Saturday, August 29, 2020

Tamil Sunday Homily -தமிழ் ஞாயிறு மறையுரைகள் - 30-08-2020 - பொதுக்காலம் 22ஆம் வாரம் ( ஆண்டு- A)

 

பொதுக்காலம் 22ஆம் வாரம்
(
ஆண்டு- A)

30-08-2020

ஞாயிற்றுக்கிழமை

 

 

நேர்மறையான எண்ணத்தில் வளர்வோம்

(இறை எண்ணமும் - மனித எண்ணமும்)


 

ஜென் குரு ஒருவர் ஊர் மடத்தில் வந்து தங்கியிருந்தார். ஊர்க்காரர் ஒருவர் அவரைத் தேடி வந்து, குருவே என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை. என் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தார் அனைவரும் எல்லாம் வாழ்க்கையில் முன்னேறி விட்டனர். ஆதனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு வழி சொல்லுங்கள் என்றார். துறவி அவரிடம் சில கேள்விகளை கேட்டார். என்ன வேலை செய்கிறீர் என கேட்க, கூலி வேலை என்றார். வருமானம் எவ்வளவு என கேட்க போதுமானது இல்லை என்றார். வேறு வேலை பார்க்க வில்லையா என கேட்க, பயமாக இருக்கிறது, முதலாளி எப்படி இருப்பாரோ என்றார்சுயதொழில் செய்யவில்லையா? என கேட்க பயமாக இருக்கிறது, வருபவர் என்னை ஏமாற்றி விடுவார்களோ, நான் போட்ட பொருளை எல்லாம் இழந்து விடுவோமோ என்று கூறினார். குரு சற்றே யோசித்தார். ஊர்க்காரர் என்ன செய்ய வேண்டும் குருவே சொல்லுங்கள் என்றார்.

 குரு சற்றே யோசித்தவராய், இன்று ஒரு இரவு மட்டும் நீ குரங்கைப் பற்றி நினைக்காதே என்று கண்டிப்பாய் சொன்னார். சரி என்று சொல்லிவிட்டு சென்ற அந்த மனிதர்செல்லுகின்ற வழியெல்லாம்  நினைத்ததோ குரங்கைப் பற்றி தான். ஏன்? குரு குரங்கைப் பற்றி நினைக்க வேண்டாம் என்று கூறினார் என்று சிந்தித்துக் கொண்டே சென்றான். அன்று இரவு வரை அவனுடைய சிந்தனையெல்லாம் அதைப் பற்றி தான் இருந்தது.

அன்று இரவு அவன் உறங்குவதற்கு முன்பும் அவனுக்கு குரங்கைப் பற்றிய எண்ணம் தான் வந்தது. குரங்கு அவன் அருகில் வருவதைப் போலவும், அவனது வீட்டு ஜன்னல் வழியாக அவனைப் பார்ப்பது போலவும் கதவை கீறுவது போலவும், தட்டுவது போலவும்  எண்ணம் அவனுக்கு ஏராளமாக வந்தது. இப்படியே அவன் குரங்கை வெறுக்கின்ற ஒரு சூழ்நிலைக்கு வந்தான். இறுதியாக களைப்பாகி உறங்கினான், ஆனால் அவனுக்கு கனவில் கூட வந்தது இந்த குரங்கு தான்.

 விடிந்ததும் முதல் வேலையாக அவன் அந்த குருவை நோக்கிச் சென்றான். குருவே, இந்த குரங்கிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள். சென்ற ஜென்மத்தில் இந்த குரங்கிற்கு நான் எதோ செய்து இருக்கிறேன் என்று அவன் குருவிடம் முறையிட்டான்நான் என்னுடைய வாழ்க்கையில் முன்னேற கூட தேவையில்லை, இந்த குரங்கிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என்றான். குருவோ, அவனிடம் நீ எந்த குரங்கையும் தொந்தரவு செய்யவில்லை. உனக்கும் குரங்குக்கும் சம்பந்தம் இல்லை, நிம்மதி கொள் என்றார்.மேலும், உன் எண்ணங்களுக்கு நீயே அதிபதி உனக்கு எது தேவையோ அதை நினை. உனக்கு எது தேவையில்லையோ அதை நினைக்காதே. உன் வாழ்க்கையில் நீ சிந்திக்க கற்றுக் கொள். குரங்கு உனக்கு தேவையில்லாத ஒன்று, அதைப் பற்றி நினைக்க வேண்டாம் என்று கூறியும் நீ அதைப் பற்றி நினைத்திருக்கின்றாய். உன் எண்ணமெல்லாம் அதுவாகவே இருந்திருக்கிறது. அதை பற்றி நினைக்கும் போது தான் அது உனக்கு தவறாக  மாறியிருக்கிறது. ஆக, நேர்மறையான எண்ணங்களை நீ வளர்க்கின்ற  பொழுது அது உன்னை பலப்படுத்தும்எதிர்மறையான எண்ணங்களை நீ நினைக்கின்ற பொழுது அது உன் வாழ்வை பாதிக்கும்.

