Saturday, October 31, 2020

Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் -01-11-2020 - அனைத்து புனிதர்கள் பெருவிழா

நவம்பர் -1

அனைத்து புனிதர்கள் பெருவிழா


இறைவனை பிரதிபலிக்கும் வாழ்வே - புனித வாழ்வு



இன்று தாயாம் திரு அவையானது அனைத்து புனிதர்களின் பெருவிழாவை கொண்டாடுகின்றது. கண்ணாடி நம்மை பிரதிபலிக்கும், நாம் இறைவனை பிரதிபலித்தால் நம் வாழ்வு புனித வாழ்வு, நாம் புனிதர்கள்நாம் கொண்டாடும்   புனிதர்கள் விழா நம்மையும் இறைவனை பிரதிபலிக்கின்ற ஒரு வாழ்வை, புனித வாழ்வை வாழ அழைப்பு தருகின்றது.

வரலாற்றுப் பின்னணி:

            நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றியவர்களைகடுமையாக வேதகலாபனைக்கு உட்படுத்தி, இறைமகன் இயேசு கிறிஸ்துவுக்காக யார் யாரெல்லாம் உயிர் துறந்தார்களோ, அவர்கள் விசுவாச சாட்சியாக மாறினார்கள் என ஒரு சிறிய அளவிலே விழாவானது  கொண்டாடப்பட்டது. ஆறாம் நூற்றாண்டிலேயே திருத்தந்தை நான்காம் போனிஃபாஸ் ரோம் நகரில் இருந்த  அனைத்து கடவுளின் கோயிலை இடித்து தள்ளி அந்த இடத்தில் யார் யாரெல்லாம் கிறிஸ்துவுக்காக இறந்தார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய விசுவாசத்திற்காக ஆலயம் ஒன்றை கட்டினார். திருஅவையில் நிலவிய பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளியாக  கி.பி 387 -ஆம் ஆண்டு நிசயாவில் இரண்டாவது பொதுச்சங்கம் கூட்டப்பட்டது. இதில் புனித உருவங்களை நாம் பார்க்கும்போது இவைகள் எந்த ஆட்களை குறிக்கின்றனவோ அவர்களை நினைவுபடுத்துகின்றன என்றும், அவர்களை நினைத்துக் கொள்வதனால் அவர்களை பின்பற்ற நாம் முயல்கின்றோம் எனவும், அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம் என்னும் விளக்கம் கொடுக்கப்பட்டது.
கி.பி. 993 ஆம் ஆண்டிலிருந்து இவ்விழா உலகம் முழுவதும் நவம்பர் ஒன்றாம் தேதி அனைத்து புனிதர்கள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.    கி.பி. பத்தாம் நூற்றாண்டில் உரோமையில்  இரவு ஜெபத்தோடு உபவாசமிருந்து கொண்டாடப்பட்டது. இவ்வாறாக திருச்சபை வரலாற்றில் இப்பெருவிழா முக்கிய இடம் பெற்றது.

இன்று நாம் புனிதர்களின் பெயர்களை சொல்ல சொன்னால், எத்தனை பெயர்களை உச்சரிப்போம்? இருபது, முப்பதுஅதிகபட்சம் 50 தான். திரு அவையிலே எண்ணற்ற புனிதர்கள் இருக்கின்றார்கள், ஆண்டிற்கு ஒரு நாளாக 365 நாளில், வெறும் 365 புனிதர்களை மட்டுமே நாம் நினைவு கூற முடியும் என்பதை உணர்ந்த தாயாம் திருஅவையானது அனைத்துப் புனிதர்களை நினைவு கூற, அனைத்துப் புனிதர்களின் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றது.
புனிதர்களாக யாரும் பிறப்பதில்லை, மனிதர்களாக பிறந்து, புனித நிலைக்கு தங்களை மாற்றிக் கொண்டவர்கள் தான் புனிதர்கள்.


விழுந்து எழுந்தவர்கள்- புனிதர்கள்:

 "புனிதர்கள் சரியாக தொடங்கவில்லை என்றாலும், சரியாக முடித்தவர்கள்" என்கின்றார் புனித ஜான் மரிய வியான்னி. மனிதனாகப் பிறந்து, மனித பலவீனதில் எண்ணற்ற பாவங்களை செய்தாலும், மனித சுயநலத்தோடு வாழ்ந்தாலும், வாழ்க்கையில் விழுந்து விட்டோமே என உணர்ந்து மீண்டும் எழுந்தவர்கள் தான் இந்த புனிதர்கள். தாங்கள் விழுந்த பாவம் என்னும் பள்ளத்திலிருந்து மீண்டும் எழுந்தவர்கள் இவர்கள். புது வாழ்வை இறை துணையோடு தொடங்கியவர்கள். புனிதர்கள் விழுந்து எழுந்தவர்கள்.

