டிருக்கின்றோம்வந்த பாதை நிறைவை தந்திருக்கிறதா? வந்த பாதை வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறதா? என்று யோசித்துப் பார்க்க வாழ்வில்  நிற்க வேண்டும். நிதானத்தில் வாழ கற்றுக்கொள்ள  வேண்டும். "ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வதேன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியேன்?" என இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயாவின்  வரிகளுக்கு ஏற்ப நாம் நம் வழிகளிலிருந்து தவறாமல் இருக்க, நாம் இறைவனுக்கு அஞ்சி வாழவாழ்க்கையில் நிதானம் தேவைப்படுகின்றது. இத்தகைய நிதானமே நம்மை கவனத்தை நோக்கி அழைத்துச் செல்லும். கவனம் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும் வழி. கிறிஸ்துவை நாம் நம்முடைய வாழ்க்கையில்  ஏற்றுக்கொள்ள, அவர் வருகைக்காக  நம்மை தயாரிக்க, விழிப்பாயிருக்க, கவனமாயிருக்க, நாம் நம்முடைய வாழ்க்கையின் ஓட்டங்களிலிருந்து நிற்க நமக்கு நிதானம் தேவைப்படுகிறது. தாவீது கோலியாத்தை கண்டு பயப்படாமல்  நிதானமாக சிறு குழாங்கல்லின் துணை கொண்டு  கோலியாத்தை வெல்ல முற்பட்டதால் இறுதியில் வெற்றி மன்னராக முடிசூட்டப்பட்டார்.

          "
தானத்தில் சிறந்தது நிதானம்" என்னும் சொல்லாடலுக்கு ஏற்ப, நிதானமாக ஒரு செயலை செய்யும் பொழுது, அது நமக்கு மகிழ்வைத் தருகின்றதுஒவ்வொரு சூழலிலும் நிதானத்தைக் கடைப்பிடித்தால்வாழ்வின் கேள்விகளுக்கு விடையைக் கண்டுபிடித்து விடலாம். நிதானம் பொறுமை போன்றது, நிதானம் தியான உலகிற்கு அழைத்துச் செல்கின்றதுதியான மன நிலையில் உள்ளவர், நிதானமாக செயல்படுகின்றார். நிதானமாக செயல்படுகின்றவர்தியான நிலையை அடைகின்றார்நம் வாழ்விலும் நிதானம் தேவை  எனவே ஒரு சொல்லை சொல்லு முன்ஒரு செயலை செய்யும் முன் நமக்கு நிதானம் தேவை. வாழ்வின் ஓட்டங்களுக்கு மத்தியில் வாழ்வின் கேள்விகளுக்கு ஒன்றுக்குப் பலமுறை நிதானமாக தியான மனநிலையோடு முடிவு எடுப்போம்.


2. கவனி... (கவனம்)


      "கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள்" வீட்டுத் தலைவர் வருகின்ற நேரம் எவருக்கும்   தெரியாது. எனவே  கவனத்தோடு வாழ இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு தருகிறது.   கவனம் தான் நம்மை வாழ்க்கையில் கிறிஸ்துவோடு செல்ல  அடித்தளமாக அமைகிறது. கிறிஸ்துவின் வருகைக்காக நம்மை தயாரிக்க, நமக்கு மிக முக்கிய குறியீடாக  கவனம் அமைகின்றதுகண்ணை திறந்து இருப்பவரெல்லாம் விழிப்பாயிருக்கிறார்கள் என்பதல்ல, பலர் கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலும் தன்னுடைய உணர்வில், சிந்தனையில் மற்றும் சுற்றுப்புற சூழலில் விழிப்பாய் இருக்கின்றனர். அவரே வாழ்வில் நேரத்தையும் விவேகத்தையும் கண்டடைகிறார். வாழ்வில்  நாம் கவனமாக இல்லாவிட்டால் தோல்வியை தழுவ நேரிடும்விடாமுயற்சியோடு கூடிய கவனம் தான் வெற்றியைத் தரும் வாழ்வின் பல அரசர்கள் போரில் தோற்றுப் போனதற்கு காரணம் ஒரு சிறிய கவனக்குறைவு. செல்லுகின்ற கடக்கின்ற ஒவ்வொரு வினாடியையும் கவனித்துக் கொண்டே காடு, மேடு, பள்ளம், இருள், வெளிச்சம், ஆழம், அகலம் மற்றும் நீளம் என முன்னோக்கிய சிந்தனை கொண்டு  எதையும் கவனத்தோடு செய்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
 

 3. செல்... (முன்னேற்றம்)


நில் என்னும் நிதானம், கவனி என்னும் கவனம் இவை இரண்டையும் அடைந்து மூன்றாம் நிலையாக செயலில் இறங்க வேண்டும்.  "நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப் பெற்று சொல்வன்மையும் நிறையறிவும் பெற்று, எல்லாவற்றிலும் செல்வீர்களானீர்கள். மேலும் கிறிஸ்துவைப்பற்றிய சான்று உங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது." என  இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளாரின் வார்த்தைக்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையில் நிதானித்து, கவனமாயிருந்து, விழிப்பாயிருந்து மற்றும் கவனித்து இயேசுவோடு நாம் பயணிக்க, செல்ல மற்றும் அவரில் முன்னேற வேண்டும்.

         அன்பார்ந்தவர்களே, மாறிவரும் இந்த மாய உலகில், நாம் நமது கிறிஸ்தவ வாழ்வை சற்று உற்று நோக்குவோம். பணம், பொருள், பட்டம், பதவி என்னும் வாழ்க்கையின் ஓட்டங்களிலிருந்து சற்று நின்று நிதானத்தோடு நமது வாழ்க்கையை உற்றுநோக்குவோம். இந்த நிதானம் நம்மை கவனத்தில் உட்படுத்தும். கவனத்தோடும் விழிப்போடும் நாம் இருக்கின்ற பொழுது நாம் நம் நிலையை அறிவோம். கிறிஸ்து நம்மில் இருக்கின்றார் என்பதை உணர்வோம். அவர் நம்மில் வளர நம்மை நாம் தயாரிப்போம். அதுதான் இந்த திருவருகைக்காலம் நமக்குத் தருகின்ற அழைப்பு. அத்தகைய அழைப்போடு நாம் நம்மை தயாரிக்கின்ற பொழுதுகிறிஸ்துவோடு நாம் தொடர்ந்து பயணிக்க, கிறிஸ்துவோடு செல்ல நம்முடைய தயாரிப்பு நமக்கு வழிவகை செய்யும். அத்தகையோராய் நிதானமும், கவனமும் கொண்டு நாம் இயேவை கண்டுணர, அவர் வருகைக்காய் நம்மை தயாரிக்க, அவரில் வாழ, அவரோடு செல்ல ஜெபிப்போம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்

 

 

 

 

 

 

 

 

Fr. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்.