 இன்றைய இறைவார்த்தை வழிபாடும் நாம்  நேர்மறையான எண்ணங்களோடு வாழ வேண்டும் என்ற ஒரு அழைப்பை நமக்கு தருகின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய இறப்பைப் பற்றி முன் அறிவிக்கும்  பொழுது, பேதுரு அவரைத் தனியாக அழைத்து இவை நடக்கக்கூடாது என்று கூறுவது பேதுருவின் குறுகிய எண்ணத்தை சுட்டிக்காட்டுகின்றது. இறைவனுடைய மீட்பு திட்டத்திற்கு தடைக்கல்லாக இருக்கின்ற பேதுருவின் எதிர்மறையான எண்ணம் இது.

 மனித எண்ணம்:

            பேதுரு மனித எண்ணத்தோடு சிந்திப்பதை பார்க்கின்றோம். மனித எண்ணத்தின் பண்புகளான புரிந்து கொள்ளாமை, எதிர்மறை எண்ணம், அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளும் எண்ணம் என இவையனைத்தும் பேதுருவில் இருப்பதைப் பார்க்கின்றோம். மீட்பு திட்டத்தை புரிந்து கொள்ளாமல்துன்பத்தை ஏற்காமல், இறை சித்தத்திற்கு பணியாமல் நடக்கின்ற ஒன்றை பார்க்கின்றோம். இது எதிர்மறையான எண்ணம், நேர்மறையான எண்ணம் அல்ல.

 இறை எண்ணம்:

இறைமகன் இயேசு கிறிஸ்துவினுடைய எண்ணம் இறை எண்ணமாக இருக்கிறது. இறை எண்ணத்தில், இறைச்சித்ததிற்கு ஏற்றவாறு நடக்கவேண்டும், துன்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், பிறரைப் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் ஆன்மாவை வளப்படுத்த உழைக்க வேண்டும் எனும் பண்புகள் அடங்கியிருக்கும். இறை எண்ணம் நேர்மறையான எண்ணங்களாக இருக்கும். இறை எண்ணம் நேர்மறையான எண்ணங்களாக மட்டுமல்லாது வளர்ச்சி மிகுந்த எண்ணமாகவும் இருக்கும்.

இன்றைய முதல் வாசகத்தில் "ஆண்டவரே நீரே என்னை ஏமாற்றிவிட்டீர்" என்பது எதிர்மறையான  எண்ணத்தை எடுத்து இயம்புகிறது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் "கடவுளின் திருவுளம் எது என தேர்ந்து தெளிவீர்கள்" என்பது  நேர்மறையான எண்ணத்தை நமக்கு எடுத்தியம்புகிறதுநாம் நம்முடைய வாழ்க்கையில் நேர்மறையான எண்ணத்தோடு வாழ்கின்றோமா? அல்லது எதிர்மறையான எண்ணத்தோடு வாழ்கின்றோமா?  சிந்திப்போம்.

 ஆம் அன்பார்ந்தவர்களே, நாம் எதை எண்ணுகின்றோமோ, அதுவாகவே தான் நாம் மாறுகின்றோம். எண்ணங்கள் நம் வாழ்க்கையை மாற்றக்கூடியது. நம் எண்ணங்கள் சக்தி வாய்ந்ததாக இருக்கின்றதுநிஜத்தை விட, நம் நினைவிற்கு சக்தி அதிகமாக இருக்கின்றது. கனவு, எண்ணம், செயலாக்கம் இவை மூன்றும் தான்நான் ஒவ்வொருவருக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடிய தாரக மந்திரம் என்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் கூறுகின்றார். நம்முடைய வாழ்க்கையிலும், நாம் நம்முடைய எண்ணங்களை வலுப்படுத்தி, அதிலும் நேர்மையான எண்ணங்களை உருவாக்கிஇறைமகன் இயேசுவின் எண்ணமாம் இறை எண்ணத்தோடு, நேர் மறையான எண்ணத்தோடு, நம்முடைய வாழ்க்கை பயணத்தை தொடர்வோம். நம்முடைய எதிர்மறையான எண்ணங்களை, மனித எண்ணங்களை அகற்றி விட்டு, நேர்மறையான  எண்ணத்தோடு வாழ்வோம்

                                        இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

 

Fr. குழந்தை யேசு ராஜன் CMF

கும்பகோணம்.