விசுவாசத்தில் நின்றவர்கள்- புனிதர்கள்:


         வாழ்வின் எத்தகைய ஒரு சூழலிலும், காற்றடித்தாலும், பெருமழை பெய்தாலும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும், எத்தகைய துன்பங்கள் வந்தாலும், இறுதிவரைக்கும் இறை விசுவாசம் என்னும் நங்கூரத்தில் ஊன்றி நின்றவர்கள் இந்த புனிதர்கள்.

எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்ந்தவர்கள்- புனிதர்கள்:

  தூய்மையான நீரில் தெரியும் முகம் போல வாழ்நாள் முழுவதும்  கிறிஸ்துவை பிரதிபலித்து, தங்கள் வாழ்வில் பிற பிறருக்கு முன்மாதிரியான ஒரு எடுத்துக்காட்டான வாழ்வை வாழ்ந்தவர்கள். இவர்களை பார்க்கின்ற போது கிறிஸ்துவை பின்பற்ற வேண்டும், இறை விசுவாசத்தில் வளரவேண்டும் என ஒவ்வொருவரையும் தூண்டி எழுப்புகின்றவர்களாக  வாழ்ந்தவர்கள் புனிதர்கள். அதனால்தான் புனிதர்களின் பின்பற்றி புனிதர்களான பல மனிதர்கள் இன்றைய திருஅவையில் பிரசன்னமாகி இருக்கின்றார்கள்.

இறைவனிடம் பரிந்து பேசுபவர்கள்- புனிதர்கள்:

பகலில் தத்தளிக்கின்றன படகாய் நடுக்கடலில் நாம் தவிக்கின்ற போதெல்லாம் நம்மை  இறைவனிடம் அழைத்துச் செல்லும் துடுப்புகளாக இருக்கின்றவர்கள் நம் புனிதர்கள். இறைவனிடம் நமக்காக பரிந்து பேசி நம் பாவக்கறைகளைக் கழுவி மீட்பு என்னும் கரையில் சேர்ப்பவர்கள் இவர்கள்.


          இத்தகைய புனிதர்களை பின்பற்றி, நாமும் புனித வாழ்வு வாழ இன்றைய இறைவார்த்தை நமக்கு வழி வகையை எடுத்துரைக்கின்றது. நற்செய்தியில் இறைமகன் இயேசு கிறிஸ்து மலைப் பொழிவில் எட்டு விதமான உள்ளங்களை பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றார். இத்தகைய உள்ளங்களும், அதன் பண்புகளும், நம்மை புனித வாழ்வுக்கு தயார்படுத்தும்.


1.
ஏழையரின் உள்ளம் (எளிமை)
2.
துயருறுவோரின் உள்ளம் (துயரம்)
3.
கனிவுடையோரின் உள்ளம் (கனிவு)
4.
நீதிக்காக ஏக்கம் கொண்ட உள்ளம் (நீதி)
5.
இரக்கம் கொண்ட உள்ளம் (இரக்கம்)
6.
தூய்மையான உள்ளம் (தூய்மை)
7.
அமைதி ஏற்படுத்தும் உள்ளம்  (அமைதி)
8.
நீதியின் பொருட்டு துன்புறும் உள்ளம் (சாட்சியம்)


         புனிதர்களின் சமூக உறவை நான் நம்புகிறேன் என்று நமது நம்பிக்கை அறிக்கையில் நாம் அறிக்கையிடுவதை போல, நாமும் இந்த புனிதர்களின் சமூக உறவில் இணைந்து, இந்த புனிதர்களை போலஇறைவனை பிரதிபலிக்கின்ற புனித வாழ்வை  வாழ, இந்த விழாவானது நமக்கு அழைப்பு தருகின்றது. அவனும் அவளும் புனிதராக/புனிதயாக மாறும் போது, ஏன் நான் மட்டும் மாற கூடாது என்னும் புனித அகுஸ்தினாரின்  வார்த்தைக்கு ஏற்ப நாமும் புனித வாழ்வு வாழ்வோம். இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பார்.

 

 

 

 

 

 

 

 

Fr. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்.